5. ஐரோப்பியர்களுக்கும் சாமரம் வீசிய தமிழன்!
“மக்களின் நலனுக்காக செயல்பட ஒருவர் கூட இல்லை!. மக்கள் துன்பத்தை அமைதியாக சகித்துக் கொண்டார்கள். தாங்கள் அனுபவிக்கும் கடும் துன்பம் பற்றி, அவர்கள் ஒரு பதிவு கூட செய்யவில்லை”
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழக சமூகத்தின் நிலையைப் பற்றி, ஆங்கில அதிகாரி சார்லஸ் ஸ்டூவர்ட் குரோல் என்பவர் 1688ம் ஆண்டு இப்படி எழுதியிருக்கிறார்.
பாண்டியர்கள் தமிழகத்தை ஆண்ட 13ஆம் நூற்றாண்டில், தமிழகத்தின் நிர்வாகத்தில் முஸ்லிம்கள் பங்கெடுத்துள்ளனர். அதாவது முஸ்லிம்களிடம் பாண்டியர்கள் தோல்வி அடைந்தனர். அதைத்தொடர்ந்து, சுல்தான்கள் தாங்களே ஆட்சி செய்யும் நிலைக்கு வந்தனர். மதுரை சுல்தான்கள் ஆட்சி காலம் முடிந்து, விஜயநகர ஆட்சி அமைந்தது. அந்தக் காலகட்டத்தில், இஸ்லாமியர்கள் தமிழகத்தின் கடலோர பகுதியில் பலம் பெற்று இருந்தனர்.
1532 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களைச் சமாளிக்க முடியாத கடலோரத் தமிழர்கள் சிலர், கொச்சியில் ஆட்சி செய்த போர்ச்சுக்கீசியரிடம் உதவி கேட்டுப் போனார்கள். அப்படி உதவி கேட்டுப் போனவர்கள் முதலில் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு உதவியாக வந்த போர்ச்சுக்கீசியரின் படை இஸ்லாமியர்களைத் தோற்கடித்தது.
அதன்பின்னர், 20 ஆயிரம் பேர் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். இப்படியாக 1532 ஆம் ஆண்டு ஐரோப்பியர்கள் தமிழகத்தின் கடலோரப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு தமிழர்களே உதவியாக இருந்தனர்.
முதலில், தூத்துக்குடி அருகே உள்ள புன்னைக்காயலை தலைமை இடமாகக் கொண்டு போர்ச்சுக்கீசியர்கள் செயல்பட்டனர். அதைத் தொடர்ந்து தங்கள் தலைமை இடத்தை தூத்துக்குடிக்கு மாற்றினர்கள். இந்தக் காலகட்டத்தில் போர்ச்சுக்கீசியர்களுக்கும் நாயக்கர் ஆட்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது சண்டைகள் நடந்தன.
இதனிடையே, 1605 ஆம் ஆண்டு கிழக்கிந்திய டச்சு கம்பெனி தொடங்கப்பட்டு, இந்தியாவின் கடற்கரை பகுதிகளை இந்திய மன்னர்களிடமிருந்து கைப்பற்றி, கோட்டை கொத்தளங்கள் மற்றும் குடியிருப்புகளை அமைத்து வணிகத்தை தொடங்கியது.
அவர்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியும் இந்தியாவைக் குறிவைத்தது. ஆனால், போர்ச்சுக்கீசியரின் ஆக்கிரமிப்பு, டச்சுக்காரர்களின் வணிகம் ஆகியவற்றுக்கு இடையே பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி போட்டி போட முடியவில்லை.
வாசனைப் பொருட்களின் வணிகத்தில் டச்சுக்காரர்கள் கொண்டிருந்த கட்டுப்பாட்டைப் பிரிட்டிஷ் கம்பெனியால் அசைக்க முடியவில்லை. அந்தக் கம்பெனியால் கிழக்கிந்தியாவில் தொடர்ச்சியாக ஒரு தளத்தைக்கூட அமைக்க முடியவில்லை.
1608 ல், நிறுவனக் கப்பல்கள் இந்தியாவின் சூரத்தை அடைந்து அங்கே தங்களை அமைத்து நிலை நிறுத்திக் கொண்டனர். அடுத்த இரண்டு வருடங்களுக்குள், கோரமண்டல் கரை எனப்பட்ட இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில், மசூலிப்பட்டினத்திலும் ஒரு தளத்தை அமைத்தனர்.
மசூலிப்பட்டிணத்திற்கு ஐரோப்பியர்கள் வருகை
அப்போதிருந்து போர்ச்சுக்கீசியர்கள் மற்றும் டச்சு கம்பெனிகளுக்கும் பிரிட்டிஷ் கம்பெனிக்கும் போட்டி அதிகரித்தது. அது பகைமையாகி, சூரத்தில் உள்ள சுவாலிக் கடற்கரையில் போர்ச்சுக்கீயருக்கும் பிரிட்டிஷ் கம்பெனிக்கும் இடையே 1612 ஆம் ஆண்டு போர் மூண்டது. அந்த போரில் போர்ச்சுக்கீசியரை பிரிட்டிஷ் கம்பெனி தோற்கடித்தது.
அந்தப் போருக்கு பின்னர்தான், முகலாய பேரரசர் ஜஹாங்கீரிடம் இந்தியாவில் வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் வணிகம் செய்ய அனுமதி கிடைத்தது. அதைத்தொடர்ந்து, கீழ் கோவா, பம்பாய் ஆகிய இடங்களில் தளங்களை அமைத்திருந்த போர்ச்சுக்கீசியரை கம்பெனி பின்னுக்கு தள்ளியது.
1639ல் சூரத், மதராஸ், 1668ல் பம்பாய், 1690ல் கல்கத்தா என முக்கிய இடங்களில் தனது வலுவான நிலைகளை பிரிட்டிஷ் கம்பெனி அமைத்தது. மதராசபட்டினம் என்ற கிராமத்தின் அருகே வர்த்தக மையத்தை அமைக்க சந்திரகிரி அரசரிடம் அனுமதி பெறப்பட்டது. 1640 ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டி தனது வணிகத்தை விரிவுபடுத்தத் தொடங்கிய பிரிட்டிஷ் கம்பெனி, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சி அதிகாரங்களுக்குள் மூக்கை நுழைத்தது. கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமாக மாறியது மதராஸ்.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
இந்நிலையில்தான் 1658 ஆம் ஆண்டு, போர்ச்சுகீயர்கள் தங்கள் பொறுப்பில் இருந்த கடலோர பகுதிகளை டச்சுக்காரர்களிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள் தரங்கம்பாடியில் கோட்டை கட்டி அந்தப் பகுதியை ஆட்சி செய்யத் தொடங்கினர். டச்சுக்காரர்களுக்கும் பாளையக்காரர்களுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு இருந்து வந்தது.
'இராசேந்திர சோழன் பிரகடனங்கள்' எழுதப்பட்ட 21 செப்பேடுகளை இந்தக் காலகட்டத்தில்தான் டச்சுக்காரர்கள் தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். தமிழ் அரசுகளின் வரலாற்று ஆவணங்கள் காட்டிக்கொடுத்த தமிழர்களின் உதவியோடு எப்படியெல்லாம் சிதறடிக்கப்பட்டு, தொலைந்து போயின என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரியில் கோட்டை கட்டி ஆண்டது தனி வரலாறு. அது ஒருபக்கம் இருக்கட்டும்.
புதுச்சேரியில் பிரெஞ்ச் கோட்டை
1692 ஆம் ஆண்டு மொகலாயப் பேரரசர் அவுரங்கசீபின் படை தனது பங்கிற்கு கர்நாடக மற்றும் தமிழக பகுதிகளைத் தாக்கி வென்றது. தான் வென்ற பகுதிகளில் வரி வசூல் செய்ய கலிபா உமர் இப்னு அல் கத்தாப் என்பவரை அவுரங்கசீப் நியமித்தார். அவர் தனது தலைமையில் மதுரை வரை மொகலாய ஆட்சியை விரிவுபடுத்தினார்.
1736 ஆம் ஆண்டு மதுரையில் நாயக்க அரச குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதையறிந்த அன்றைய ஆற்காடு நவாப் தென்தமிழகத்தையும் தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வர முற்பட்டார். அந்தச் சமயத்தில் ஒரு மராட்டிய படை ஆற்காடு நவாப்பை தோற்கடித்து திருச்சியையும் மதுரையையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. சில காலமே நீடித்த இந்த அரசை மீண்டும் ஆற்காடு நவாப் தோற்கடித்து, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த தென் பகுதிகளை இணைத்துக் கொண்டார்.
1749 ஆம் ஆண்டு முகமது அலி வாலாஜா என்பவர் நவாப் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் மதநல்லிணக்கம் சிறப்பாக இருந்தது. பிரிட்டிஷார் இவருடன் நல்லுறவு வைத்திருந்தனர். தென் தமிழகத்தையும் தனது பிடியில் கொண்டுவர நவாப் விரும்பினார்.
அதை நிறைவேற்ற 1751 ஆம் ஆண்டு ஆற்காடு நவாபின் படை தென்தமிழகம் நோக்கி சென்றது. அந்தப் படையில் 2500 குதிரை வீரர்களும், 3000 உதவி ஆட்களும், கிழக்கிந்திய கம்பெனியை சார்ந்த 30 ஐரோப்பியர்களும் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் பாளையங்கோட்டையை தலைமை இடமாக கொண்டு வரிவசூலில் ஈடுபட்டனர். .
இந்நிலையில்தான் 1765 ஆம் ஆண்டு டெல்லி அரசுக்கு கப்பம் செலுத்துவதை நிறுத்தினார். டெல்லி அரசாங்கத்தாலும், தனக்கு கீழுள்ள பாளையக்காரர்கள் மற்றும் சிற்றரசர்களால் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கவும் பிரிட்டிஷ் கம்பெனி படையுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார். இப்படித்தான் ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டு அரசியலில் தலையிடத் தொடங்கினர்
இந்தக் காலகட்டத்தில் நவாபின் படைக்கு தலைமை தாங்கியவர் ஒரு தமிழர். முஸ்லிமாக மதம் மாறிய அவருடைய பெயர் மொகமது யூசுப் கான். அவருடைய நிஜப்பெயர்தான் மருதநாயகம்.
(தமிழகத்தை ஆங்கிலேயர்கள் விலைக்கு வாங்கிய கதையை திங்கள்கிழமை பார்க்கலாம்)
- ஆதனூர் சோழன்
முந்தைய பகுதிகள் :