திரைக்கதை வசனம் எழுதுவது எப்படி? என்பதை தமிழக காவல்துறையிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கு பல உதாரணங்களை சொன்னாலும் லேட்டஸ்ட் உதாரணம் நிர்மலாதேவியின் வாக்குமூலம் என்கிற பெயரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வெளியிட்டதாக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தி. ஆனால், இதையே ஓவர்டேக் செய்துவிட்டது கொலைக்குற்றத்திலிருந்து ஆளுங்கட்சி புள்ளியை காப்பாற்றுவதற்காக கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்தையே குற்றவாளியாக்கி மிரட்டிக்கொண்டிருக்கும் அரியலூர் மாவட்ட போலிஸ் எழுதிய திரைக்கதை, வசனமும்… கபட நாடகமும்!
2018 செப்டம்பர்- 20 ந்தேதி காலை நேரம்…
திடீரென்று, தன் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகிலுள்ள சிலம்பூர் கிராமத்தைச்சேர்ந்த ரமேஷ். இதைப்பார்த்து, பதறிப்போன ரமேஷின் அம்மாவும் அக்கம்பக்கத்தினரும் அடித்து பிடித்துக்கொண்டு ஓடிவந்து தூக்கு கயிற்றிலிருந்து கீழிறக்கி பார்த்தபோது, ரமேஷின் உடம்பில் உயிர் இல்லை. ஆனால், ரமேஷின் உடம்பில் தாக்கப்பட்ட காயங்கள் சந்தேகத்தை உண்டாக்கியது. இதனால், ஏற்கனவே கருத்துவேறுபாட்டால் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்ட ரமேஷின் மனைவி ஜெயலட்சுமிக்கு மரணச்செய்தி போனது. அதற்குப்பிறகு, நடந்தது என்ன? 25 வயதிலேயே கணவரை இழந்து தவிக்கும் ஜெயலட்சுமி நம்மிடம்...
“கல்யாணமாகி அஞ்சு வயசுல ராகுல், மூணு ரகுன்னு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. என் கணவர் ரமேஷுக்கும் அதேப் பகுதியை சேர்ந்த எழிலரசிங்குற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததால எங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வந்தது. ஒருவருடத்துக்கு முன்பே ஆண்டிமடம் போலீஸ் ஸ்டேஷன்ல இதுசம்பந்தமா புகார் கொடுத்தேன். அப்போது, ‘இனிமேல் இப்படி தொடர்பு வைத்துக்கொள்ளமாட்டோம்’ னு எனது கணவரும் எழிலரசியும் எழுதிக்கொடுத்ததால சமாதானப்படுத்தி அனுப்பிட்டாங்க போலீஸ்.
ஆனாலும் அவர்களுடைய தொடர்பு தொடர்ந்துக்கிட்டுத்தான் இருந்தது. ஒரு கட்டத்துல எங்களுக்கு சண்டை வந்து, எங்கம்மா வீட்டுக்கு என்னை விரட்டி விட்டுட்டாரு கணவர் ரமேஷ். இதனால, சிலம்பூரிலிருந்து என்னோட ரெண்டு குழந்தைங்களையும் கூட்டிக்கிட்டு அம்மா வீடு இருக்குற அழகாபுரத்துக்கு போய்ட்டேன். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குமேல அம்மா வீட்டுலதான் இருக்கேன்.
கடந்த, 2018 செப்டம்பர் 20-ந்தேதி வியாயழக்கிழமை காலை 7 மணிக்கு கணவர் ஊரான சிலம்பூரிலிருந்து வில்சங்ன்குறவர் ஃபோன் பண்ணி, ‘தூக்கு போட்டுக்கிட்டான் ரமேஷு’ன்னு சொல்ல எனக்கு என்ன சொல்றதுன்னே புரியல. அதிர்ச்சியாகி, அழுது புறண்டுக்கிட்டு ஓடிப்போயி பார்த்தேன். அவர், உடம்புல பல இடங்களில் காயங்கள் இருக்கிறமாதிரி தெரிஞ்சது. அதுமட்டுமில்லாம, வேலைக்காக சென்னைக்கு வந்த என் கணவர் ரமேஷை ஃபோன் பண்ணி வரச்சொன்னதே அந்த எழிலரசிதாங்குற விசயமும் தெரியவந்தது. மேலும், இதே பகுதியைச்சேர்ந்த ஆளுங்கட்சி கவுன்சிலரின் கணவரும் அதிமுக கிளைச்செயலாளருமான குமாருக்கும் எழிலரசிக்குமுள்ள தொடர்பை கண்டிச்சதால இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதுன்னும் ஊர்ல பேசிக்கிட்டாங்க. அதுக்குப்புறம்தான், என் கணவர் தூக்குல தொங்கியபடி இருந்திருக்குறார். அப்படின்னா, என் கணவரோட சாவுல ஏதோ மர்மம் இருக்குன்னு சந்தேகம் வந்தது. உடனே, நானும் என் அம்மா விருதம்மாளும் ஆண்டிமடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கப்போனோம். போற வழியில ஒரு படிச்ச அண்ணன்தான், நான் சொல்ல சொல்ல அதை அப்படியே கம்ப்ளைண்டா எழுதிக்கொடுத்தாரு.
ஆண்டிமடம் ஸ்டேஷன்ல போயி, ‘என் வீட்டுக்காரரை யாரோ அடிச்சு கொண்ணு தூக்குமாட்டியிருக்காங்க. அவரோட வலது காது, மூக்கில் இரத்தம் வழியுது. இடுப்பு எலும்பின் விலா இருபக்கங்களும் காயங்கள் இருக்கு. மர்ம உறுப்பும் சிதைக்கப்பட்டிருக்கு. இந்தக்கொலைக்கு காரணமே அதிமுக கிளைச்செயலாளர் குமாரும் எழிலரசியும்தான்’ன்னு கம்ப்ளைண்ட் கொடுத்தேன். 20-09-2018 தேதியிட்ட கம்ப்ளைண்டை வாங்கின ஆண்டிமடம் காவல்நிலைய போலீஸ்காரர், “பந்தோபஸ்துக்கு போயிருக்காங்கம்மா ஸ்டேஷன்ல யாருமில்ல. நீ போம்மா வர்றோம்’னு சொன்னாரு. இரவு 9 மணிவரை காத்திருந்தும் ஆண்டிமடம் ஸ்டேஷன்லிருந்து போலீஸ் வரல. இதனால, ஊர்க்காரங்க எல்லாம் சேர்ந்து உடலை அடக்கம் பண்ணிட்டாங்க.
கணவர் இறந்து சடங்கு முடியுறவரை 15 நாட்களுக்கு வெளியில போகக்கூடாதுன்னு பெரியவங்க சொன்னதால நான் வெளியில போகல. எனக்கு பதிலா, என்னோட அம்மா விருதம்மாள் பலமுறை ஆண்டிமடம் ஸ்டேஷனுக்கு போயி கொலைக்கு காரணமானவங்க மேல நடவடிக்கை எடுக்கச்சொல்லி கேட்டிருக்காங்க. அப்போது, ‘உன் பொண்ணு கொடுத்த பெட்டிஷன் டேபிள் மேல இருந்த தண்ணியில பட்டு நனைஞ்சுப்போச்சு. எழுத்தெல்லாம் அழிஞ்சுப்போச்சும்மா. ஒண்ணும் பண்ணமுடியாது. செத்தவன் செத்துப்போயிட்டான். பேசாம விட்டுட்டுப்போம்மா. இனிமே கேஸ் போட்டு என்ன பண்ணப்போற?’ன்னு ரொம்ப அலட்சியமா சொல்லி விரட்டிவிட்டிருக்காங்க.
அதற்குப்பிறகு, நானும் அம்மாவும் ஆண்டிமடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனோம். அப்போதும், ஆண்டிமடம் போலீஸ் ஸ்டேஷன்ல நான் கொடுத்த புகாருக்கு இரசீதும் கொடுக்கல. வழக்குப்பதிவு செய்து… எந்த நடவடிக்கையும் எடுக்கல” என்கிற ஜெயலட்சுமி, தனது கணவர் ரமேஷின் மரணத்துக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரியலூர் மாவட்ட டி.எஸ்.பி., எஸ்.பி., திருச்சி ஐ.ஜி., ஆர்.டி.ஓ., கலெக்டர் விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ், டி.ஜி.பி., உள்துறைச் செயலர், உள்ளிட்ட அனைவருக்கும் கடந்த 2018 அக்டோபர்-15 மற்றும் 17 ந்தேதிகளில் பதிவு தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.
“கணவர் கொலை செய்யப்பட்டன்னைக்கு ஆண்டிமடம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரை எதார்த்தமா ஜெராக்ஸ் எடுத்து வெச்சிருந்தேன். அந்தப்புகார் நகலையும் அந்த மேல்முறையீட்டு புகாருடன் இணைத்து அனுப்பியிருந்தேன்.
அதற்குப்பிறகு, அக்டோபர்-22 ந்தேதி கலெக்டர் விஜயலட்சுமி மேடத்தை சந்தித்து மனு கொடுத்தேன். காத்திருக்கச்சொன்னார்கள். என் கணவரின் மரணம் குறித்து போலீஸ் நடவடிக்கை எடுக்கமாட்டேங்குதுன்னு போலீஸ் மேலேயே புகார் கொடுக்க வந்ததால் கலெக்டரை சந்தித்து முழுமையான விவரங்களைச் சொல்ல அனுமதிக்காமல் விரட்டிவிட்டாங்க அங்கிருந்த போலீஸார்” என்று கண்கலங்குகிற ஜெயலட்சுமியும் அவரது குடும்பத்தாரும் அரியலூர் மாவட்ட எஸ்.பியை சந்தித்திருக்கிறார்கள். அப்போது, எஸ்.பி. ஆஃபிஸிலிருந்து ஆண்டிமடம் போலீஸுக்கு ஃபோன் செய்து, ‘ஏன் இந்த பொண்ணு கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கல? இந்த பொண்ணு கம்ப்ளைண்ட் கொடுத்தன்னைக்கு யார் யாரெல்லாம் ட்யூட்டில இருந்தீங்க?’ என்று விசாரித்திருக்கிறார்கள். அதுக்குப்பிறகு, டி.எஸ்.பியை போயி பார்க்கச்சொல்லியிருக்கிறார்கள். உடனே, ஜெயங்கொண்டத்துக்கு கிளம்பி டி.எஸ்.பி. ஆஃபிஸுக்கு சென்றிருக்கிறார் ஜெயலட்சுமி. ‘இங்க ஏம்மா வர்றீங்க? ஆண்டிமடம் ஸ்டேஷனுக்கு போங்கம்மா. டி.எஸ்.பி. இல்ல. நாளைக்கு காலையில 10 மணிக்கு வாங்க’ என்று சொல்லி அலைகழித்திருக்கிறார்கள். அடுத்தடுத்த, நாட்களில் போனபோது, ‘ரெண்டு நாள் கழிச்சு வாங்க’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
அதனால், வேறு வழியில்லாமல் ஆண்டிமடம் ஸ்டேஷனுக்கே போயிருக்கிறார் ஜெயலட்சுமி. அங்கேயும் இரண்டு நாட்கள் கழித்து வரச்சொல்லி அனுப்பிவிடுகிறார்கள். இன்ஸ்பெக்டர் கண்டுகொள்ளவில்லை. “இதுக்குமேலேயும் ஆண்டிமடம் ஸ்டேஷனில் என் கணவரின் கொலைக்கான நீதி கிடைக்காதுன்னுதான் கடந்த அக்டோபர்-17ந்தேதி உள்துறை செயலாளர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுத்தேன். அக்டோபர்- 25 ந்தேதி சென்னையிலுள்ள காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்துக்கும் சென்றோம். அப்போது, ஏ.டி.ஜி.பியை பாருங்கன்னு சொன்னாங்க.
‘எங்க ஊர்ல இருக்குற குமாரும் எழிலரசியும் சேர்ந்து என் புருஷனை அடிச்சு கொண்ணுட்டாங்க. ஆண்டிமடம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கமாட்டேங்குறாங்க’ன்னு சொல்லி அழுதேன். எஸ்.பியை பார்த்தீங்களான்னு ஏ.டி.ஜி.பி. கேட்டார். பார்த்தோம்னு சொன்னோம். வெயிட் பண்ணுங்க எஸ்.பி.க்கிட்ட பேசிட்டு சொல்றேன்னாரு. அதுக்கப்புறம், ஏ.டி.ஜி.பியோட பி.ஏன்னு எங்கக்கிட்ட வந்து பேசினவர் எங்களை கூப்பிட்டு, ‘உங்கப்புகார் குறித்து எஸ்.பிக்கிட்ட பேசியாச்சு. புகாரையும் எஸ்.பிக்கு அனுப்பிட்டோம். அவரைப்போயி நேர்ல பாருங்க’ன்னு சொன்னார்.
அதற்குப்பிறகு, முதலமைச்சர் தனிப்பிரிவு, உள்துறை செயலாளருக்கு மீண்டும் புகார் கொடுத்தேன்” என்ற ஜெயலட்சுமி நக்கீரன் அலுவலகத்தில் இதுகுறித்து, புகார் கொடுத்தார். நாமும் விசாரணையை தொடங்கினோம்.
அதற்குப்பிறகு நடந்தது என்ன? சென்னையிலிருந்து ஊருக்கு சென்ற ஜெயலட்சுமி, எஸ்.பி.யை பார்க்க கிளம்பிக்கொண்டிருந்திருக்கிறார். திடீரென்று, ஆண்டிமடம் காவல்நிலையத்திலிருந்து வந்த போலீஸார், ‘உங்க புகார்ல நடவடிக்கை எடுக்கிறோம். இன்ஸ்பெக்டர் கூட்டிக்கிட்டு வரச்சொன்னாரு’ என்று சொல்லி ஜெயலட்சுமி, அவரது தாயார், மாமியார், மச்சினன் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து சென்றிருக்கிறார்கள்.
“காலையில 10 மணிக்கு கூட்டிக்கிட்டுப்போனாங்க. மொத்த போலீஸும் எங்களை சுற்றி நின்னுக்கிட்டாங்க. ‘ஒனக்கு என்னம்மா வேணும்?’னு கேட்டாரு இன்ஸ்பெக்டர் கென்னடி. என் புருஷன் சாவுக்கு நீதி வேணும். என் புருஷனை கொலைபண்ணின குமார், எழிலரசியை அரெஸ்ட் பண்ணுங்க’ன்னு சொன்னேன். நீதியெல்லாம் கிடைக்காது. உனக்கு வேறென்ன வேணும்னு கேளுன்னு மிரட்ட ஆரம்பிச்சுட்டார். திடீர்ன்னு எங்க கையில இருந்த செல்ஃபோன்களை எல்லாம் புடுங்கிக்கிட்டாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. எங்க எல்லாருக்கும் நடுக்க ஆரம்பிச்சுடுச்சு. என்னோட கணவரின் கொலைக்கு காரணமானவங்கமேல நடவடிக்கை எடுக்கணும்னு புகார் கொடுத்தா, சம்பந்தப்பட்டவங்கள விசாரிக்காம எங்களையே குற்றவாளிமாதிரி கேள்வி கேட்குறீங்களே… இது நியாயமா? ன்னு அங்கேயே அழுது கதறினோம். கம்ப்ளைண்டை வாபாஸ் வாங்கிக்கச்சொல்லி, காலையில 10 மணிக்கு ஆரம்பிச்சு மாலை 5 மணிவரைக்கும் எங்க எல்லோரையும் மிரட்டிக்கிட்டே இருந்தாங்க இன்ஸ்பெக்டர் கென்னடி, எஸ்.ஐ. வினோத், கார்த்திக், பாலமுருகன் உள்ளிட்ட போலீஸார்.
காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரைக்கு பச்ச தண்ணிகூட கொடுக்கல. எங்களை பாத்ரூம் போகக்கூட விடாம… பாத்ரூம் போகும்போதுகூட பெண் போலீஸை பின் தொடர்ந்து அனுப்பினாங்க மிரட்டினாங்க. சொல்லமுடியாத அளவுக்கு கஷ்டப்படுத்தினாங்க. ஒரு கட்டத்துக்குமேல எவ்ளோ பணம் வேணும்னு சொல்லு. இல்லைன்னா, உன் புருஷனோட கொலைக்கு நீதான் காரணமுன்னு உன் மேலேயே கேஸை போட்டு உள்ளே தள்ளிடுவேன்னு மிரட்டினார் இன்ஸ்பெக்டர் கென்னடி. அதுக்கப்புறம், மிரட்டி ஒரு பேப்பர்ல கையெழுத்து வாங்கிக்கிட்டாங்க. செத்துப்போன ரமேஷ் உடம்புல காயம் எதுவுமில்லைன்னு சொல்லச்சொல்லி என் மாமியாரை வீடியோ எடுத்துக்கிட்டாங்க. நாங்க, அனுபவிச்ச அத்தனை கொடுமைகளையும் வேதனைகளையும் என் புருஷனை கொலை பண்ணின குமாரும் எழிலரசியும் ஸ்டேஷன்ல இருக்கிற பெஞ்சுல உட்கார்ந்து கிண்டலா சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல நடக்குற கொடூரங்களை சினிமாவுல பார்த்திருக்கேன். அன்னைக்குத்தான், நேர்ல அனுபவிச்சோம்.
கவுன்சிலரின் கணவரும் அதிமுக கிளைச்செயலாளரான குமார் மேல அடிதடி, கொலைமுயற்சி, வீடுபுகுந்து தாக்குதல், ஆள்கடத்தல்னு ஏகப்பட்ட புகார்கள் இருக்கு. ஆனா, பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டிமடம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தாலும் ஆளுங்கட்சி பிரமுகர்ங்குறதால வாங்க வேண்டியதை வாங்கிக்கிட்டு ஆண்டிமடம் போலிஸார் நடவடிக்கை எடுக்கிறதே இல்ல. அதனாலதான், என் கணவரை இவ்ளோ தைரியமா கொலை பண்ணியிருக்காரு. தொடர்ந்து மிரட்டிக்கிட்டிருக்காரு குமார். என்னோட கணவர் கொலைப் புகாரையும் நடவடிக்கை எடுக்காததாலதான் உயரதிகாரிகளிடமும் கலெக்டரிடமும் மனு கொடுத்தேன். போலீஸ் மேலேயே புகார் கொடுக்கிறியா? உனக்கு எவ்ளோ திமிருன்னு என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டிக்கிட்டிருக்காரு இன்ஸ்பெக்டர் கென்னடி. நக்கீரன்தான் உண்மையை வெளியில கொண்டுவந்து என் புருஷன கொலை பண்ணினவங்க மேல நடவடிக்கை எடுக்கவைக்கணும்” என்று கோரிக்கை வைத்து கண்கலங்குகிறார் ஜெயலட்சுமி.
ஜெயலட்சுமி கொடுத்த புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அக்டோபர்-27 ந்தேதி ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடியை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “ரமேஷ் சூஸைடு பண்ணியிருக்கான். அவன், பொண்டாட்டி ஜெயலட்சுமி அம்மா வீட்டுக்குப்போனதும் அவன் பொம்பளைய வெச்சுக்கிட்டு அலைஞ்சிருக்கான். எஸ்.சி. கம்யூனிட்டி. புகார் கொடுத்தா பணம் கிடைக்கும்னு புகார் கொடுத்துக்கிட்டிருக்கு இந்த ஜெயலட்சுமி” என்றவரிடம், “யாரா இருந்தாலும் தூக்குமாட்டிக்கிட்டா போஸ்ட் மார்ட்டம் பண்ணனுமில்லையா? ஏன் பண்ணல?” என்று நாம் கேட்டபோது, “ஒரு மாசமா சொல்லல. மாஜிஸ்திரேட்கிட்ட பர்மிஷன் வாங்கித்தான் பிணத்தைத் தோண்டி எடுக்கணும் சார்” என்றார்.
அக்டோபர்-30ந்தேதி ரமேஷின் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தாமலேயே பிணம் தோண்டி எடுக்கப்படுகிறது. தனது கணவரது மர்ம மரணம் குறித்து பல்வேறு புகார்களை கொடுத்தும் அப்புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத… ஆண்டிமடம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கென்னடி உள்ளிட்ட காக்கிகளின் திரைக்கதை வசனம் அக்டோபர்-31 ந்தேதி பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது. இப்படியெல்லாம்கூட காவல்துறை கதை வசனம் எழுதுமா? என்று ஆச்சர்யப்படத்தக்க அந்த செய்தி இதுதான்…
‘அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமம் காலனி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்(வயது 33) இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். மேலும், ரமேஷ் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சிலம்பூர் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், ரமேஷின் மனைவி ஜெயலட்சுமி, சகோதரிகள் ஜெயந்தி, செல்வராணி, மாமியார் விருத்தம்பாள், உறவினர் எழிலரசி ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஆண்டிமடம் போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், ரமேஷின் சாவில் மர்மம் இருப்பதால் அவரது உடலை தோண்டி எடுத்தனர் போலீசார். அதன்படி, ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் கென்னடி, தாசில்தார் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் ஆகியோர் தலைமையில் ரமேஷின் உடலை தோண்டி எடுத்து ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் டாக்டர் கீதா உடற்கூறு ஆய்வு செய்தார். மரணம் குறித்து ரமேஷின் குடும்பத்தாரிடம் விசாரித்துவருகிறோம் என்றனர் ஆண்டிமடம் போலீஸார்’
-இதுதான் ஆண்டிமடம் காவல்நிலைய காக்கிகள் எழுதிய திரைக்கதை வசனம் என்பதை படிக்கும்போதே தெரிந்திருக்கும். இதுகுறித்து, விளக்கமறிய ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் கென்னடியை தொடர்புகொண்டபோது ஃபோனை அட்டெண்ட் செய்யவில்லை. மெஜேஸ் அனுப்பியும் ரிப்ளை செய்யவில்லை.
செப்டம்பர்-20 ந்தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார் ரமேஷ். இவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்ததாக செப்டம்பர்- 30 ந்தேதி பதிவு செய்து அக்டோபர்-10 ந்தேதி இறப்புச்சான்றிதழ் கொடுத்திருக்கிறார் சிலம்பூர் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன். இதனடிப்படையில் பார்த்தால்கூட ரமேஷ் இறந்த 10 நாளில் கிராம நிர்வாக அதிகாரிக்கு என்னக்காரணத்தினால் மரணம் நிகழ்ந்திருக்கிறது என்பது தெரிந்திருக்கும். ஆனால், கடந்த அக்டோபர்-28 ந்தேதிதான் ரமேஷ் மரணமடைந்தது தெரிந்ததுபோல் புகார் கொடுத்து அதன்பேரில் அக்டோபர்-30 ந்தேதி ரமேஷின் உடல் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “எனக்கு அவர் இறந்தது இப்போதுதான் தெரியும். அதனால்தான், புகார் கொடுத்தேன்” என்று சமாளித்தவரிடம், “ஏற்கனவே ஹார்ட் அட்டாக்கில் இறந்ததாக நீங்கள் இறப்புச்சான்றிதழ் கொடுத்திருக்கிறீங்களே எப்படி?” என்று கேட்டபோது, “எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது. கிராம உதவியாளர்தான் இதை ஹேண்டில் செய்தார்” என்று மீண்டும் சமாளித்தார்.
அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராம மக்களோ, இது அப்பட்டமான கொலை என்கிறார்கள். ஆனால், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்காமல் கொலையானவரின் குடும்பத்தையே குற்றவாளியாக்கி மிரட்டிக்கொண்டிருக்கிறது அரியலூர் மாவட்ட போலீஸ்.