வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், திமுக கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய மதிமுக கட்சிக்கு திருச்சி பாராளுமன்றத் தொகுதியை ஒதுக்கியுள்ளது. மதிமுக கட்சி சார்பாக மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். துரை வைகோவின் பிரச்சாரத்தின் போது, நமது நக்கீரனுக்கு அவர் அளித்த பேட்டியினை காண்போம்...
தேர்தல் ஆரம்பித்த பிறகு, மிகப்பெரிய சிக்கலாக இருந்தது சின்னம் தான், அந்தச் சின்னத்தை மக்களிடம் சேர்த்து விட்டீர்களா?
“சின்னத்தைப் பொறுத்தவரை சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால், அனைவரது வீடுகளிலும் தீப்பெட்டி இருக்கு. ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பு எரிய வேண்டும் என்றால் தீப்பெட்டியைத் தான் பயன்படுத்துகிறார்கள். இறை நம்பிக்கை உள்ளவர்கள் விளக்கேற்றுவதற்கு தீப்பெட்டியைப் பயன்படுத்துகிறார்கள். எளிய மனிதர்கள் எல்லாரும் பயன்படுத்துகிற பொருள் தீப்பெட்டி தான். தென் மாவட்டங்களில் பல ஏழை எளிய மனிதர்களின் வாழ்வாதாரமாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் தான் அமைந்து வருகிறது. வட மாவட்டங்களான குடியாத்தம் போன்ற பகுதிகளில் தொழிற்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இருந்தபோதிலும், இன்னாருக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். ஆரம்பக்கட்டத்தில் அரசியல் தொடர்பு இல்லாதவர்கள், சின்னத்தைப் பொறுத்தவரை ஒரு குழப்பம் இருந்தது. ஆனால் நாளுக்கு நாள் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது”.
செத்தாலும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்ற உறுதி எதனால் வந்தது?
“கடந்த மூன்று ஆண்டுகளாக, பல இயக்கங்கள் பிற இயக்கங்களின் சின்னத்தில் நின்று தங்களுடைய தங்களுடைய கட்சியின் தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள் என்ற பேச்சு ஊடகங்களில் நிலவி வருகிறது. குறிப்பாக எங்கள் கட்சி தொண்டர்களிடமே இந்த வருத்தம் இருந்தது. பிற சின்னத்தில் நாம் நிற்க வேண்டுமென்றால் நமது இயக்கத்தில் இருந்து ராஜினாமா செய்து அந்தக் கட்சியின் உறுப்பினராகி போட்டிட வேண்டும். ஒரு கட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தங்களுடைய கட்சியில் பணியாற்றி தேர்தலுக்காக போட்டியிட வேண்டும் என்பதற்காக ராஜினாமா செய்வது என்பது மிகவும் செண்டிமெண்ட் ஆன ஒரு விஷயம். இதேபோல் ஊடகங்களிலும் இதுபோன்ற விவாதத்தை வைத்து பெரிய சங்கடத்தை உருவாக்கியது”.
உதயசூரியன் சின்னத்தில் நின்றாலும் உங்களுக்கு வெற்றி உறுதி தானே?
“பிற சின்னத்தில் நின்றாலும், அதற்கு நிறைய சட்டம் சிக்கல்களும் இருக்கிறது. திமுகவும் சரி, ம.தி.மு.க.வும் சரி இரண்டுமே திராவிட கொள்கையை அடிப்படையாக கொண்டதுதான். சமூக நீதி, சமத்துவம் அதை சார்ந்தது தான். தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேரூன்றக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக 7 வருடத்திற்கு முன்பாக எங்கள் கட்சித் தலைவர் வைகோ தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருந்தார். இந்த தேர்தலில் எங்களை வழிநடத்தி கொண்டு செல்வது தி.மு.க கட்சியின் முக்கிய தலைவர்கள் தான். தி.மு.க. தொண்டர்களும் ம.தி.மு.க தொண்டர்களை போல தோளோடு தோள் நின்று எங்களுடன் களத்தில் இருக்கிறார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்னது போல எங்களுடைய இலக்கு ஒன்றே ஒன்றுதான். மத்தியில் மோடியும், மதவாத பா.ஜ.க.வும் வரக்கூடாது என்பதுதான் எங்களுடைய ஒரே இலக்கு”.
திருச்சி கடந்த தேர்தலில் அதிகமாக வாக்கு வாங்கிய தொகுதி. இப்பொழுது இந்த தேர்தலில் இந்த தொகுதியை திமுக உங்களுக்கு ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி உங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறதா?
“திருச்சியை பொருத்தவரை இரண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டங்களுக்கு சென்று இருக்கிறேன். புதுக்கோட்டையில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சென்றிருக்கிறேன். அங்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய முக்கியமான தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் வந்தனர். அந்தக் கூட்டத்துக்கு சென்றதுமே அனைவரும் என்னை இன்முகத்தோடு வரவேற்றனர். அங்கு காங்கிரஸ் இயக்கத்துக்கும் எங்களுடைய குடும்பத்திற்கும் இருக்கக்கூடிய நெருக்கத்தை நினைவுபடுத்தி பேசினேன்.
அதேபோல், ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரையின் போது அவரோடு 4 மணி நேரம் நடைபயணம் மேற்கொண்டேன். அப்போது காங்கிரஸ் தலைவர்களே ஆச்சரியப்பட்டார்கள் அப்போது ராகுல் காந்தியுடன் பேசியதையும் புதுக்கோட்டை செயல்வீரர் கூட்டத்தில் நினைவுபடுத்தி பேசி இருந்தேன். இதைக் கேட்டதுமே காங்கிரஸ்காரர்கள் நெகிழ்ந்து விட்டார்கள். அங்கு உள்ளே செல்லும்போது 70%, வெளியே வரும் போது 100% காங்கிரஸ் காரர்களின் மனங்களை வென்று விட்டேன் என்று தான் கூற வேண்டும். களத்தில் திமுகவோடு காங்கிரஸ்காரர்களும் நன்றாகப் பணியாற்றி வருகிறார்கள். அண்ணன் திருநாவுக்கரசைப் பொருத்தவரையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நல்ல உறவு அவருடன் இருக்கிறது. தொகுதி ஒதுக்கப்பட்டவுடன், அவரிடம் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினேன். அவரும் என்னை ஆதரித்து வெற்றி பெற்று வாருங்கள் என்று கூறினார். அவர் ஆதரவுடன் அவர் சார்ந்த காங்கிரஸ் தொண்டர்களும் என்னுடன் களத்தில் நின்று வருகிறார்கள்” என்று கூறினார்.