முதல்வர் எடப்பாடியின் வெளிநாடு பயணம் மூலமாக எட்டாயிரம் கோடி முதலீடுகள் வந்துள்ளன, அவரது பயணம் பெரும் வெற்றி' என ஜெ., ஜெயிலிலிருந்து திரும்பி வந்தபோது அளித்த வரவேற்பை போல பிரம்மாண்டமான வரவேற்பை அ.தி.மு.க.வினர் அளித்தது போல காட்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. உண்மையில் எடப்பாடி முதலீடுகளை கொண்டு வந்தார் என நிரூபிப்பாரேயானால் அவருக்கு பாராட்டு விழா நடத்த தயார்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்ல, "ஸ்டாலின் எப்பவுமே என்னை எதிர்க்கத்தான் செய்வார்' என முதலமைச்சர் எடப்பாடி பதில் சொன்னார். இந்நிலையில் எடப்பாடி, வெளிநாடுகளில் முதலீட்டு ஒப்பந்தம் செய்து கொண்ட கம்பெனிகள் எவை என நக்கீரன் ஆய்வில் இறங்கியது.
அந்த பட்டியலில் முதலில் வந்தது, ரீ வேச்சூர் எல்எல்சி (REVATURE -LLC) என்கிற கம்பெனி. இது ஒரு வேலைவாய்ப்பு வழங்கும் கம்பெனி. இந்த கம்பெனி மூலம் தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழகத்தில் இயங்கும் சர்வதேச கம்பெனிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளுக்கு தகுதியான நபர்களை தரவும்... ஆயிரம் கோடி ரூபாய் டாலர்களில் முதலீடு செய்யப்போவதாக செப்டம்பர் 3-ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி முன்னிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த கம்பெனி எப்படிப்பட்ட கம்பெனி என இணைய தளங்களில் தேடினோம். இது ஒரு வேலைவாய்ப்பு அளிக்கும் கம்பெனி என்பதால் இந்த கம்பெனி பற்றி என்ன விமர்சனம் வந்துள்ளது என ஆராய்ந்தோம்.
இது ஒரு ஊழல் கம்பெனி. இந்த கம்பெனி பற்றி கூகுளில் ஏராளமான விமர்சனங்கள் வந்துள்ளன. அதை பரிசோதித்து பாருங்கள். இவர்கள் ஒரு வேலை என சொல்வார்கள். இன்னொரு வேலை செய்ய வைப்பார்கள். நீங்கள் அவர்கள் சொல்லும் வேலையை செய்யாமல் போனால் உங்களுக்கு 20,000 டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது. இது ஒரு ஏமாற்று வேலை என்கிறது. இந்த அமெரிக்க கம்பெனியுடன் எடப்பாடி எப்படி ஒப்பந்தம் செய்தார் என்பது ஒரு தனிக்கதை. எடப்பாடியின் ஆல் இன் ஆல் செயலாளராக இருப்பவர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ். விஜயகுமாருக்கு நெருக்கமானவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதன்மைச் செயலாளராக இருக்கும் சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். இவரது சொந்த வெப்சைட்டை பாருங்கள். ரீ வேச்சூர் (Revature) பற்றி தெரியும்'' என்றார்கள்.
www.santhoshbabu.org/family என்கிற அவரது இணையதள பக்கத்திற்கு சென்றோம். "எனது மகன் நிதின் சந்தோஷ் ஒரு பி.இ. பட்டதாரி. தகவல் தொழில் நுட்பத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற அவர், ரீவேச்சூர் டெக்னாலஜி கம்பெனியில் சோதனைப் பொறியாளராக வேலை பார்க்கிறார்'' என சந்தோஷ் பாபு குறிப்பிட்டுள்ளார். அவரது மகன் வேலை, செய்யும் கம்பெனி. அதுவும் ஊழல் கம்பெனி என அமெரிக்கர்கள் விமர்சனம் செய்யும் கம்பெனியுடன் சந்தோஷ்பாபு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் முன்னிலையில் ஆயிரம் கோடி முதலீடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் என சொல்லி சிரிக்கிறார்கள் தொழிலதிபர்கள்.
அடுத்த நிறுவனம் அக்வில் சிஸ்டம்ஸ் (AQUILL SYSTEMS) என்கிற கம்பெனி. அது எப்படிப்பட்ட கம்பெனி என ஆராய்ந்தோம். www.glass door.co.in என்கிற விமர்சன வெப்சைட்டில் இந்த கம்பெனியில் ஒரேயொரு ஆள்தான் வேலை செய்கிறார். அவரே முதலாளி, அவரே தொழிலாளி. வெறும் லெட்டர் பேடு கம்பெனி என்கிற விமர்சனம் காணப்படுகிறது. இது லெட்டர் பேடு கம்பெனி என்றால்... 50,000 கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்ய எடப்பாடி ஒப்பந்தம் போட்ட மேற்கு வங்கத்தில் இயங்கும் கம்பெனியான ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் கம்பெனி யார் அமெரிக்காவுக்கு வந்தாலும் ஓர் ஒப்பந்தம் போடும். கடந்த மாதம் அமெரிக்காவுக்கு வந்த இலங்கை அமைச்சர்களிடம் ஒன்றரை லட்சம் கோடியில் ஹால்டியா கம்பெனி ஒரு ஒப்பந்த அறிவிப்பில் கையெழுத்திட்டது.
ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான ரூபாய் முதலீடு செய்ய இது பிரிட்டீஷ் பெட்ரோலியம் போல மிகப்பெரிய நிறுவனம் அல்ல. எல்லாம் ஏமாற்று வேலை என்கிறார்கள் அமெரிக்க தொழிலதிபர்கள். மற்றொரு கம்பெனி Jean Martin என்கிற கம்பெனி. இது ஏற்கனவே சென்னையில் இயங்குகிறது. சென்னை சிறுசேரியில் தமிழக அரசு கொடுத்துள்ள வாடகை கட்டிடத்தில் வெறும் 50 பேர் வேலை செய்யக்கூடிய கம்பெனி. அடுத்து Jugo Health என்கிற கம்பெனி. இதுவும் சென்னையில் இயங்கக்கூடிய கம்பெனி. பக்கவாதம் வந்து கை, கால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கென இந்த நிறுவனம் ஒரு கருவி மூலம் சிகிச்சை அளிக்கிறது. ஒருமுறை இந்த கருவியில் சிகிச்சை பெற்றால் நரம்பு நீட்டமடையும். அதற்கு ஒரு நோயாளிக்கு நூறு ரூபாய் கட்டணத்தை சென்னையில் உள்ள அலுவலகத்தில் வசூல் செய்யக் கூடிய கம்பெனி.
மொத்தம் 200 தொழிலதிபர்களை நியூயார்க் நகரில் எடப்பாடி சந்தித்தார். பதினோரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் பதினோரு கம்பெனிகள் பங்கேற்றன. 2,000 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெற்றார் எடப்பாடி என தமிழக அரசு அறிவித்துள்ள நியூயார்க் நகர தொழிலதிபர் சந்திப்பில் இடம்பெற்ற கம்பெனிகள் தான் இவை.
இந்த கம்பெனிகள் எல்லாம் தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ்பாபு, முதல்வரின் உதவியாளர் கிரிதரன், முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ். ஆகியோருக்கு நெருக்கமானவை. அமெரிக்கா சென்ற முதல்வர், முதலீட்டை ஈர்த்தார் என்பதை பறைசாற்ற இம்மூவரும் தங்களுக்கு நெருக்கமான சென்னையைச் சேர்ந்த கம்பெனிகளின் அமெரிக்க பிரதிநிதிகளை வரவழைத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கோட்சூட் போட்டு எடப்பாடியுடன் நிற்க வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்துள்ளார்கள்'' என சொல்லும் தொழிலதிபர்கள், "இந்த கம்பெனிகளுடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டது என்றால் அதன் இன்னொரு பிரதி அவர்களிடம் தர வேண்டும்.
நியூயார்க் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தை அப்படியே மூட்டையாக கட்டிக்கொண்டு சென்னைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். இத்தனைக்கும் பத்து வருடத்திற்குள் ஒப்பந்தம் போட்ட கம்பெனிகள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். பத்து வருடத்தில் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் முதலீடு செய்யாவிட்டால் தமிழக அரசு கேள்வி கேட்க முடியாது. அப்படிப்பட்ட பல்லில்லாத ஒப்பந்தத்தில் எந்த பயனும் இல்லை. அதை தூக்கிக் கொண்டு வந்து விட்டார்கள்'' என்கிறார்கள் தொழிலதிபர்கள்.
உண்மையில் தமிழகத்தில் முதலீடு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் பெறுவதற்கென்று தனியாக ஒரு அலுவலகம் நடத்திக் கொண்டிருக்கிறது செல்வாக்குமிக்க அமைச்சர் வட்டாரம். அதை மூடினாலே தமிழகத்தில் தொழில் வளரும் என்கிறார்கள் முதலீட்டாளர்கள். "இல்லை... இல்லை லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் உள்ளதைப் போல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வருவேன். அந்த மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் திறப்பேன். இது என் பயணத்திற்கு கிடைத்த வெற்றி' என்கிறார் முதல்வர் எடப்பாடி. இது மட்டுமல்ல அமெரிக்கா பாணியில் கால்நடை பண்ணை அமைப்பது உட்பட எதுவுமே நடக்காது என அவநம்பிக்கையை விதைக்கிறார்கள் தொழில்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வெளிநாட்டு விசிட்டும் அதில் நடைபெற்ற அனைத்தும் கோட் சூட் கோல்மால் என்கிறார்கள் கோட்டை தரப்பினர்.