இந்தியாவின் ரா அமைப்பு என்னை கொலை செய்யப்பார்க்கிறது என அமைச்சரவை கூட்டத்தில் இலங்கை அதிபர் மைதிரிசிறிசேனா பேசியது உலக அரங்கில் பலத்த பரபரப்பாக்கியது.
இந்நிலையில் அதிரடியாக தன் நாட்டு பிரதமரை மாற்றி உலக அரங்கில் மீண்டும் பரபரப்பை உருவாக்கியுள்ளார் அதே இலங்கை அதிபர்.
இலங்கை பிரதமராக இருப்பர் ( இருந்தவர் ) ரணில் விக்ரமசிங்கே. அக்டோபர் 26ந் தேதி இரவு, திடீரென தனது அலுவலகத்துக்கு முன்னால் அதிபர் மகிந்தாராஜபக்சேவை வரவைத்த தற்போதைய அதிபர் சிறிசேனா, மகிந்தாவை பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு எந்தவித அறிவிப்பும் தராமல் பதவிபிரமாணம் செய்துவைத்துவிட்டு அதன்பின் சாவகாசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டினருக்கு விற்றது, நாட்டின் பொருளாதாரம் சீரழிவு ஏற்படுத்தியதால், நாட்டின் பாதுகாப்பில் குளறுபடி நடந்துள்ளது உட்பட பல விவகாரங்களால் ரணில்விக்ரம்சிங்கை அதிபர் என்கிற முறையில் எனக்கு வழங்கப்பட்டுள்ள இலங்கை அரசியல் சாசனம் சட்டம் 42(4) பிரிவின் அதிகாரத்தின்படி பிரதமர் பதவியில் இருந்து நீக்குகிறேன் என அறிவித்துள்ளார். அதிபரின் இந்த அறிவிப்பு மற்றும் பதவி பிரமாணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, நானே பிரதமர் என அறிவித்துள்ளார் ரணில்.
2004 முதல் 2005 வரை பிரதமராக இருந்த மகிந்தா பின்னர் நடந்த தேர்தல் மூலமாக 2005ல் அதிபராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார். 2009 இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபின் அதிபராக இருந்த மகிந்தா ராஜபக்சேவின் புகழ் பெருமளவில் உயர்ந்தது. இலங்கையின் நாயகனாகவே சித்தரிக்கப்பட்டார். உடனே தேர்தலை நடத்தி மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 2015ல் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை அரசியல் சாசன சட்டப்படி ஒருவர் இருமுறைக்கு மேல் அதிபராக இருக்கமுடியாது என்கிற சட்டத்தை திருத்தி மூன்றாவது முறையாக அதிபராக முயன்று தேர்தல் நின்றார். இந்த முடிவுக்கு அதிபராக இருந்த மகிந்தாவின் ஸ்ரீலங்கா சுதந்தரா கட்சியிலும் எதிர்ப்புகள் கிளம்பியது. கட்சியின் துணை தலைவராகவும், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மைதிரிபாலாசிறிசேனாவும் எதிர்ப்புக்காட்டினார். இது சர்வாதிகாரமானது என கொதித்தன எதிர்கட்சிகள்.
போர் முடிவுறும் வரை இந்தியாவின் சொல்பேச்சை ஓரளவு கேட்டு வந்த ராஜபக்சே, போர் முடிவுக்கு பின் சீனாவின் செல்லப்பிள்ளையாகிப்போனார். இதனால் அதிருப்தியில் இருந்த இந்தியா, அதிபர் தேர்தலில் கவனம் செலுத்தியது. எதிர்கட்சிகளை ஒன்றிணைத்தது. சிறிசேனாவை அதிபருக்கான தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தியது. சிறிசேனா வெற்றி பெற்றார். ராஜபக்சே குடும்பம் சுதந்திரா கட்சியில் இருந்து நீக்கப்பட்டது. அதன் தலைவராக சிறிசேனாவே பொறுப்பு ஏற்றுக்கொண்டார். நாடாளமன்ற தேர்தலில் சுதந்திரா கட்சியும், ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து போட்டியிட்டன. இதில் ரணிலின் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிறிசேனா கட்சி ஆதரவு தெரிவிக்க அதன்அடிப்படையில் ரணில் பிரதமராக தேர்வானார்.
இந்நிலையில் ராஜபக்சே புதியதாக இலங்கை மக்கள் முன்னணி என்கிற பெயரில் கட்சி தொடங்கினார். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மகிந்தா கட்சி பெரும் வெற்றி பெற்றது. உன்னால் தான் என் பெயர் கெட்டது என சிறிசேனாவும், உன்னால் தான் என் கட்சி தோற்றது என ரணிலும் சண்டையிட்டுக்கொண்டனர். இந்த சண்டையின் ஒரு பகுதியாக தான் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரா என்னை கொலை செய்ய முயல்கிறது என்கிற குற்றச்சாட்டை அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் சிறிசேனா வைத்தார். இது பெரும் சர்ச்சையானது. ( இதுப்பற்றி கட்டுரை நமது தளத்தில் உள்ளது ) இந்த சண்டை முற்றிய நிலையில் தான் பிரதமர் மாற்றம் தடாலடியாக நடைபெற்றுள்ளது.
ரணில் மூலமாக சிறிசேனாவை அதிபராக்கியது இந்தியா, பின்னர் ரணிலை பிரதமராகவும் உருவாக்கியது. இதற்கு பிரிதிபலனாக இந்தியாவுக்கு சாதகமாக ரணில் இருந்தார். ஆரம்பத்தில் ரணில் பேச்சை கேட்டாலும் பின்னர் சீனாவின் நெருங்கிய கூட்டாளியானார் சிறிசேனா. சீனாவின் இராஜந்திர நடவடிக்கையால் சிறிசேனா அதிரடியாக அரசியலில் காய்களை நகர்த்தினார். இந்தியாவின் நண்பனாக அமெரிக்காவின் நெருங்கிய தோழனாக இருந்த ரணிலால் சிறிசேனாவை சமாளிக்க முடியவில்லை.
ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், அதற்கு பதில் ராஜபக்சேவை பிரதமராக்க வேண்டும் என அதிபர் சிறிசேனாவுக்கு நெருக்கடி தந்தது சீனா. இதற்கு இந்தியா ஒப்புக்கொள்ளாது என சிறிசேனா கூறியதாக கூறப்படுகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு பாஜக எம்.பி சு.சாமி அழைப்பின் பேரில் இந்தியா வந்த ராஜபக்சே, இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களிடமும், பிரதமர் மோடியிடம், இந்தியாவுக்கு நான் நெருங்கிய நண்பராக இருப்பேன் என சமாதானக்கொடி பறக்கவிட்டார். ரணிலை முழுவதும் நம்பமுடியாது என்பதால் ராஜபக்சே வுடன் கைகுலுக்கியது. சந்திப்பு குறித்து சிறிசேனாவுடன் விவாதித்தபின்னர், பிரதமர் மாற்றத்துக்கு இந்தியா ஒப்புக்கொள்ளாது என்பதால், சீனாவின் திட்டப்படி ரா என்கிற அஸ்திரத்தை ஏவினார் சிறிசேனா. இந்தியா அசந்த நேரமாக பார்த்து ரணிலை நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக்கிவிட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திரம் தோல்வியை சந்தித்துள்ளது என்கிறது அரசியல் நோக்கர்கள் வட்டாரம். இந்த மாற்றத்தை பாஜக எம்.பி சு.சாமி வரவேற்றுள்ளார். இந்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் கூறவில்லை.
பிரதமர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா வெளியுறத்துறை பிரிவு, இலங்கை அரசியல் சாசன சட்டப்படி நடந்துக்கொள்ள வேண்டும். ஐ.நா வில் இலங்கை அரசாங்கம் தந்துள்ள வாக்குறுதிப்படி நீதிவிசாரணை நடத்தவேண்டும், பதில் கூற வேண்டும் என்றுள்ளது. அதனை காணும்போது அமெரிக்கா இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.