Skip to main content

அரசியலில் தோல்வியையே சந்திக்காத கார்கே; தோல்வியில் சிக்கித் தவிக்கும் காங்கிரசை மீட்டெடுப்பாரா? - காங்கிரஸும் கார்கேவும் ஒரு பார்வை

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

ிப

 

காங்கிரஸ் கட்சியின் 20வது தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான மல்லிகார்ஜுன கார்கே. ஏறக்குறைய 80 வயதைக் கடந்த அவர் கிட்டதட்ட 137 ஆண்டுகள் பழைமையான காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வாகியுள்ளார். இந்த தேர்வு காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் அளிக்குமா? இன்னும் இரண்டாண்டுகளில் வரவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்ற வாதப் பிரதிவாதங்கள் அகில இந்திய அரசியலில் கடந்த சில வாரங்களாக விவாதத்தைக் கிளப்பிக்கொண்டிருக்க, பெரிய ஆரவாரமின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கார்கே. 

 

அரசியலில் இருப்பவர்கள் கட்சி தாவுவது என்பது அரிதாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், கர்நாடகாவில் மட்டும் தினசரியைப் பார்த்தே பொதுமக்கள் தாங்கள் வாக்களித்த உறுப்பினர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதைக் கண்டறிய முடியும். அந்த அளவிற்குப் பதவிக்காக, சீட்டுக்காக கட்சி மாறுவது என்பது அம்மாநிலத்தில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகச் சாதரணமான ஒன்று. ஆனால் இன்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கார்கே இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்றால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கிட்டத்தட்ட 10 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரர். 40 ஆண்டுகாலம் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 10 ஆண்டுகாலம் மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். தனிப்பட்ட வகையில் அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படுபவர். நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். நேரு குடும்பத்தின் தளகர்த்தாக்களில் மிக முக்கியமானவர் என்ற நம்பிக்கையைப் பெற்றவர். 

 

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், மத்திய அமைச்சர் என்ற அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட பணியாற்றிய கார்கே, இன்று காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்றைக்கும் கூட சில தேசியக் கட்சிகளில் தொழிலதிபர்களையும், மிட்டா மிராசுகளையும் ஒப்புக்கு தலைவராக வைத்துக்கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த அரசியல்  மூவ் பிரதான தேசிய கட்சிக்கு சற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாகவே அரசியல் அறிந்தவர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினருக்கும், அனைத்து பிரிவினருக்குமான கட்சி என்பதைக் காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக அதன் மூத்தத் தலைவர்கள் தொலைக்காட்சி பேட்டிகளில் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால்  கார்கேவை காங்கிரஸ் கட்சி சுயமாக இயங்கவிடாது என்ற குற்றச்சாட்டும் ஆளும் கட்சி சார்பில் எதிர்க் கருத்தாக முன்வைக்கப்படுகிறது. 

 

ஆனால் தேர்தல் முடிவு வந்த சிலமணி நேரங்களிலேயே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவரின் வழிகாட்டுதலின் படியே காங்கிரஸ் கட்சி இயங்கும் என அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேரு குடும்பத்தைத் தாண்டி சுயமாக காங்கிரஸ் கட்சியில் யாராவது இயங்க முடியுமா? 98ல் சீதாராம் கேசரிக்கு நடந்தது மறந்துவிட்டதா? என்ற ஆளும் தரப்பின் கேள்வியை எதிர்கொள்ளும் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் "நாங்கள் நேருவைப் பின்பற்றுபவர்கள், நாக்பூரை அல்ல" என்று கூறி ஆளும் தரப்பின் விமர்சனத்தைப் புறந்தள்ளி வருகிறார்கள்.

 

இரண்டு தரப்புக்கும் இடையே வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க, கார்கே காங்கிரஸ் கட்சியை எப்படி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியைக் கடந்து அரசியலை கவனித்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 92ல் நரசிம்மராவுக்குப் பிறகு தென்னிந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கார்கே. குறிப்பாக வட இந்திய காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும், மாநிலங்களில் மிகப்பெரிய சவாலாக உள்ள கோஷ்டி பூசலை குறைக்க வேண்டும், உறுப்பினர் சேர்க்கையில் ஆரம்பித்து கூட்டணி அமைப்பது வரை மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.

 

இத்தனை ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியை வழிநடத்த எந்த விதத்திலும் கார்கே குறைவானவர் இல்லை என்பது அவர் கடந்து வந்த அரசியலை கவனித்தாலே அனைவருக்கும் புரியும். ஆனாலும் அரசியலில் தோல்வியையே சந்திக்காத அவர், தொடர் தோல்விகளில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் வைத்தியம் பார்த்து புத்துயிர் அளிப்பாரா? மோடி மஸ்தான் வேலைக்கு முடிவு கட்டுவாரா? என்பதே காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.