மறந்ததை நினைவு படுத்திய அருவி...
'அந்த நோயி'ன் ஸ்டேட்டஸ் அப்டேட்!
'அன்பின் பேரனுபவம்', 'பெண்ணை சமுதாயம் நடத்தும் விதம்', 'சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பற்றிய விமர்சனம்' இப்படி அருவி பல விஷயங்களை பேசுகிறது, பல விஷயங்களுக்காக பேசப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி 'அருவி'நமக்கு நினைவு படுத்தியுள்ள இன்னொரு விஷயம் 'எய்ட்ஸ்'. கடந்த ஒரு 10 வருடங்களாக எய்ட்ஸ் என்னும் கொடிய நோயை பற்றி அதிகமான பேச்சுகளோ, விழிப்புணர்வு விளம்பரங்களோ, அரசு சார்பான பரப்புரைகளோ இல்லாமல் இருக்கிறது. இந்தியாவில் எய்ட்ஸ் ஒளிந்துவிட்டதா, குறைந்துவிட்டதா இல்லை மறைந்துவிட்டதா? என்ன நிலவரமென தேடினோம். ஒரு காலத்தில் இந்த எய்ட்ஸ் நோயின் பெயரை சொல்லவே கூச்சப்பட்ட மக்களை, அரசு எய்ட்ஸ் விளம்பரமான "புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?" என்று பரப்பி எல்லோரையும் குழப்பத்துக்கு உள்ளாக்கி ஆறிலிருந்து அறுபது வரை எய்ட்ஸ் என்ற வார்த்தையை பேச வைத்தது. பின்னர் எய்ட்ஸ் நோய் என்பது பாலியல் உறவுகளால் மட்டும்தான் பரவும் என்று நினைத்தவர்களுக்கு, இது மருத்துவமனைகளில் குத்தப்படும் ஊசியால் கூட பரவும் என்று அறிய வைத்தது. எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட மக்களை ஒதுக்காதீர்கள் என்றெல்லாம் பரப்புரை செய்தது. இப்பொழுது வருடத்திற்கு ஒரு முறை டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினமான அன்று மட்டும் விழிப்புணர்வு கொடுத்துவிட்டு செல்கின்றனர்.
எய்ட்ஸ் நோய் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இந்திய இளைஞர்களுள் 25.7% பேருக்கு மட்டும் தான் எயிட்ஸை பற்றின விழிப்புணர்வு உள்ளதாக தெரிவித்துள்ளனர். 2016 ஆண்டின் நிலவரப்படி எய்ட்ஸ் நோயால் 62,000 பேர் இறந்துள்ளனர். பழைய நிலவரங்களை பார்க்கும்போது இது குறைவுதான். 2005ஆம் ஆண்டில் 150,000 பேர் இறந்துள்ளனர். அதே போன்று 2016ல் 80,000 பேர் புதிதாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2005ல் 150,000 ஆக இருந்துள்ளது. 2016ல் உலகம் முழுவதும் 36.7 மில்லியன் பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து இருகின்றனர். இதில் 19.5 மில்லியன் பேர் மட்டும் தான் 'ஆன்டி-ரெட்ரோவைரல் தெரப்பி' என்னும் சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர். இதன் மூலம் அந்த நோயை குணப்படுத்த முடியாது, அவர்களின் வாழ்நாளை நீடிக்கவைக்க முடியும். இது போன்று புள்ளியியல் விவரங்களை எடுத்தால் முன்பை விட பாதிப்புகள் குறைவாகத்தான் இருக்கிறது.
படத்தில் ஒரு வசனம், " எய்ட்ஸ் என்ற வார்த்தையை வைத்து பெரிய வியாபாரம் நடைபெற்று கொண்டிருக்கிறது" என்று வரும். அதுவும் உண்மை தான். வலைதளங்களில் இந்த 10 வருடங்களில் எவ்வளவு விளம்பரங்கள் பார்த்திருக்கிறோம். உலகமே அஞ்சும் இந்த நோய்க்கு 'வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம், அது 100 சதவீதம் குணப்படுத்தும்' என்றெல்லாம் அமேசான் காடுகளின் அரிய மூலிகைகளை வைத்து பல விளம்பரங்கள் இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கிறன. பரம்பரை சித்த வைத்தியர்கள் என்று சொல்லிக்கொண்டு ஊர் பைபாஸ்களில் ஒரு வண்டியை வைத்துக்கொண்டு மைக்கில் பிரச்சாரம் செய்து விற்பனை செய்கின்றனர். செய்தித்தாளில் துண்டு விளம்பரங்கள், இந்த வாரம் இந்த லாட்ஜில் மருத்துவர் ஐயா சிங்கப்பூரில் இருந்து வந்து மருத்துவம் பார்க்கிறார், அவர் எய்ட்ஸ் நோயை ஒரே வாரத்தில் சரி செய்துவிடுவார் என்றெல்லாம் படித்திருக்கிறோம்.
ஒரு பக்கம் வியாபாரம் சூடுபிடித்தது என்றால், மறுபக்கம் புரளிகளுக்கும் பஞ்சம் இல்லாமல்தான் போனது. வாட்சப் அதிகம் பிரபலம் இல்லாத காலத்தில் செல்போன் மெசேஜ்களில் எய்ட்ஸை பற்றின புரளிகள் பரவின. 'பானிபூரி கடைக்காரர் வெங்காயம் நறுக்கும் போது கை அறுபட்டு அவரது இரத்தம் அதில் சேர்ந்துள்ளது. அவருக்கு எய்ட்ஸ் நோய் இருந்ததால் பானிபூரி சாப்பிட்ட ஒரு பள்ளி மாணவனுக்கு எய்ட்ஸ் பரவி விட்டது' என்றெல்லாம் பரவியது. அன்னாசி பழ கடைகாரரிடமிருந்து பரவியது, தியேட்டரில் உட்காரும் சீட்டில் குண்டுஊசி குத்தி எய்ட்ஸ் பரவியது என்று விதம் விதமாக புரளியை உருவாக்கிவிட்டனர். சமூக அக்கறை நிரம்பிய நம் மக்களும் அவற்றை ஃபார்வர்ட் செய்து வந்தனர்.
குளிர்பான தொழிற்சாலையில் வேலைபார்க்கும் நபரின் இரத்தம் கலந்துவிட்டது, அவருக்கு எய்ட்ஸ் உண்டு, அதனால் குடிப்பவர்களுக்கும் பரவும், குறிப்பிட்ட குளிர்பானத்தை குடிக்க வேண்டாம் என்றெல்லாம் பீதியை கிளப்பினர். மூன்று வருடம் முன்பு வந்த செய்தி இன்றும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. எய்ட்ஸ் பரவுகிறதோ இல்லையோ இவர்கள் அனுப்பும் மெசேஜ்களால் மக்களிடம் பீதி நன்றாக பரவுகிறது. எய்ட்ஸ் நோய் பாதுகாப்பற்ற உடலுறவு, கர்ப்பகாலத்தில் பெண்களிடம் இருந்து குழந்தைக்கு பரவுவது, ஒருவர் பயன் படுத்திய ஊசி மற்றொருவருக்கு பயன்படுத்துவது மூலமாக பரவும். இது எச்சில் வழியாகவோ, அவர்களுடன் பழகுவது மூலமாகவோ பரவாது. இந்த செய்திகளையெல்லாம் ஒரு காலத்தில் அரசு தொடர்ந்து விளம்பரங்கள் வீடியோக்கள் வழியாக பரப்பி வந்தது. பிறகு, எய்ட்ஸை தாண்டி பன்றிக்காய்ச்சல், டெங்கு என பிற நோய்கள் வந்ததில் நாம் மறந்திருந்த ஒரு மோசமான நோயை மீண்டும் நினைவு படுத்தி இளம் தலைமுறையை எச்சரித்திருக்கிறாள் 'அருவி'.
சந்தோஷ் குமார்