சென்னையில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா நேற்று கோவை ஜெயிலிலிருந்து நெல்லை நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார். கொடியன்குளம் பேராசிரியர் செந்தில் குமார் கொலை தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்பதால் அவரை நெல்லை மாநகர போலீசார் இரண்டு நாட்கள் விசாரணைக்காகக் கஷ்டடி எடுத்தனர். ஒரு நாள் விசாரணையை முடித்துக்கொண்ட போலீசார் இன்று மதியம் ராக்கெட் ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு அவரைக் கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காகக் கொண்டு சென்றார்கள்.
இதனிடையே இன்று காலை பதினோரு மணியளவில் நெல்லை ஜங்ஷனிலிருந்து வடக்குத் தாழையூத்திற்கு வழக்கம் போல் அரசு பேருந்து சென்றிருக்கிறது. அந்தக் கிராமத்தை சுமார் 12.10 மணியளவில் சென்றடைந்தது. கடைசி ஸ்டாப் என்பதால் பயணிகள் இறங்கிய பின்பு 15 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து பேருந்து திரும்புவது வழக்கம். பயணிகள் இறங்கிய பிறகு அந்தப் பகுதிக்கு வந்த வாலிபர்கள் இருவரில், ஒருவர் பெட்ரோல் குண்டை சீட்டில் வீசி எறிய, சீட் தீப்பற்றிக் கொள்ள டிரைவரும் கண்டக்டரும் அலறியடித்து ஓடியிருக்கிறார்கள். பேருந்து தீயில் எரிந்திருக்கிறது.
பயணிகளை இறக்கிவிட்ட பின்பு பேருந்தை ஓரமாக நிறுத்த முற்பட்டபோது, அந்நேரம் வந்த ஒருவன் இன்ஜினை ஆஃப் செய்ய சொல்லி அதட்டினான். அதற்குள் மற்றொருவன் பெட்ரோல் குண்டை வீசி எறிந்ததில் பேருந்து தீயில் எரிந்து விட்டது. வேறுவழியின்றி நாங்கள் தப்ப வேண்டியதாயிற்று என்று பேருந்தின் ஓட்டுனர் பரமசிவம், நடத்துனர் சின்னையா சொல்லியிருக்கிறார்கள். ராக்கெட் ராஜாவைக் கைது செய்ததைக் கண்டித்து பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பியான அருண்சக்தி குமார் விரைந்திருக்கிறார். அங்கு நிலைமை பதட்டமாக உள்ளது.