பல அரிய பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளதாகவும், இந்தியாவின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகமுமான எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறது அரசு. இந்த பணிகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்கவும் கெடு விதித்துள்ளது. பேட்டரியால் இயங்கும் இருக்கைகள், பிரெய்லி எழுத்துமுறை, குரல் மூலம் வழிகாட்டும் வசதி போன்ற பல வசதிகளை ஏற்படுத்த உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் மாற்றுத் திறனாளிகள் நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களளையும், தொல்லியல் இடங்களையும் பார்வையிடும் வகையில் பல்வேறு வசதிகளை இந்திய தொல்லியல் துறை மேற்கொள்ளவுள்ளது என செய்திகள் வெளியாகின. அதைப்பற்றி....
தமிழ்நாட்டில் மட்டும் பழங்கால நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் இடங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என 403 இடங்கள் இருக்கிறது. இந்திய தொல்லியல்பொருள் ஆய்வுத்துறை கலாச்சார அமைச்சகத்தின் கீழ், ஆரம்பகட்டமாக 25 பழங்கால தளங்களில் ஏழு இடங்களில் (மாமல்லபுரத்திலுள்ள ஐந்து ரதங்கள், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் , வேலூர் கோட்டை, காஞ்சி கைலாசநாதர் கோவில், செஞ்சிக் கோட்டை, சித்தன்னவாசல் ஓவியம் மற்றும் கொடும்பாளூரிலுள்ள மூவர் கோவில்) "அடரஸ் அமரக் அபியான்" (ADARSH AMARAK ABHIYAN) என்கிற திட்டத்தின்கீழ் நினைவு சின்னங்களை அமைக்கவுள்ளது. 75 நினைவு சின்னங்களை இந்த பட்டியலில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாய்வுப்பாதைகள், பார்வையற்றவர்கள் படிப்பதற்காக பிரெய்லி எழுத்துமுறையிலான பலகைகள் மற்றும் அடையாளங்கள் பற்றிய தகவல்கள்,தொட்டுணரும் வகையிலான தரை, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள்கொண்ட ஓய்வு அறைகள் போன்றவை மாற்று திறனாளிகளுக்காக அமைக்கப்படும் வசதிகளாக உள்ளன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய தொல்லியல்பொருள் ஆய்வுத்துறை கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இந்த நினைவு சின்னங்கள் எல்லாம் உரிய முறையில் பாதுகாக்கப்படும். தூய்மை இந்தியா திட்டமும் இங்கு இணைக்கப்படும். நினைவுச்சின்னங்கள் பற்றிய குறும்படங்கள் மற்றும் விளக்கப்படங்கள் மூலமாக புராதான சின்னங்களின் முக்கியத்துவமும், பெருமைகளும் விவரிக்கப்படும்.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.68 கோடி பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். இது மக்கள் தொகையில் 2.21 சதவீதமாகும். தமிழ்நாட்டில் மட்டும் 11.79 லட்சம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். மக்களின் பொது பயன்பாட்டுக்காக கட்டப்படும் நூலகங்கள், மருத்துவமனைகள், அருங்காட்சியங்கள், உணவகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், தனியார் நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள், வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள் உள்ளிட்ட 14 விதமான கட்டிடங்களிலும் சக்கர நாற்காலியுடன் வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு மின் தூக்கிகள், படிகட்டுகளுக்கு அருகில் சுவர் இருந்தாலும் 90 செ.மீ உயரத்தில் ஒரு கைப்பிடியும், 75 செ.மீ உயரத்தில் ஒரு கைப்பிடி, தரை தளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கழிப்பறைகள், கார் நிறுத்தங்களில் 10 சதவீதம் இடம் (குறைந்தபட்சம் இரண்டு கார்கள் நிறுத்த இடங்கள்), இந்த இடங்கள் வாயிலுக்கும், படிகட்டுகளுக்கும் அருகில் இருக்க வேண்டும்.
ஆனால் நடைமுறையில் கைப்பிடி கூட இல்லாத சாய்தளங்களை மட்டும் அமைத்து அந்த கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்று திருப்தியடைந்து விடும் அரசு அதிகாரிகள். பேருந்து நிலையங்களிலும், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களிலும் கூட மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற கழிப்பறைகள் இல்லாத நிலை உள்ளது.
இப்படி பல திட்டங்களை அவர்கள் மேற்கொண்டாலும், மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளுடன் வீதிக்கு வந்தபோது அவர்களை நடத்திய விதம் ஏற்றுக்கொள்ள முடியாதபடிதான் இருந்தது. இந்த திட்டங்களாவது விரைவில் நிறைவேற்ற படவேண்டும். ஒருபுறத்தில் அரசு பல்வேறு உத்தரவுகளில் மாற்று திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்தாலும், மறுபுறம் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த ஆளும் அரசுகளும், அதிகாரிகளும் முற்படுவதில்லை அதை அவர்கள் செய்ய வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் குரலாக உள்ளது.
-ஆதித்யன்