தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் வே.பாலு நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அண்ணா குறித்தான விவகாரத்தில் அ.தி.மு.க. அமைதியாக சென்றதற்கு அண்ணாமலை சொன்ன விஜிலன்ஸ் இருக்கிறது என்றதும் காரணம். சமீபத்தில், பாஜகவினர் சிலர் உதயநிதி கருத்திற்கு நாக்கை அறுக்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருந்தனர். அதற்கு, அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது, நான் அண்ணாமலையை பாராட்டினேன். ஆனால், மீண்டும் சில நாட்களிலே வேறொரு பிரச்சனையை அவர் கிளப்பியுள்ளார். சனாதன சர்ச்சையில் கூட உதயநிதி கூறாத ஒன்றை வைத்து மோடியும், அமித்ஷா போன்றோர் விமர்சித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக வருகிற தேர்தலில் சனாதனத்தை மையப்படுத்தி தான் எதிர்கொள்ளவிருகிறார்கள். சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் ஆதி சங்கரர் அவர்களுக்கு நினைவிடம் கட்டுவதற்கு, செய்தித் தாளில் எட்டு பக்கம் விளம்பரம் கொடுத்திருந்தனர். அதில், "சனாதனத்தை காப்போம் " எனவும் குறிப்பிட்டிருந்தனர். அண்ணாமலை இந்த பாணியில் பேசுவதற்கு காரணமே சுப்ரமணிய சாமி போன்றோரின் தொடக்கம் தான்.
இவ்வளவு, ஏன் இதே சுப்ரமணிய சாமி, ரங்கராஜன் நரசிம்மன் பாஜகவை சில நேரங்களில் விமர்சித்தனர். அதற்கெல்லாம், அண்ணாமலை மண்புழு அளவிற்கு கூட எதிர்வினையாற்றவில்லை. எனவே, இதனையெல்லாம் பற்றி பேசாத அண்ணாமலை, ஏன் தேவரை தற்போது பேசுகிறார். இதற்கு முக்கிய காரணம், தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சாதிகளை தன்வயப்படுத்த திட்டமிடுகிறார்கள். இதற்கு முன் ஜெயலலிதாவை கூட தேவரின பெண்ணாக பாவித்த விசயங்களும் நடந்துள்ளது.
முத்துராமலிங்கத் தேவர் போன்றவரை மேடையில் வைத்து "அவர் அண்ணாவிற்கு எதிராக பேசிவிட்டார்" என சொல்கிறார்கள். அன்று நடந்த அந்த விழாவில் அண்ணாவின் கருத்தும் முத்துராமலிங்க தேவரின் கருத்தும் சற்று வேறுபட்டவை. எனவே, பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு அந்த கூட்டம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதனை விளக்கி தற்போது தமிழ் ஹிந்து பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டது. ஏன், இரு திராவிடக் கட்சிகளிலும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை கணிசமாக இடம்பெற வைத்துள்ளது. மேலும், அந்தப் பிரிவினர் இரண்டறக் கலந்து இரு கட்சிகளும் செயல்பட்டு வருகிறார்கள். இதில், அண்ணாமலைக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை.
மேலும், அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களை குறித்து பேசியதால் இன்றைய தலைமுறைகள் அவர்களைப் பற்றி படிப்பதற்கு எளிய வழியை அண்ணாமலை உருவாக்கிவிட்டார். அண்ணாதுரை என்பவர் தி.க.வில், இருந்து தி.மு.கவைத் தொடங்கினார். அவர் வாழ்நாளில் பல கருத்துகளையும் விமர்சனங்களையும் வைத்து வந்துள்ளார். கம்ப ராமாயணத்தை விமர்சித்து "கம்பரசம்" எனவும் புத்தகம் வெளியிட்டார். எனவே, இதனை வைத்து அந்த காலத்தில் எதிர்க்கருத்து கொண்ட மக்கள் இருந்ததை நாம் அறியலாம். ஆனால், இன்றைக்கு பா.ஜ.க. கலவரத்தைத் தூண்டவே எதிர்பார்க்கிறது.
சமீபத்தில் கூட மணிப்பூரில் ஒரு ராணுவ வீரர் சுடப்பட்டார். இன்று வரை அங்கு கலவரம் முடிவிற்கு வரவில்லை. அதனைக் குறித்து அண்ணாமலை ஒருபோதும் பேசுவதில்லை. மாறாக, தினம் தினம் சனாதனம், உதயநிதி என பேசி பக்குவமில்லை என்பதை நிரூபிக்கிறார். இதற்கு காரணம் ,"மூன்று சதவிகித ஆட்கள் சவுகரியமாக இருக்க. 97% சதவித மக்கள் சண்டையிட்டுக் கொள்ள" இது போன்று நடந்துகொள்கிறார்கள். அண்ணாமலை ஒரு போதும் அவர்களின் தலைவர்களைப் பற்றிப் பேசுவதில்லை. தொடர்ந்து, காமராஜர்,கக்கன், தேவர், அடுத்து பெரியார் என்று தான் பேசுகிறார்கள். இறுதியாக சொல்ல வருவது, "அண்ணாமலை தான் தலைவராகி விட்டோம் என்ற தலைக்கனத்தில்" வந்த கருத்து தான் இது.
அண்ணாமலை சில நிர்ப்பந்தங்கள் அடிப்படையில் தான் இது போன்று பேசிவருகிறார். காரணம் எஸ்.வீ.சேகர், எச்.ராஜா போன்றோர்களின் காய் நகர்த்தலாக இருக்கலாம். ஏனென்றால், அண்ணாமலையை தமிழ் மக்களுக்கு எதிரியாக மாற்றவும் திட்டம் உள்ளது. அண்ணாமலையும் பெரியார் குறித்து இழிவாக இதுவரை பேசியதில்லை. சென்ற வாரம் எச்.ராஜா பெரியாரை அவன் இவன் என்றெல்லாம் பேசியுள்ளார். இளம் தலைமுறைக்கு நான் சொல்ல வருவது, "உலகின் பல தலைவர்கள் தங்கள் சுயசரிதையில், தாங்கள் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல தான் பெரியாரும் செய்தார். எனவே, இதற்கெல்லாம் ஒரு மன தைரியம் வேண்டும்" என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதெல்லாம் நேர்மையின், அறத்தின் பால் சார்ந்தது. தான் செய்த அனைத்து நல்லது கெட்டதுகளையும் ஒருவர் பதிவிட்டால் அதனை இழிவு படுத்துகிறீர்கள். இதுவே, கண்ணதாசன் செய்தால் அவரை கவிஞர் என்கிறார்கள். இவர்களைப் போன்று பல எழுத்தாளர்கள் தாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளனர். அது ஒரு மனித மரபு என்பதை உணர வேண்டும். இதெல்லாம் தெரியாமல் பெரியாரை மிருகம் என சொல்பவர்கள்,"நிச்சயம் மிருகத்திற்கு பிறந்தவர்களாகத் தான்" இருப்பார்கள். நான் சொல்கிறேன்,“இது போன்று சில்லூண்டி மனிதர்களை கோவிலினுள் அழைத்துச் சென்றது தான் பெரியார் செய்த மிகப்பெரிய தவறு”. அதே சமயம் பெரியார் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாடுபட்டவர். அவரைக் குறித்து பேசுவதுதான் என்னை கோபமடைய செய்கிறது. அதேசமயம் இவர்கள் ஏன் தமிழ்நாட்டை பற்றி மட்டும் பேசுகிறார்கள். பிற மாநிலங்களை கவனிக்கவில்லை? இதற்கு காரணம் அவர்கள் நம் தமிழ்நாட்டு மக்களின் சித்தாந்தங்களை உடைக்கவே திட்டமிடுகிறார்கள். இந்த வேலையை செய்யத்தான் அண்ணாமலையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
அண்ணாமலை, தமிழிசை போன்றவர்கள் பாஜகவில் சேர்ந்து தங்களின் அதிகாரத்தை பயன்படுத்த சொந்த மக்களுக்கு எதிராக செயல்படுவதில் எனக்கு மன வருத்தம் தான். இன்றைக்கு உதயநிதி பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளாகி அனைவரும் அது குறித்து வாசிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, இதெல்லாம் ஆரோக்கியமான விவாதமாக இருந்தால் நல்லது. அதேபோன்று அண்ணாமலையிடம் கொஞ்சம் பக்குவம், நாகரீகம் , அறம், அன்பு, அரவணைப்பு, பணிவு, போன்றவை வேண்டும். இவையெல்லாம் ஒன்றிணைந்தால் தான் துணிவிற்கு அர்த்தம் இருக்கும். இதனால், அண்ணாமலை இது போன்று பிரச்சனைகளில் சிக்க வேண்டாம். இறுதியாக, “எத்தனை முறை தமிழர்களை சீண்டிப் பார்த்தாலும் அவர்களின் பண்பை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது". ஏனென்றால் தமிழன் என்பது ஒரு தத்துவம்.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...