Skip to main content

“வசனம் பேசினால் மட்டும் போதாது..” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Published on 01/04/2025 | Edited on 01/04/2025

 

Edappadi Palaniswami has said that tobacco trafficking should be eradicated

போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உணர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே நான் தொடர்ச்சியாக போதைப்பொருள் புழக்கம் குறித்து எச்சரித்து வருகிறேன்.

ஆனால், இன்றைய நாள் வரை போதைப்பொருளை ஒழிக்க இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு, ஆபரேஷன் 2.ஓ, 3.ஓ, 4.ஓ என ஓ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன. போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.

விளம்பர ஷூட்டிங்கில் வந்து "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்" என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதல்வர் ஸ்டாலின் போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த ஸ்டாலின் மாடல் அரசு உணர வேண்டும். இளைஞர் கொலையில் தொடர்புள்ளோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்