ரெண்டு மூணு நாள் கழித்து மறுபடியும் "வீடு சௌகரியமாய் இருக்கிறதா' என அவளிடம் விசாரிப்பதற்காக சென்றபோது எனக்கு அதிர்ச்சி. காரணம், அவள் கழுத்தில் தொங்கிய தாலி!
"கன்னிப் பெண்ணாயிருக்கிறதாலே ஏகப்பட்ட விடலைப் பசங்க தொந்திரவு பண்றாங்க! அவங்ககிட்டேயிருந்து தப்பிக்கத்தான்... அதுவும் தவிர கல்யாணமானவள்ங்றப்ப என் அம்மாவும் என்னைக் கூப்பிட வராம இருப்பா இல்லே... அந்த பாதுகாப்புக்காகத்தான் எனக்கு நானே தாலிகட்டிக்கிட்டேன்'' என்றாள்.
மலைத்துப் போனேன்.
"சரி, புருஷன் யாருன்னு கேட்பாங்களே?''
"நீங்கதான்னு சொல்லியிருக்கேன்''
முட்டை மீது இடி விழுந்தமாதிரி மொத்தமாய் நொறுங்கிப்போக வைத்தது சுமதி சொன்ன விஷயம்!
"எ..என்ன சுமதி? இப்படியொரு காரியம் செய்துட்டே... உதவி செய்கிற ஆளுக்கு இப்படித்தான் உபத்திரவம் செய்கிறதா?'' -கோபிக்க... சுமதிக்கு கண்கள் அலம்பிற்று.
"நான் அப்படிக் கட்டிக்கலைன்னாலும், ஊர் உங்க வைப்பாட்டின்னுதான்ங்க சொல்லும். தாலியிருக்கிறதாலே கொஞ்சம் மரியாதை மட்டுமாவது மிஞ்சும். எந்தப் பயலும் வாலாட்டவும் மாட்டான்... வேற யாரையாச்சும் நான் புருஷன்னு சொன்னா... புருஷனைக் காணோமே... இந்த ஆள் யாருன்னெல்லாம் அக்கம் பக்கம் கேள்வி வரும். முதுகிலே பேசும். நயாபைசா பார்வை பார்க்கும். விபச்சாரி பட்டம் கொடுக்கும். அதற்கு வைப்பாட்டி கொஞ்சம் கௌரவமான பதவி இல்லையா.... ஆனா, உங்களை இதிலே தேவையில்லாம களங்கப்படுத்தியிருக்கேன்.... என்னை மன்னிச்சுடுங்க''
பெருமூச்சு வந்தது. நல்லது செய்யணும்னு வந்தா சோதனைகளைச் சந்திச்சுதானே ஆகணும்... "உன் இஷ்டப்படி செய்... ஆனா ஒரு விஷயம். தாலியைப் பார்த்து என் வைப்பாட்டின்னு ஊர் நினைக்கட்டும் பரவாயில்லை. ஒரு நாளும் நீ நினைச்சுடக்கூடாது. என் மேலே தப்பான ஆசை எதுவும் வச்சுடக்கூடாது. ஒரு பிராயச்சித்தமாதான் உன்ன காப்பாத்திகிட்டிருக்கேன். நான் கூடுதலா ஒரு பாவம் பண்றதுக்கு நீ காரணமாயிடக்கூடாது. ஊர் என்னை உன் புருஷனா நினைக்கட்டும் பரவாயில்லை... ஆனா, நீ உன் சகோதரனாதான் நினைக்கணும், இந்த உத்தரவாதத்தை நீ கொடுத்தால் இனி நான் உன்னைப்பார்க்க வருவேன். இல்லையானா இதான் என் கடைசி வருகை. என்ன சொல்றே?'' சுமதி களங்கமில்லாமல் சிரித்தாள்.
"நீங்க எப்பவும் இங்க வரணும்...''
"அப்படியானா நீ...?''
"நான் உங்களை எப்பவுமே என் புருஷனா நினைக்கலியே... நான் எந்த விதத்திலேயாவது கற்போட இருக்கத்தான் இங்கே வந்திருக்கேனே தவிர, உங்களைக் கல்யாணம் செய்துக்கிறதுக்காக வரலை... நீங்களாக ஏன் எதை எதையோ கற்பனை செய்துக்குறீங்க?''
சில சமயங்களில் உண்மை கற்பனையைவிட வேடிக்கையாகவும், வியப்பாகவும் காட்சி தரக்கூடியது என்பது எவ்வளவு நிஜம்? தாலி கட்டிக்கொண்டு அண்ணன் தங்கையாய் இருந்தவர்களை உலகத்தில் எங்கேயாவது பார்க்க முடியுமா? யாராவது சொன்னால் நம்புவோமா? உண்மைக்கு நம்புவார், நம்பாதவர் பற்றியெல்லாம் என்ன அக்கறை? சாகாததுதானே உண்மை! எனவே தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதும் அதற்குத் தேவை இல்லைதான்.
சுமதிக்கு நான் தந்த உத்தரவாதத்தைக் காப்பாற்றவும் செய்தேன். அது முக்கியமில்லை, அந்த சுமதிதான் எனது தூக்குதண்டனைக்கே துருப்புச்சீட்டாக ஆனாளே... அதுதான் முக்கியம்! சரி, அது பின்னால் நடந்தது.
இப்போது, எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் நடந்த அதிமுக பிரிவுக்கு வருவோம்...
எம்.ஜி.ஆரின் மரணம் இரண்டு பேருக்கு பம்பர் பரிசாக அமைந்துவிட்டது! ஒன்று ஜெயலலிதா; ஆட்சியைப் பிடித்தார்! இன்னொரு நபர் ஆ.சங்கராகிய நான்தான். இரண்டு பட்ட கோஷ்டிகளுக்கு பலான சங்கதிகளை சப்ளை செய்து ஒரு சில ராத்திரிகளுக்குள் முப்பது லட்சம் பணம் கொட்டியது. ரூபாயை எங்கே மறைத்து வைப்பது என்றே தெரியவில்லை. கறுப்புப் பணமாயிற்றே. வருமான வரி ஆபீசுக்கு தெரிந்தால் போச்சு.
தொகை அனைத்தையும் ஐநூறு ரூபாய் கட்டுகளாக மாற்றினேன். சுருக்கமான எண்ணிக்கையில் இருந்தால் மறைப்பது சுலபம் ஆயிற்றே!படுக்கை மெத்தையின் ஒரு முனை நூலை பிரித்து உள்ளேயிருந்த இலவம் பஞ்சு மறைவுக்குள் பணக்கட்டுகளை திணித்தேன். பழையபடி வாயைத் தைத்து மேலே போர்வை விரித்து மறைத்தாயிற்று. இதை கட்டின மனைவியிடம் கூட சொல்லக்கூடாது என தீர்மானித்தேன். பாபுவிடம் மட்டும் தெரிவித்தேன்!
தாம்பரம் தொகுதியில் எம்.எல்.ஏ. சீட்டுக்கு போட்டியிட திட்டமிட்டேன்! அப்போது தேர்தல் செலவுக்கு இந்த பணத்தை பயன்படுத்த எண்ணம். ஆனால் நடந்ததோ...
அடுத்த பகுதி:
முதல் பெண்... முதல் கொலை... ஆட்டோ சங்கர் #13
முந்தைய பகுதி:
சுமதி... தஞ்சம் கேட்டு வந்த எமன்! - ஆட்டோ சங்கர்#11
குறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும் புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை.