அரியலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் கரோனா பரவலே இல்லை, மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற மாயையை அரசு ஏற்படுத்தி வந்தது. அந்த மாயை இன்று உடைந்து போனது. அரியலூரில் கரோனாவுக்கு முதல் உயிர் பலியாகி விட்டது.
கரோனா தொற்றால் அரியலூர் மாவட்டத்தில் முதலாவதாக இறந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளவர், அரியலூர் கடைவீதியில் மங்காப் பிள்ளையார் கோவில் அருகே பூக்கடை வைத்திருந்தவர்.
இவர் கடந்த ஒரு வாரம் முன்பு வரை தனது கடையில் அமர்ந்து பூ வியாபாரம் செய்தவர். எந்த வெளியூருக்கும் சென்றவர் கிடையாது. வெளியூருக்குச் செல்லாமல், கடையிலேயே இருந்தவருக்கு கரோனா எப்படித் தாக்கியது என்பது தான் கேள்வி.
இந்தக் கேள்விக்கான விடை, கடந்த பத்து நாட்களில் அரியலூர் நகரில் தொற்று பரவிய விபரத்தின் மூலமாகத் தெரிய வருகிறது.
அரியலூர் நகரில் மாதா கோவில் அருகே கடை வைத்திருக்கும் ஒரு நபருக்கு, பத்து நாட்களுக்கு முன்பாக கரோனா தொற்று ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அடுத்து, அரியலூர் நகரில் தஞ்சாவூர் சாலையில் ஒருவருக்குக் கரோனா தொற்று என அறிவிக்கப்பட்டது.
அடுத்து சடையப்படையாட்சித் தெருவில், இருவருக்குத் தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்போது தொற்று அறியப்பட்ட பூக்கடைக்காரர் இறந்து போய்விட்டார்.
இவர்கள் அத்தனை பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதவர்கள். வெவ்வேறு தெருவைச் சேர்ந்தவர்கள். இப்படித் தொடர்பில்லாமல் பரவுவதைத் தான் வல்லுநர்கள் "சமூகப் பரவல்" என்கிறார்கள்.
சமூகப் பரவலால் தான், பூக்கடைக்காரர் இறந்து போயுள்ளார்.
நகரத்தில், இவர்களுக்கிடையே தொற்றைக் கொண்டு சேர்த்தவர்கள் யார் என்று கண்டறியப்படவில்லை. இவர்கள் மூலம் வேறு யாருக்கு பரவி இருக்கும் என பரிசோதனை செய்யப்படவில்லை. டிரேஸிங் என்பது அறவே இல்லை.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளை நாளிதழ்களில் பணியாற்றும் சில சமூக ஆர்வம் கொண்ட நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர்கள், "பாதிக்கப்பட்ட இடத்தை 'சீல்' செய்வதும், கிருமிநாசினி தெளிப்பதுமே எங்கள் பணி, சுகாதாரத்துறையிடம் கேட்டுக் கொள்ளுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்கள்.
சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "எங்கள் பணி பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, மருந்து கொடுப்பது மாத்திரம் தான். நீங்கள் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கேளுங்கள்", என்று கூறியுள்ளனர்.
வருவாய்த்துறை அதிகாரிகளைக் கேட்டதற்கு," எங்கள் பணி உணவு அளிப்பது, முகாமை நிர்வகிப்பது தான்", என்று கூறியுள்ளனர்.
"இப்படி மூன்று துறையும் ஒருங்கிணைப்பில்லாமல் செயல்படுகிறார்கள்", என்று தங்கள் கவலையைப் பத்திரிகைத் துறை நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.
இவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய, கண்காணிக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரிடம் அதிகாரம் இல்லை.
கரோனா நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, சுகாதாரத் துறை துணை இயக்குநர் தான் முழு அதிகாரத்தையும் தன் கையில் வைத்துள்ளார். இவர், சுகாதாரத் துறை அமைச்சரின் மாவட்டமான புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். இவரது அண்ணன், அமைச்சர் விஜயபாஸ்கரின் உற்ற நண்பர். அந்த அதிகாரத்தைக் காட்டுகிறார். அதிகாரம் செய்யட்டும், பரவாயில்லை. அதன் மூலம் கரோனா கட்டுப்படுத்தப்பட்டால் மகிழ்ச்சி. ஆனால் கரோனா பரவி, பாதிக்கப்படுவது மக்கள் என்பது தான் கவலைக்குரிய விஷயம்.
கடந்த மே மாதம், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் தொழிலாளர்கள் அரியலூர் மாவட்டத்திற்கு வந்த போது, ஒரே நாளில் 188 பேருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. அன்றோடு பரிசோதனை நிறுத்தப்பட்டது. பிறகு, பல புகார்கள் அய்.சி.எம்.ஆருக்கு சென்று பரிசோதனையை மீண்டும் துவங்கினார்கள். ஆனால், ரிசல்ட் வெளிப்படையாக அறிவிக்கப்படுவது என்பது இல்லை.
இதுவரை 3,000 பரிசோதனைகள் எடுக்கப்பட்டதாக தகவல் வருகிறது. அதில், ஒருவருக்கே எத்தனை முறை எடுக்கப்பட்டது, எத்தனை நபர்களுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் இல்லை. கடந்த ஒரு மாதமாக எடுக்கப்படும் பரிசோதனைகள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு மாத்திரமே எடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இருந்து வெளியில் செல்லாதவர்கள், தாமாக முன் வந்து டெஸ்ட் எடுக்கச் சென்றாலும், பரிசோதிக்கப்படுவதில்லை. அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரமே டெஸ்ட் எடுக்கப்படுகிறது.
அப்படித் தான், இன்று பலியானவரும் ஒரு வாரமாக சளி, காய்ச்சல் என பாதிக்கப்பட்டு, தானாக அரியலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவருக்கு நீரிழிவு நோயும், ரத்த அழுத்தமும் உள்ளதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு மூன்று நாட்கள் முன் பரிசோதிக்கப்பட்டு, இன்று தான் முடிவுகள் வந்தன. முடிவு வரும் முன்பே அவர் இறந்து விட்டார்.
இவர் தானாக மருத்துவமனைக்குச் சென்றிருக்காவிட்டால், அவருக்கு பரிசோதனை நடந்திருக்காது. அறிகுறி இல்லாமல், கரோனா தொற்றி இருப்பது அவருக்கே தெரிந்திருக்காது. அவர் மூலம் பலருக்கும் பரவ வாய்ப்பாக ஆகியிருக்கும். இப்போதும் அவருக்கு யார் மூலம் பரவியது என்பது தெரியாது. எத்தனை பேருக்கு பரவி இருக்கும் என்பது தெரியவில்லை.
இது தான் சமூக பரவல்.
ஆனால், " சமூகப்பரவல் இல்லை", என மூச்சைக் கட்டிக் கொண்டு முழங்குகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதற்கு, மருத்துவம் படித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ஒத்து ஊதுவது தான் கேவலம்.
சமூகப்பரவல் என அரசு அறிவித்து விட்டால் கூட, மக்கள் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டுத் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வார்கள்.
"கரோனா தொற்று எப்போது ஒழியும் என ஆண்டவனுக்குத் தான் தெரியும்", என சொன்னது போல, "என் அரசால் உங்களைக் காக்க முடியாது", என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்து விட்டால், மக்கள் தற்காப்பு நடவடிக்கையில் இறங்குகிறார்கள்.
இந்த முதல் கரோனா பலிக்கு பிறகாவது, அரியலூர் மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் மக்களைப் பாதுகாக்க முடியும்.
அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகள் அதிகம். ஆலைப் புகையால், ஏற்கனவே பலர் ஆஸ்துமா தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். வரும் மழைக்காலத்தில் அவர்களுக்கு மூச்சுப் பிரச்சினை அதிகமாக இருக்கும். அவர்களை கரோனா தாக்கினால், நிலைமை விபரீதமாகி விடும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை.
நான் மே மாதத் துவக்கத்தில் விட்ட அறிக்கைக்கு பின் விழித்திருந்தால், நிலைமை மோசமாகி இருக்காது. இனி நிலைமை இன்னும் மோசமாகாமல் தடுக்க வேண்டும்.
தி.மு.கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது அறிக்கையை அலட்சியப்படுத்தி, தமிழக அரசு தடுமாறுவது அனைவரும் அறிந்தது. கேரள மாநிலத்தில் கட்டுப்படுத்தப்பட்டது போல், தமிழகத்திலும் கட்டுப்படுத்தி இருக்கலாம்.
கடவுள் மீது பழியைப் போட்டு, கையாலாகத் தனத்தை மறைத்துத் தப்பிக்க முயலாமல், அரசு தன் கடமையைச் செய்ய முன்வர வேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.