Skip to main content

அழிமீன் திருவிழா அமெரிக்காவிலும் நடக்கிறது! 

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

Fish Festival is happening in the United States too!

 

புதுக்கோட்டை மாவட்டம், ஜல்லிக்கட்டில் மட்டுமல்ல அழிமீன் திருவிழாவிலும் மாநிலத்திலேயே முதலிடம் தான். பாசன கண்மாய், ஏரிகள் போன்ற நீர்நிலைகளை ஆண்டுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய தண்ணீர் வற்றும் நேரத்தில் அரசாங்கமே மீன் பாசி ஏலம் விடுவது வழக்கம். பல கிராமங்களில் கண்மாய்களில் தண்ணீர் நிறைந்ததுமே ஏலம் எடுத்து மீன் வளர்ப்பதும் வழக்கமாக உள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, விராலிமலை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏரி, கண்மாய்களில் மழைத் தண்ணீர் நிரம்பியதும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பாசனதாரர்கள் தங்கள் பாசன கண்மாய்களில் மீன் உள்ளதா என்பதை பார்த்து மீன் இல்லை என்றால் மீன் குஞ்சுகளை வாங்கி கண்மாயில் விடுவதும் பல ஊர்த் தலைவர்கள், ஊராட்சித் தலைவர்கள், ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் மீன் குஞ்சுகளை வாங்கி கண்மாயில் விடுவதும் உண்டு.

 

Fish Festival is happening in the United States too!

 

மழைத்தண்ணீரால் ஒரு கண்மாய் நிறைந்து தண்ணீர் வெளியேறி அதிலிருந்து மற்றொரு கண்மாய்க்கு தண்ணீர் போகும் போது மீன்களும் அடுத்தடுத்த கண்மாய்களுக்கு போகிறது. இப்படி வளரும் மீன்களை பொன்னமராவதி, திருமயம், விராலிமலை, சிவகங்கை மாவட்ட கிராம மக்கள் ஏலம் விடுவதில்லை. மாறாக அந்த மீன்களை கிராம மக்களே பிடித்து செல்ல மீன்பிடி திருவிழாவை நடத்துகிறார்கள்.


ஒரு கிராமத்தில் மீன் பிடி திருவிழாவுக்காக நாள் குறித்துவிட்டால் அந்த கிராம மக்கள் பக்கத்து ஊரில் உள்ள உறவுகளுக்கெல்லாம் அழைப்பு கொடுத்து வரவழைப்பார்கள். பிடிக்கப்படும் மீன்களை சமைத்து உறவுகளுக்கு விருந்து படைக்கின்றனர். 


இது குறித்து பொன்னமராவதி பகுதி இளைஞர்கள் கூறும் போது, “தமிழ்நாட்டிலேயே பொன்னமராவதி சுற்றுவட்டார கிராமங்களில் தான் காலங்காலமாக அதிகமான கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடக்கும். இப்ப பல மாவட்டங்களுக்கும் பரவியதோடு அமெரிக்காவில் ஒரு நகரில் பொன்னமராவதி நகரத்தார்கள் இணைந்து ஒரு குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்தி இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

 

Fish Festival is happening in the United States too!

 

அழிமீன் திருவிழா என்பது தான் மீன்பிடி திருவிழா என்று சொல்கிறோம். அதாவது மழை பெய்யும் போது கண்மாய்களை சுத்தமா வைத்திருந்தால் தான் தண்ணீரை நிரப்பி விவசாயம் செய்யலாம். அதுக்கு ஒவ்வொரு வருசமும் கண்மாய்களை சுத்தம் செய்யணும். பாசனம் முடிஞ்ச பிறகு கண்மாயில் தண்ணீர் வற்றத் தொடங்கும் போது கண்மாயில் உள்ள இந்த பாசி, செடி, கொடிகளை அழிக்கணும். அதுக்காகத் தான் அழிமீன் திருவிழா நடத்துறது. மீன் பிடிக்கும் போது இடையூறாக உள்ள பாசி, செடி, கொடிகளை அப்படியே வெளியேற்றி கரையில கொண்டு வந்து குவியலா போடுவாங்க. மீன் பிடிச்சு தண்ணீர் வற்றிய பிறகு குளம் சுத்தமா இருக்கும். இது தான் அழி மீன் திருவிழா.


இந்த திருவிழா எப்படி நடக்கும் என்றால், பல கண்மாய்கள் தண்ணீர் நிரம்பி அடுத்தடுத்த கண்மாய்களுக்கு தண்ணீர் வந்தால் அதில் மீன்களும் வரும். தண்ணீர் நிரம்பிய பிறகு கண்மாயில் மீன் உள்ளதா என்று பார்ப்பார்கள். மீன் இல்லை என்றால் பாசனதாரர்களோ, ஊரில் இருந்தோ மீன்குஞ்சு வாங்கி கண்மாயில் விடுவாங்க. விவசாயம் முடிந்து தண்ணீர் வற்றும் நேரத்தில் மீன்கள் செத்துமடியவிடாமல் பாசனதாரர்கள், ஊர் சேர்ந்து ஒரு தேதியை குறிப்பிட்டு அழிமீன் திருவிழா நடத்த அறிவிப்பார்கள். அந்த கிராமத்தினர் உறவினர்களுக்கு சொல்லி அழைத்து வருவார்கள்.


காலை 6 மணிக்கு கண்மாய் கரையில் கோயில் இருந்தால் அங்கேயோ அல்லது பாசன மடையிலேயோ ஊர்த் தலைவர், ஊராட்சித்தலைவர், பாசன தாரர்கள், கிராம முக்கிய பிரமுகர்கள் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு சாம்பிராணி புகை போட்ட பிறகு தங்கள் தோளில் கிடக்கும் வெள்ளை துண்டு எடுத்து அசைப்பார்கள் இதுக்கு பேரு 'வெள்ளை வீசுவது' வெள்ளை வீசிய பிறகு தான் கரையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் ஊத்தா, தூரி, கச்சா, வலை போன்ற மீன்பிடி சாதனங்களுடன் ஜாதி பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி மீன் பிடிப்பார்கள். செடி, கொடி, பாசிகள் இல்லாத கண்மாய்களாக இருந்தால் அதிகபட்சம் அரை மணி நேரமும் செடி, கொடி, பாசி இருந்தால் ஒரு மணி முதல் 2 மணி நேரமும் மீன்பிடித்து மகிழ்வார்கள். பலரது வலையில் ஏராளம் பெரிய மீன்களும் சிலர் வலைகளில் சிறிய மீன்கள் கூட சிக்காமல் போகும். மீன் சிக்கவில்லை என்றால் நிறைய மீன் பிடித்தவர்கள் மீன் பிடிக்காதவர்களுக்கு கொடுப்பார்கள். சிலரது வலைகளில் மீன்களோடு பாம்புகளும் சிக்கும். 

 

Fish Festival is happening in the United States too!

 

பிடித்த மீனை வீடுகளுக்கு கொண்டு போய் சமைத்து உறவினர்களுக்கு விருந்து படைப்பார்கள். ஒரு சில ஊர்களில் பாசனதாரர்களே மீன்களை பிடித்து ஒவ்வொரு வீட்டுக்கும் பங்கு வைத்து கொடுப்பதும் உண்டு. பெரிய கண்மாய்களில் 10 ஆயிரம் பேர்கள் வரை ஒரே நேரத்தில் இறங்கி மீன் பிடிப்பார்கள். சில நாள் முன்பு பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் பொன்னமராவதியை சுற்றி உள்ள மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி, மைலாப்பூர், வலையப்பட்டி, தொட்டியம்பட்டி, வார்ப்பட்டு, கட்டையாண்டிபட்டி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கண்மாயில் இறங்கி அழி மீன் பிடித்தனர்.


அழிமீன் திருவிழா முடிந்த பிறகு கண்மாயில் தண்ணீர் முழுமையாக வற்றும் போது மூதாட்டிகள் மண் பானைகளை வைத்துக் கொண்டு அயிரை மீன் பிடிப்பார்கள். இது தான் கடைசி அழி மீன் பிடிப்பாக இருக்கும் என்றனர்.


தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு அர்த்தமுள்ளது தான் என்பதற்கு இந்த அழிமீன் திருவிழாவும் ஒரு சான்று. கண்மாயை சுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காகவே அழிமீன் திருவிழா நடத்துகிறார்கள்.