தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டுள்ளது. முக்கிய கட்சிகள் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. பல இடங்களில் பணபட்டுவாடா நடைபெற துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும், ஓ.பி.எஸ் மற்றும் பழனிசாமியின் பிரச்சாரம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளிட்டவை குறித்து அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தியிடம் நாம் சில கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கில் வேட்பாளர்கள் தீயாக வேலை செய்வதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் இந்த தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள், அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
நீங்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சொல்வதே ஆச்சரியமாக இருக்கிறது. அதிமுகவில் யார் பிரச்சாரம் செய்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்கிறாரா? பன்னீர்செல்வம் உப்புக்கு சப்பாணியாக பிரச்சாரம் செய்வதாகவே வைத்துக்கொள்வோம். வேறு யார் செய்கிறார்கள்? எடப்பாடி பழனிசாமியா? அவர் பிரச்சாரம் செய்கிறார் என்றால் போதும், ரொம்ப எளிதாக திமுக வெற்றிபெற்றுவிடும். எடப்பாடியை நம்பித்தான் ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். எடப்பாடி மக்களிடம் முகத்தை காட்டாமல் இருந்தால் கூட சில இடங்களில் அதிமுக வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் அவர் திருமுகத்தை மக்களிடம் காட்டினால் கோபத்தில் அனைத்து இடங்களில் அதிமுக தோற்றாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
நான் விளையாட்டாக இப்படி பேசவில்லை, கள நிலவரத்தைத்தான் கூறுகிறேன். அதிமுக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திலேயே இல்லை, களத்தில் இல்லாத கட்சி எப்படி வெற்றிபெற முடியும். அம்மா அவர்கள் போராடி மீட்ட கட்சியை இன்றைக்கு இவர்கள் அடகு வைத்துவிட்டார்கள். எனவே ஸ்டாலினின் தேர்தல் வேலைகளை இவர்கள் மிச்சப்படுத்தி திமுகவை வெற்றிபெற வைப்பார்கள் என்பது மட்டும் நிஜம். எனவே தமிழக முதல்வர் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் காணொளிக் காட்சி வாயிலாகவே பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம். போதாக்குறைக்கு எடப்பாடி தன்னுடைய முகத்தைக் காட்டி திமுக அதிக வாக்குகளை பெற வைக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்.
நீங்கள் இப்படி கூறுகிறீர்கள், ஆனால் எடப்பாடி பழனிசாமி வேறு மாதிரி பேசுகிறார். அதிமுகவின் பலத்தை நிரூபிக்கின்ற தேர்தல் இது என்று கூறுகிறார். எங்கள் சக்தி என்ன என்று தேர்தல் முடிவு வரும் போது அனைவருக்கும் தெரியவரும் என்று தொடர்ந்து கூறி வருகிறாரே?
நடந்துமுடிந்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அவர்களின் சக்தி என்ன ஆனது. ஏன் சக்தி குறைந்தது. இவர்கள் எத்தனை இடத்தில் ஜெயித்தார்கள் என்று கூற சொல்லுங்கள். எடப்பாடி வெற்று பேச்சு பேசுவதில் கில்லாடி. அவர் பேசிக்கொண்டே காலத்தை ஓட்டி கொண்டிருக்க வேண்டியதுதான். அவரால் அதிமுகவுக்கு எந்த பயனும் வர போவதில்லை. இந்த தேர்தலில் மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க என்ன தேவை ஏற்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதா? தந்தை, மகனை நள்ளிரவில் யாராவது கொலை செய்தார்களா? தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போல ஏதேனும் சம்பவம் நடைபெற்றுள்ளதா? அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க இந்த காரணங்கள் இருக்கிறது என்று எடப்பாடியால் ஒரு காரணத்தை கூற முடியுமா? நிச்சயம் அவரால் எந்த ஒரு காரணத்தையும் கூற இயலாது. இவர் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு செய்த எந்த ஒரு அநியாயத்தையும் தற்போதைய அரசு செய்யவில்லை. எனவே மக்கள் எடப்பாடியை வெறுத்து வருகிறார்கள். அவர் பிரச்சாரம் செய்யாமல் இருப்பதே அதிமுகவுக்கு மிக நல்லது.
ஆனால் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, இதனால் இந்த தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள், மக்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று போகிற இடங்களில் எல்லாம் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறாரே?
நிச்சயம் ஸ்டாலின் மீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள். ஊழல் செய்தவர்கள் மீது திமுக அரசு அமைந்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்த நிலையில் இன்னும் ஏன் அவர்கள் மீது வழக்குப்போடவில்லை, சிறையில் அடைக்கவில்லை என்று மக்கள் அவர்கள் மீது கோபமாக இருப்பது என்னவோ உண்மைதான். மக்களின் கோபம் தீர கொடநாடு கொள்ளை, கொலை முதல் பொள்ளாட்சி பாலியல் பலாத்காரம் வரை அனைத்தும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு இந்த படுபாதகர்களுக்கு உரிய தண்டனையை கொடுக்க வேண்டும். இந்த குற்றவாளிகளை ஆதரித்த இவர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவ்வாறு செய்தால் மட்டுமே ஸ்டாலின் மீது இருக்கும் கோபம் மக்களுக்கு குறையும். இதைத்தான் ஸ்டாலின் மீது மக்களுக்கு கோபம் இருப்பதாக எடப்பாடி கூறியிருக்கிறார்.