Skip to main content

எமெர்ஜென்சியை எதிர்கொண்ட திமுக!

Published on 16/11/2017 | Edited on 18/11/2017


எம்ஜியார் கட்சியைவிட்டு விலக்கப்பட்டாலும் திமுகவுக்கோ ஆட்சிக்கோ எந்த பாதிப்பும் இல்லை. எம்ஜியார் விலக்கப்பட்டவுடன் அவரோடு உடனடியாக விலகியவர் கே.ஏ.கிருஷ்ணசாமி மட்டுமே. அவர் சட்டமேலவை உறுப்பினராக இருந்தார்.

மற்றபடி எம்ஜியாருடன் ஒரு மாவட்டச் செயலாளரோ பொதுக்குழு உறுப்பினரோ செல்லவில்லை. ஆனால், அன்றைய சபாநாயகர் கே.ஏ.மதியழகன் எம்ஜியார் ஆதரவாளராக இருந்தார். அவருடன் எம்ஜியாரையும் சேர்த்து சுமார் 14 எம்எல்ஏக்கள் திமுக எதிர்ப்பாளர்களாக இருந்தார்கள்.

அன்றைக்கு கட்சித்தாவல் தடைச்சட்டம் நடைமுறையில் இல்லை. யாரும் எந்தக் கட்சிக்கும் வரைமுறை இல்லாமல் தாவிக்கொள்ளலாம். மூன்றில் ஒருபங்கு எம்எல்ஏக்கள் பிரிந்தால்தான் பதவி தப்பும் என்றெல்லாம் இல்லை.

எனவே, கலைஞர் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக எம்ஜியார் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தார். சபாநாயகராக இருந்த கே.ஏ.மதியழகன் அந்த தீர்மானம் வெற்றிபெற்றதாக அறிவிக்க தயாராக இருக்கிறார் என்று தெரிய வந்தது.

இதையடுத்து, சபாநாயகர் மதியழகன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுகவினர் முடிவு செய்தனர். அதன்படி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதால், அதை துணைசபாநாயகராக இருந்த பெ.சீனிவாசன் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டார்.

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேறியதாக சீனிவாசன் அறிவித்தார். இதைத்தொடர்ந்து சட்டசபையில் அமளிதுமளி ஏற்பட்டது. சட்டசபை செத்துவிட்டது என்று எம்ஜியார் அறிவித்தார். ஆனால், அதன்பிறகு சட்டசபை கலைக்கப்படும்வரை எம்ஜியார் சபைக்கு வெளியே வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு வந்தார் என்பது வரலாறு.

1972 திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றாலும், திமுகவின் முன்னணி தலைவர்கள் யாரும் பெரிய அளவில் அவருடன் செல்லவில்லை. ஆனால், கட்சியின் மிகச் சாதாரண தொண்டர்கள், எம்ஜியாரின் சினிமா மாயையில் சிக்கி அவரை பெரிய மகான் என்று நம்பியவர்கள் நிறையப்பேர் அவருக்கு ஆதரவாக இருந்தார்கள்.

கட்சியைத் தொடங்கினாலும் எம்ஜியார் வழக்கம்போல தனது சினிமாத் தொழிலையும் நடத்தி வந்தார். வயதானாலும் சினிமாவில் காதல் காட்சிகளில் இளம் நடிகைகளோடு நெருக்கமான காட்சிகளில் தொடர்ந்து நடித்து அவருடைய ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டிருந்தார்.

எம்ஜியார் விலகிய நிலையில் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி தந்தை பெரியார் மரணம் அடைந்தார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சியை நடத்த கலைஞர் விரும்பினார். ஆனால், அரசுப் பதவியில் இல்லாத ஒருவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி நடத்த அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள்.



ஆனால், தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை அளிப்பதால் இந்த ஆட்சி கலைக்கப்படும் என்றால் அதைவிட கவுரவம் இருக்க முடியாது என்று கோபமாக கூறினார். பின்னர் ஈரோடு நகர தலைவராக பெரியார் பதவி வகித்ததை குறிப்பிட்டு, அவருக்கு அரசு சார்பில் இறுதி நிகழ்ச்சிக்கு கலைஞர் ஏற்பாடு செய்தார்.

திமுக தலைமையிலான ஆட்சி அதன்போக்கில் நடைபெற்று வந்தது. இந்நிலையில்தான் அகில இந்திய அளவில் ஒரு சிக்கல் உருவாகியது. 1971 தேர்தலுக்குப் பிறகு இந்திரா வலுவான தலைவராக உருவானாலும், அவர் 1971 தேர்தலில் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றதை எதிர்த்து ராஜ்நாராயண் என்பவர் தொடர்ந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திராவின் வெற்றி செல்லாது என்றும், அவர் எம்பி பதவியில் தொடரமுடியாது என்றும் அந்த தீர்ப்பு கூறியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திரா உச்சநீதிமன்றத்திற்கு சென்றார். அங்கும் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்திராவின் எம்பி பதவி செல்லாது என்று அறிவிக்கப்பட்டாலும், அவர் பிரதமராக தொடருவதில் சிக்கலில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, இந்திரா உள்நாட்டில் அவசரநிலை பிரகடனம் அறிவித்தார். அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது இந்திராவின் ஆதரவாளராக இருந்ததால் இந்திரா நீட்டுகிற இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுக் கொண்டே இருந்தார்.

பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடுகிற உரிமை, கருத்துரிமை, பத்திரிகை தணிக்கை என்று இந்தியாவை ஒரு சர்வாதிகார நாடாக மாற்றிக் கொண்டிருந்தார் இந்திரா.

இந்திராவை எதிர்த்த தலைவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஈஎம்எஸ், ஜோதிபாசு, மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், ஜார்ஜ்பெர்னாண்டஸ், சரண்சிங், பிஜு பட்நாயக் உள்ளிட்டோரும் அவருடைய கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் கைது செய்யப்பட்டனர்.

நெருக்கடி நிலை பிரகடனம் செய்தவுடன் தனது முடிவுக்கு ஆதரவு அளிக்கும்படி இந்திரா கேட்டுக்கொண்டது கலைஞரைத்தான். ஆனால், அவர் அதை ஏற்க முடியாது என்று கூறிவிட்டார்.

தமிழகத்தில் மட்டுமே நெருக்கடி நிலையின் பாதிப்பு துளியும் வெளிப்படாமல் இருந்தது. நெருக்கடி நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் எம்ஜியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை சிறையில் அடைக்கக்கூடிய வாய்ப்பைக்கூட கலைஞர் பயன்படுத்தவில்லை. தன்னை எதிர்க்கும் பத்திரிகைகளைக்கூட சுதந்திரமாக எழுத அனுமதித்தார்.

காமராஜரைச் சந்தித்த கலைஞர் திமுக அரசாங்கம் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறது என்றார். ஆனால், காமராஜர் கலைஞரை தடுத்தார். முடிந்தவரை இந்த மாநிலத்திலாவது சுதந்திரம் இருக்கட்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்தே, நெருக்கடிநிலையை எதிர்த்து திமுக மாநாட்டில் பகிரங்கமாக கலைஞர் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். இந்தியாவில் ஆட்சியில் இருந்த கட்சி நெருக்கடி நிலையை எதிர்த்து பகிரங்கமாக தீர்மானம் நிறைவேற்றியது அன்றைய வரலாறு.

திமுக ஆட்சியில் இருக்கும் சமயத்திலேயே காமராஜர் நெருக்கடிநிலையின் கொடுமையை நினைத்து, தன்னால் உருவாக்கப்பட்ட இந்திராவின் சர்வாதிகார போக்கை நினைத்து நோய்வாய்ப்பட்டார். 1975 அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்தநாளன்று இறந்தார். கொட்டும் மழையில் காமராஜருக்கான நினைவிடத்தை தேர்வுசெய்த கலைஞர், அவரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார்.



காமராஜருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இந்திராவையும் கலைஞர் வரவேற்றார். காமராஜர் உயிரிழந்த நிலையில் அவருடைய கட்சியின் முக்கிய தலைவராக இருந்த மூப்பனார் இந்திரா காங்கிரஸில் சேர்ந்தார். அவருடைய கட்சியின் பெரும்பகுதியை இந்திரா கபளீகரம் செய்துகொண்டார்.

இந்நிலையில்தான், இந்திராவின் நெருக்கடி நிலையையும், அவருடைய 20 அம்ச திட்டத்தையும் எதிர்த்து கலைஞரும் மற்ற தலைவர்களும் தீவிரமாக பேசிவந்தனர். அதேசமயம், இந்திராவை ஆதரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அதிமுகவும் கலைஞர் தலைமையிலான ஆட்சியை கலைக்காவிட்டால் அவருடைய செல்வாக்கை குறைக்க முடியாது என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.

இந்நிலையில்தான், 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் நெருக்கடி நிலை நீடித்தது. ஆளுநர் தலைமையில் இந்திரா காங்கிரஸார் தமிழ்நாட்டின் பல உரிமைகளை மத்திய அரசுக்கு மடை மாற்ற உதவியாக இருந்தார்கள்.



நெருக்கடி நிலை அமலானதும், திமுகவின் முன்னணி தலைவர்கள் காரணம் இல்லாமல் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். கலைஞரின் குடும்பத்தினர் மீது கொடூரமான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கொடூரமான அடக்குமுறைகள் திமுகவினர் மீது ஏவப்பட்டாலும், கலைஞர் உறுதிகுலையாமல் திமுகவை பாதுகாப்பதில் கவனமாக இருந்தார். திமுக மீதான அடக்குமுறைகளையும், இந்தியா முழுவதும் நெருக்கடி நிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் திமுக தொண்டர்களுக்கு புரியும்படி செய்தார்.

இதற்காக அவர் இலக்கியங்களையும் உலக வரலாறுகளையும் தனது கடிதத்தில் மறைமுகமாக பயன்படுத்தினார். பத்திரிகை தணிக்கையாளர்கள் தங்களுடைய கட்டுப்பாடுகளை கலைஞரின் எழுத்துக்கள் மீது பயன்படுத்த முடியவில்லை.

முரசொலி நாளிதழை மட்டுமே அவர் ஆயுதமாக பயன்படுத்தினார். அந்த ஆயுதமும் தனது இலக்கை தவறாமல் குறிவைத்து பாய்ந்தது.

பொதுக்கூட்டங்களுக்கு தடை என்பதால் கட்சிக்கார்களை சந்திக்க முடியவில்லை. ஆனால், அதையும் தகர்க்க அரங்கக் கூட்டங்களை பயன்படுத்தினார் கலைஞர். அதையும் விட கட்சிக்காரர்களின் திருமணம் உள்ளிட்ட இல்ல நிகழ்ச்சிகளை பிரச்சார நிகழ்ச்சிகளாக பயன்படுத்தினார்.

தமிழகம் முழுவதும் கலைஞர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிக்காரர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்று திருக்குறள் கதைகள், புறநானூற்றுப் பாடல்கள் என தமிழ் இலக்கியத்தை பயன்படுத்தி தமிழக அரசியலை மக்களுக்கு புரியவைத்தார்.

கலைஞர் தன்னைச் சந்திக்க வருபவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள கட்சி நிதி வசூலித்தார். அவரைச் சந்திக்க திமுகவினர் புதிய தந்திரங்களை கையாண்டனர். ஆலயங்களுக்கு சென்றுவிட்டு கலைஞரின் கோபாலபுரம் வீட்டுக்கு கூட்டமாக வந்தார்கள். பக்தர்களை தடுக்க முடியாமல் காவல்துறை தடுமாறியது.

நெருக்கடி நிலைக்காலத்தின் கொடுமைகள் நீடிப்பதை உலக அரங்கம் கடுமையாக விமர்சித்தது. இதையடுத்து, 1977 ஜனவரி மாதம் 23 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் என்று இந்திரா அறிவித்தார். மார்ச் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த இந்திரா, இந்திய சிறைகளில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களை விடுதலை செய்தார்.

ஆனால், விடுதலையான தலைவர்கள் தங்களுக்குள் இருந்த கருத்து மோதல்கள், கொள்கை வேறுபாடுகளை மறந்து ஜனதாக் கட்சி என்ற பெயரில் ஒரு புதிய கட்சியைத் தொடங்கினார்கள். இந்த முயற்சி இந்திராவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்கப் பயன்பட்டது.

தமிழ்நாட்டில் திமுகவுடன் ஜனதாக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அணி அமைத்து போட்டியிட்டன. அதிமுக, இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அணி அமைத்திருந்தன.

நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில் தமிழ்நாட்டுக்கு வந்த இந்திராவுக்கு திமுகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தன. மதுரையிலும் சென்னையிலம் பெரும் கலவரம் ஏற்பட்டது.

கலைஞர் உள்ளிட்ட திமுகவினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 2 இடங்களிலும், ஜனதாக்கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதிமுக 17 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 14 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.

அகில இந்திய அளவில் இந்திரா காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்திராவே தோல்வி அடைந்தார். அவருடைய தேர்தலை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து வெற்றிபெற்ற ராஜ்நாரயணே மறுபடியும் அதே ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு இந்திராவை தோற்கடித்தார்.

ஜனதாக்கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தக் கட்சிக்கு 295 இடங்கள் கிடைத்தன. இந்திரா காங்கிரஸ் 154 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22 இடங்களிலும் வெற்றிபெற்றன.

மொரார்ஜிதேசாய் புதிய பிரதமராகவும், சரண்சிங் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். ஜனசங்கத்தை சேர்ந்த வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், அத்வானி செய்தி தகவல் தொடர்புத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

ஜனதாக்கட்சி ஆட்சி அமைந்தவுடனேயே இந்திராவை விலங்கிட்டு கைது செய்து மிகப்பெரிய தப்பை உள்துறை அமைச்சர் சரண்சிங் செய்தார். இதையடுத்து அவருக்கு நாடுமுழுவதும் அனுதாபம் ஏற்படக் காரணமாக இருந்தார்.

ஜனதாக்கட்சி என்பது சிறு சிறு கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்டது. அதாவது நெல்லிக்காய் மூட்டையைப் போன்றது. அதில் இருந்த அனைவருமே தனித்தனி கட்சித் தலைவர்களாக இருந்தவர்கள். எனவே எல்லோருக்குமே பிரதமராகவும், ஆட்சிப்பொறுப்பில் முக்கியத்துவம் பெறவும் ஆசையிருந்தது.

அவர்களுக்கு இடையிலான புகைச்சல் உடனடியாகவே செய்திகள் ஆகின. இந்நிலையில்தான் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. 1977 ஜூன் மாதம் நடைபெற்ற அந்த தேர்தலில் எம்ஜியார் தனக்கு ஆதரவாக இருந்த இந்திரா காங்கிரஸையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் கழற்றி விட்டார்.

அதற்குப் பதிலாக மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

முந்தைய தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து போட்டியிட்ட ஜனதாக் கட்சி இப்போது தனியாக போட்டியிட முடிவு செய்தது.

இந்திரா காங்கிரஸும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அணி அமைத்தன.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், நெருக்கடி நிலையை எதிர்த்து போராடி அடக்குமுறைகளைச் சந்தித்த திமுகவை ஜனதாக் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் புறக்கணித்துவிட்டன.



அதிமுகவை வளர்ப்பதற்காக திமுக ஆட்சியைக் கலைத்து, அந்தக் கட்சிமீது ஊழல் விசாரணைக் கமிஷன் அமைத்து, சுமார் ஒன்றரை ஆண்டு காலம் பத்திரிகைகளிலும், ரேடியோவிலும் திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்ய உதவியாக இருந்த இந்திரா காங்கிரஸை அதிமுக கழற்றிவிட்டது. அதைவிட, அதிமுக என்ற கட்சியை தொடங்கி நடத்த வலது கரமாக செயல்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் எம்ஜியார் கழற்றி விட்டார்.

ஜனதாக்கட்சி ஆட்சி அமைந்தவுடனேயே எம்ஜியார் அந்தக் கட்சியுடன் நெருக்கமாகிவிட்டார். எல்லாவற்றுக்கும் ரெய்டு பயமே காரணமாக இருந்தது. தேர்தலில் தோற்ற இந்திரா தமிழ்நாட்டின் தஞ்சைத் தொகுதியிலிருந்து போட்டியிட முடிவு செய்தபோது, ஜனதாக் கட்சிக்கு பயந்து அவரை ஆதரிக்க மறுத்தவர் எம்ஜியார்.

அதையடுத்தே இந்திரா ஆந்திராவின் மேடக் தொகுதியிலும், கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றார்.

இந்திரா வெற்றிபெற்றதும் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஜனதாக் கட்சியில் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகத் தொடங்கின.

(ஜனதாக் கட்சியின் வீழ்ச்சியும், திமுகவின் இந்திரா ஆதரவும், எம்ஜியாரின் படுதோல்வியும் பற்றி திங்கள்கிழமை பார்க்கலாம்)

- ஆதனூர் சோழன்

முந்தைய பகுதிகள்:


சார்ந்த செய்திகள்