சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்திப் என்ற மாணவி கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களை அவரின் அப்பா எழுப்பி வரும் நிலையில், பாத்திமா மரணத்தில் என்ன நடந்தது, அவரது கடிதத்தில் என்ன எழுதியிருந்தார் என்பது பற்றிய சந்தேகங்களை அவரின் அப்பாவிடம் நேரடியாக கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவர் மலையாளத்தில் பதிலளிக்க, அவரது நண்பர் ஒருவர் அதனை தமிழில் மொழிபெயர்த்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " என் மகளின் இறப்பில் எங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. முதல் சந்தேகம், இந்த மாதம் கல்லூரியில் 27ம் தேதி நடக்க இருக்கும் தேர்வு முடிந்த பிறகு விடுமுறையில் வீட்டிற்கு வருவதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே பாத்திமா விமான டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தாள். மேலும், படிப்பு சம்பந்தமாக உலகத்தில் உள்ள பெரிய அறிஞர்களின் புத்தகங்களை எல்லாம் அமேசானில் ஆர்டர் செய்து தற்போது அந்த புத்தகங்கள் எல்லாம் வீட்டிற்கு வந்துள்ளது. இந்த மாதிரி அவள் முடிவு எடுக்க நினைத்திருந்தாள் இந்த மாதிரி படிப்பு விஷயங்களில் யாருக்கும் அக்கறை வராதே? இது எங்களின் இரண்டாவது சந்தேகம். அடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அன்றைய தினத்தில் அவரின் அறையில் அவளது துணிகளை துவைத்து காய போட்டிருக்கிறாள். தினசரி வேலையை செய்து வரும் அவருக்கு இந்த தற்கொலை எண்ணம் எப்படி வந்திருக்கும். இது எங்களின் மூன்றாவது சந்தேகம்.
அடுத்து இந்த சம்பவம் நடந்த தினத்தில் ஐஐடி கேன்டீனில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவள் அழுது கொண்டு இருந்திருக்கிறாள். அப்போது அங்குவந்த ஒரு பெண் அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார். அவர் அங்கே வேலை பார்கிறாரா? அல்லது அங்கே படிப்பவரா என்று தெரியவில்லை. அதே போல என் மகள் இறந்த அன்று காலையில் எட்டு மணியில் இருந்து அவளது அம்மா தொடர்ச்சியாக போன் அடித்துக்கொண்டு இருந்திருக்கிறாள். கிட்டதட்ட ஐம்பது முறை முயற்சி செய்துள்ளார். எனென்றால் என்மகள் காலையில் எழுந்த உடனே வீட்டிற்கு போன் செய்யும் பழக்கம் உடையவள். நேரம் ஆகியும் அவள் போன் செய்ய வில்லையே என்பதால் அவளின் அம்மா இந்தனை முறை தொடர்ச்சியாக போன் செய்தார். ஆனால் பாத்திமா ரிங் ஆகியும் போனை எடுக்காத காரணத்தால் அவளது நண்பர்களுக்கு போன் செய்தோம். அவர்களும் எடுக்கவில்லை.
பிறகு ஒரு பெண் மட்டும் போனை எடுத்தாள். ஆனால் அவளும் உடனடியாக கட் செய்து வைத்துவிட்டாள். பிறகு 11.30 மணி அளவில் விடுதியின் வாடர்ன் பாத்திமாவின் அம்மாவுக்கு போன் செய்து தகவல்களை தெரிவித்தார். நான் அப்போது கேரளாவில் இல்லை. சவுதி அரேபியாவில் இருந்தேன். எனக்கு கொல்லத்தின் மேயர் போன் செய்து என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிதான் என்னை வர வைத்தார்கள். பாத்திமா ,விஷயத்தை நான் இங்கு வரும் வரை என்னிடம் கூறவில்லை. அப்போதே என்னிடம் இந்த தகவல்களை சொல்லியிருந்தார்கள் என்றால் நானும் கூட இங்கே வந்திருப்பேனா என்று ஐயம்தான். இந்த செய்தியை கேட்டு கொல்லம் மேயர் உள்ளிட்ட ஐந்து நபர்கள் ஐஐடியில் விசாரிக்க வந்துள்ளார்கள். ஆனால் யாரை விசாரித்தாலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான தகவல்களையே தெரிவித்துள்ளார்கள். இது அவர்களுக்கு பெரிய குழப்பத்தை உண்டாக்கியது.
அடுத்து அவள் தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்தியதாக சொல்லப்பட்ட கயிறு. துணிகளை உலர்ந்த பயன்படுத்தப்பட்ட கயிறு தனியாக இருக்கும் நிலையில் இந்த கயிறு அந்த அறைக்கு எப்படி வந்தது. இது எங்களுக்கு இந்த மரணத்தில் உள்ள பெரிய சந்தேகம். அதையும் தாண்டி என் மகள் எந்த பொருளையோ அல்லது புத்தகங்களையோ படித்தால் அவைகளை இருந்த இடத்தில் அப்படியே வைக்கும் பழக்கம் கொண்டவர். அப்படி இருக்கும்போது, அவள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் அவளது அறையில், காவல்துறையினர் அந்த அறையில் தங்கியுள்ள மற்றொரு பெண்ணின் பொருட்களை எடுப்பதற்கு திறந்த போது என்னுடைய மகளின் புத்தகங்கள், பொருட்கள் அறை முழுவதும் சிதறிக்கிடந்துள்ளது. காவல்துறையினர் வருவதற்கு இடைப்பட்ட நேரத்தில் யாரோ என்னுடைய மகளின் அறைக்கு சென்று எதையோ தேடியுள்ளார்கள். இந்த மாதிரியான செய்திகள் அவளின் மரணத்தில் எங்களுக்கு பெரிய சந்தேகத்தை உருவாக்குகிறது.
மேலும், சுதர்சன் பத்மநாபன் ரொம்ப மோசமானவர் என்று என்னுடைய மகள் தொடர்ந்து எங்களிடம் சொல்லிவந்தாள். அவரது பெயரை கூட உச்சரிக்க விருப்பம் இல்லாமல் எங்களிடம் எஸ்.பி என்றே கூறுவார். மேலும் படிப்பில் அவள் சுட்டியாக சிறந்து விளங்கியதால் உடன் படிப்பவர்கள் சிலருக்கும் ஜெலசி இருந்து வந்துள்ளது. சுதர்சன் பத்மநாபன் மட்டும் அல்லாமல் வேறு சிலர் மீதும் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இதைத் தவிர என்னுடைய மகளின் படிப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது அவளது பெயர். இதுவே அவள் பெரிய அளவிலான மன உளைச்சலை அடைவதற்கு காரணமாக இருந்துள்ளது. மேலும், என்னுடைய மகளுக்கு கல்லூரியில் டிபேட்களில் அதிகம் பங்குபெறும் பழக்கம் இருக்கும். அதில் கலந்துகொண்டு ஆசிரியர்களோடு விவாதம் செய்வாள். கருத்து பரிமாற்றங்களை இதன் மூலம் செய்யலாம் என்று நினைப்பாள். இதை கேரளாவில் நிறைய முறை நாங்கள் நேரில் கண்டிருக்கிறோம். அதை போல கல்லூரி டிபேட்களிலும் செய்திருக்கிறாள். சில ஆசிரியர்கள் உடனும் டிபேட்களில் கலந்துகொண்டு உரையாற்றி இருக்கிறாள். அதில் சிலரது பெயர்களை தன்னுடை கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்" என்றார்.