கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. மருத்துவர் கஃபீல்கான் எழுதிய 'The Gorakhpur Hospital Tragedy: A Doctor's Memory of a Deadly Medical Crisis' என்ற நூலின் தமிழாக்கமான 'கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம்: ஒரு மருத்துவரின் நினைவலைகள்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் மோடியின் ஒன்றிய அரசு, பல்வேறு குளறுபடிகளைச் செய்தது. சர்வதேச விமானப் போக்குவரத்தை நிறுத்தாமல் கொரோனா பரவலுக்கு வழிவகுத்தது, இஸ்லாமியர்களின்மீது பழியைத் தூக்கிப்போட்டது, திடுதிப்பென லாக்டௌனை அறிவித்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாடுமுழுக்க நடக்கவிட்டுப் பலர் மரணிக்கக் காரணமானது.. என அடுக்கிக்கொண்டே போகலாம். கொரோனா காலத்தில் மட்டுமல்ல, 2017-லும், பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில், கோரக்பூர் நகரிலுள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரியின், நேரு மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், 63 குழந்தைகள், 18 முதியோர் பரிதாபமாக இறந்தனர். அப்போது உடனடியாக செயல்பட்டு, சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி, ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் மருத்துவர் கஃபீல்கான். அவர் அங்குதான் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்குவதில் முறைகேடு செய்ததால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை கஃபீல்கான் அம்பலப்படுத்தினார்.
யோகி அரசோ, தனது தவறை மறைப்பதற்காக இஸ்லாமியரான மருத்துவர் கஃபீல்கான் மீதே பழியைத் தூக்கிப் போட்டு, அவரைக் கைது செய்து சிறையிலடைத்தது. ஏன் அவ்வளவு பதட்டம்? இதே கோரக்பூர் மக்களவை தொகுதியில் தான் தொடர்ச்சியாக 5 முறை யோகி ஆதித்யநாத் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அப்படிப்பட்டவரின் தொகுதியிலுள்ள மருத்துவமனையில் குழந்தைகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தால் அவருக்குத்தானே அசிங்கம்? அதனால்தான் இவ்வளவும்! நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின், கஃபீல் கான் விடுதலையானார். குழந்தைகள் உயிரிழப்பில் இவருக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்று விசாரணை கமிஷன் தெரிவித்த போதிலும், அரசுப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட கஃபீல்கானுக்கு மீண்டும் பணி வழங்க மறுத்தது யோகி அரசு. அதையடுத்து தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தார்.
இந்நிலையில், மருத்துவர் கஃபீல்கான், தனது சிறை அனுபவங்களைத் தொகுத்து நூலாக்கினார். அதன் தமிழாக்கம்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழாவில், ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன் நூலை வெளியிட்டார். இந்நிகழ்வில் சி.பி.எம். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், "சிறைக்கு செல்லும்போது கஃபீல்கான் டாக்டராக இருந்தார். சிறையிலிருந்து வெளியே வரும்போது எழுத்தாளராகவும் மாறியுள்ளார். ஆக்சிஜன் இல்லாததால் நிகழ்ந்த மரணத்தை யோகி அரசு மறைக்க முயன்றது. அதை கஃபீல்கான் வெளிக்கொண்டு வந்தார்'' என்று பாராட்டினார்.
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, "கஃபீல்கான் நூலை ரஜினி படித்திருந்தால், யோகி ஆதித்யநாத் காலில் விழுந்திருக்கமாட்டார். ஊழலற்றவர்கள் என்னும் பா.ஜ.க.வினரை அம்பலப்படுத்தவேண்டும்'' என்றார். நீதியரசர் அரிபரந்தாமன், "போராட்டத்தின் அடையாளமாக இந்த புத்தகம் திகழ்கிறது. மோடி வீழ்த்தப்படுவார். ‘இந்தியா’ அவரை தோற்கடிக்கும்” என்றார் சூசகமாக.
விழாவில் ஏற்புரை நிகழ்த்திய டாக்டர் கஃபீல்கான், "2017ஆம் ஆண்டில் கோரக்பூர் மருத்துவமனை சோகம் பற்றி கேட்கும்போது மக்களின் மனதில் இரண்டு முகங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். எல்லோரும் யோகி ஆதித்யநாத், டாக்டர் கஃபீல்கான் பற்றி மட்டும் நினைக்கிறார்கள். ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த 63 குழந்தைகள், 18 பெரியவர்கள் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். என்னை கைது செய்தபோது உணவு, தண்ணீர் கொடுக்காமல் கடுமையாகத் தாக்கினார்கள். என் உடலில், தோல் பல இடங்களில் உரிந்ததால், என்னால் மல்லாக்க படுக்கக்கூட முடியவில்லை. உணவு மயக்கம் போக்க, சிறைக்கு வெளியே வளர்ந்திருந்த புல்லைப் பறித்து சாப்பிட்டேன். 2018, ஜூன் 10ஆம் தேதி என் சகோதரர் காசிப்ஜமீல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தற்போதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. உ.பி.யில் பாதுகாப்பற்றவனாக உணர்ந்தேன்” என்றார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் தனது அனுபவம் குறித்து கூறிய மருத்துவர் கஃபீல்கான், "நான் தமிழ்நாட்டில் தான் தற்போது வேலை பார்த்துவருகிறேன். இங்குள்ள மக்களிடம் எந்த வெறுப்புணர்வும் இல்லை. இங்கு எல்லா வீட்டிலும் சாமி அறை சிறிய அளவிலாவது இருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் என்னை ஒரு இஸ்லாமிய மருத்துவராக பார்த்ததில்லை. குழந்தைகள் நல மருத்துவராக மட்டுமே பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் மருத்துவமனைக் கல்லூரிகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன. பொதுத் தேர்வில் 80% மதிப்பெண் பெற்ற ஒருவர் மருத்துவராக முடியாது, அதே சமயம், 20% மதிப்பெண் நீட் தேர்வில் பெற்றாலே மருத்துவராக முடியும் என்பது அநீதி இல்லையா?. இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டிருக்கிறது'' எனக் குறிப்பிட்டது தற்போது வைரலாகியுள்ளது.
தெ.சு.கவுதமன்