சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களை அவரின் குடும்பத்தினர் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், இதுதொடர்பாக மனநல மருத்துவர் ஷாலினியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு,
சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு அரசியல்வாதிகள் பல்வேறு காரணங்களை கூறுகிறார்கள். தற்கொலைக்கு அதிகப்படியான மன உலைச்சலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதை எதிர்கொள்கிற மனநிலையை அவர்கள் ஏன் பெறவில்லை. இந்த தற்கொலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இது தற்கொலை என்பதால் அது மனநலம் சம்பந்தப்பட்ட ஒன்று. அதை பற்றி நாம் பேசித் தான் ஆக வேண்டும். அதுவும் என் மரணத்துக்கு இவர்கள்தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு இறந்தார் என்றால், அப்போது நாம் சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவர் மட்டுமல்ல எந்த வயது உடையவர்களையும் அதிகப்படியான அளவு அவமானப்படுத்துதலோ அல்லது உதாசீனப்படுத்துதலோ அவர்களுக்கு நேரும்போது இயல்பாகவே அவர்கள் இத்தகைய முடிவுக்கு வருகிறார்கள். இது வயது சம்பந்தபட்டது மட்டும் அல்ல. 60 வயது உள்ளவர்களுக்கும் இத்தகைய அழுத்தங்கள் ஏற்படுவது உண்டு. எல்லோர் முன்னாடியும் என்னை இப்படி பேசிடாங்களே, இப்படி அவமானப்படுத்தி விட்டார்களே என்ற எண்ணம் தான் அவர்களுக்கு மோலோங்கி இருக்கும். இதுவே அவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாத நிலைக்கு போவதற்கு மிக முக்கியமான காரணம்.
இந்த பெண் குறிப்பாக தன் மரணத்துக்கு இதுதான் காரணம் என்று எழுதி இருக்கிறாள். தன்னுடைய பெயர் இங்கு மிக முக்கிய பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது மன நலக்குறைப்பாடு என்று எடுத்துக்கொள்ள முடியாது. அவருக்கு அங்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அவர்களால் தாங்க முடியாமல் அவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். எவ்வளவு பெரிய வலிமையானவர்களாக இருந்தாலும், அவர்களால் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்துக்கு மேல் தாங்க முடியாது என்பதுதான் இயற்கை. அந்த பெண் விளக்கமாக காரணத்தை பற்றி சொன்ன பிறகு நாம் அது குறித்து விசாரித்து அவர்களுக்கான நியாயத்தை வழங்கியே ஆக வேண்டும். அந்த பெண் என் பெயரே பிரச்சனையா இருக்கு என்று சொல்லியிருக்கிறாள் என்றால், அப்படி அவருக்கு என்ன பெயர் இருக்கிறது. பாத்திமா லத்தீப். இந்த பெயர் அதுவும் சென்னையில் பிரச்சனையாக இருக்கிறது என்றால் நம்முடைய சமூகத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
பாத்திமாவுக்கு முதலில் வட இந்தியாவில் படிக்க இடம் கிடைத்ததாகவும், ஆனால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பதால் நாங்கள் தமிழ்நாட்டை தேர்வு செய்தோம் என்று அந்த மாணவியின் அம்மா கூறியிருக்கிறார். மேலும், இயல்பாக இஸ்லாம் சமூகத்தில் அணியும் ஆடைகளையும் பொது சமூகத்தில் இணைவதற்காக நாங்கள் அவளிடம் தவிர்க்க சொன்னோம் என்று அவர்கள் அம்மா கூறியிருப்பதை பற்றி?
இது இஸ்லாமிய சமூக மக்களுக்கு இருக்கும் அச்சத்தின் வெளிப்பாடாகவே இதனை பார்க்க வேண்டும்.இவற்றை அவர்கள் உணர்ந்ததால் தான் வேறு எங்கும் அவரது மகளை சேர்க்காமல் தமிழகத்தில் சேர்ந்ததாக கூறுகிறார்கள். ஏனென்றால் தமிழகத்தில் மட்டும்தான் கோ பேக் மோடி சாத்தியப்படும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அப்படி இருந்து நீ முஸ்லிம் என்று சொல்ல தேவையில்லை, ஷால் போட்டுக்க தேவையில்லை என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றால், இதை நினைத்து நாம் அவமானப்பட வேண்டும்.