Skip to main content

அமித்ஷா,கவர்னர் சந்திப்பில் நடந்த விவாதங்களை அறிந்து அதிர்ந்து போன எடப்பாடி!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

ஒற்றைத் தலைமை குறித்து அ.தி.மு.க.வில் எதிரொலித்த கலகக்குரல்களை சாதுர்யமாக தடுத்ததில் மகிழ்ச்சியடைந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை, டெல்லியிலிருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்ட கட்டளைகள் அவரை தூங்கவிடவில்லை என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக கவர்னர் பன்வாரிலாலும், தமிழக அமைச்சர்கள் தங்கமணி-வேலுமணியும் ஒருநாள் இடைவெளியில் அடுத்தடுத்து சந்தித்த நிகழ்வுகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பில் நடந்த விவாதங்களை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
 

eps



இந்த சந்திப்புகள் குறித்து மத்திய உளவுத்துறையுடன் நெருக்கமாக இருக்கும் தமிழக உள்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, அமித்ஷா-பன்வாரிலால் சந்திப்பில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம், தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து அமித்ஷா கேட்டபோது, "தமிழகத்தில் அரசு என ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. குறிப்பாக, தற்போது தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சனை குடிநீர். எங்கு பார்த்தாலும் தண்ணீர் பிரச்சனை மிக மோசமாக இருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு இயந்திரம் சுத்தமாக இயங்கவில்லை. அதேபோல சட்டம் ஒழுங்கை பாதிக்கும் அத்தனை கிரிமினல்தனங்களும் தடையின்றி நடக்கிறது. அவற்றை தடுப்பதில் அமைச்சர்களோ அதிகாரிகளோ அக்கறை காட்டுவதில்லை. முதல்வர் தொடங்கி ஒவ்வொரு அமைச்சரும் டெண்டர் விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தலைமைச்செயலகம் வரும் அமைச்சர்கள், தங்கள் சீட்டில் உட்கார்ந்ததுமே காண்ட்ராக்ட் விசயத்தில்தான் தீவிரம் காட்டுகின்றனர். ஊழல்கள் அதிகரித்து விட்டன. ஆட்சியாளர்களுக்கு இணையாக உயரதிகாரிகளும் ஊழல்களில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். தமிழக அரசு இயந்திரத்தின் எதார்த்த நிலை இதுதான்' என விவரித்திருக்கிறார் கவர்னர்.

 

governor



இதனை உன்னிப்பாக கவனித்த அமித்ஷா, "எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொடுத்த ஊழல் பட்டியல்களின் உண்மைத்தன்மை குறித்து ஒரு ரிப்போர்ட் வேண்டுமென கடந்த காலங்களில் கேட்டிருந்தோம். நீங்களும் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். அது தற்போது உங்களிடம் இருக்கிறதா?' என கேட்க, இருப்பதாக சொன்ன கவர்னர், சென்னையிலிருந்து எடுத்து வந்திருந்த கோப்புகளின் நகல்களை அமித்ஷாவிடம் கொடுத்திருக்கிறார். மொத்தம் 36 துறைகளில் 24 துறைகள் சார்ந்த ஊழல்கள் விரிவாக அதில் விவரிக்கப்பட்டிருந்தன. அப்போது, "எடப்பாடி அரசை உன்னிப்பாக கவனித்து வாருங்கள். வெளிநாடு சென்றுள்ள பிரதமர் டெல்லி திரும்பியதும் சில அசைன்மெண்ட்டுகள் கொடுக்கப்படும்' என்றிருக்கிறார் அமித்ஷா.

  eps



இதனைத் தொடர்ந்து, "7 பேர் விடுதலையில் நீதிமன்றம் நிறைய கேள்விகளை எழுப்புவதால், சில விளக்கங்களை அரசு தரப்பிலிருந்து கேட்கின்றனர்' என கவர்னர் சொல்ல, "அந்த விவகாரத்தில் பாசிட்டிவ் சிக்னல் தரும் சூழல் இருக்கிறது. ஆனால், உள்துறை அதிகாரிகள் சில காரணங்களைச் சொல்லி எதிர்மறையாக விவாதிக்கிறார்கள். அதனால், பிரதமரிடம் ஆலோசித்த பிறகு உங்களுக்கு அறிவுறுத்தப்படும்' என்றிருக்கிறார் அமித்ஷா. இதனையடுத்து, பொதுவான அரசியல் சூழல்களை விவாதித்துவிட்டு அனுப்பி வைக்கப்பட்டார் கவர்னர்'' என்கின்றனர் கோட்டை அதிகாரிகள்.

 

minister



அமித்ஷா - பன்வாரிலாலின் சந்திப்பில் நடந்ததை அறிந்து கொள்ள துடியாய் துடித்துள்ளார் எடப்பாடி. அதேசமயம், கவர்னரின் சந்திப்பை அடுத்து மறுநாள் டெல்லிக்கு விரைந்தனர் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும். அமித்ஷாவை இவர்கள் சந்திப்பதற்கு முன்பு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி சந்திப்பு நடந்தது. தமிழக அரசை கவனிக்கும் பொறுப்பு பியூஷ் கோயலிடம் இருப்பதாலேயே அவரை முதலில் சந்திக்க சொல்லியுள்ளனர். (டெல்லியில் பியூஷ் கோயலை அ.தி.மு.க. விவகாரத்துறை அமைச்சர் என செல்லமாகச் சொல்கிறார்களாம்). தமிழக திட்டங்களை குறித்தும், கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவது குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தும் கோரிக்கை மனுவை பியூஷ்கோயலிடம் தந்தார் தங்கமணி.

 

bjp



கோரிக்கை மனுவை வாங்கி சம்பிரதாயத்துக்காக சில பக்கங்களைப் புரட்டி பார்த்து விட்டு, அவர்களிடம், "தேர்தலில் பா.ஜ.க. தோல்விக்கு நீங்கள்தான் (அ.தி.மு.க.) காரணம் என கோபத்திலிருக்கும் அமித்ஷா, பா.ஜ.க. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் என்ன நடந்தது என முழுமையான ரிப்போர்ட்டை எடுத்து வைத்திருக்கிறார். அவரை நீங்கள் ஏமாற்ற முடியாது. எங்களுக்கு நீங்கள் துரோகம் செய்திருக்கிறீர்கள்' என கடுமையாக சொல்ல, பல உதாரணங்களைச் சொல்லி அவரை சமாதானப்படுத்த தங்கமணியும் வேலுமணியும் முயற்சித்தனர். ஆனால், பியூஷ் கோயல் சமாதானமாகவில்லை'' என்கின்றனர் டெல்லி சோர்ஸ்கள்.