கரோனா நோய்ப் பரவலை தடுக்கும் வகையில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் கடலூர், விழுப்புரம், நாகை போன்ற புதுச்சேரி மாநிலத்தின் எல்லையோர பகுதிகளைச் சார்ந்த குடிவெறியர்கள் தமிழ்நாட்டுக்குள் மது பாட்டில்கள் வாங்க வருகின்றனர்.
அதையடுத்து புதுச்சேரி மாநிலத்திலும் மதுக்கடைகள் திறக்க நேற்று (18.05.2020) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நேற்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் மதுபானக் கடைகளை திறக்க கடை உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் அரசின் வருவாயைக் கூட்ட புதுச்சேரியிலும் மதுபானக் கடைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை (18.05.2020) முதல் மதுக்கடைகள் திறக்கப்படும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடை திறந்திருக்க வேண்டும்.
மதுபானங்கள் வாங்குபவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர், வருவாய்த்துறையினர் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் சாராயக்கடை, கள்ளுக்கடை என அனைத்து வகையான கடைகளும் திறக்க அனுமதித்துள்ளோம். அதேசமயம் மதுபானங்களை அமர்ந்து சாப்பிடும் வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
ஆனால் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "மதுக்கடைகளைக் காலை 7 மணியில் இருந்து திறக்க முடிவு எடுக்கப்பட்டது. வெளிநாட்டு மது வகைகளும் 5 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரவை கூட்ட முடிவின் படி மதுபானக்கடைகள் திறக்க துணை நிலை ஆளுநர் ஒப்புதல் கிடைக்காததால் நாளை (19.05.2020) திறக்கப்படாது. துணை நிலை ஆளுநர் ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட வேண்டும். ஆதலால் நாளை (19.05.2020) மதுக்கடைகள் திறக்கப்படாது. அரசாணை வெளியிடப்பட்டு நாளை மறுநாள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.