அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு குறித்து வழக்கறிஞர் சரவணனை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
செந்தில் பாலாஜி சார்பாக நீதிமன்றத்தில் என்னென்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டன?
செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றத்தில் அனைவரின் வாதங்களும் முடிவடைந்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், உயர்நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்துத்தான் வழக்கை விசாரிப்போம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அனைத்து வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு அமலாக்கத்துறை சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
குறிப்பாக, 41ஏ என்று சொல்லக்கூடிய சட்டப்பிரிவின்படி 7 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை கொடுக்கும்பட்சத்தில் கைது செய்வதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தோம். எனவே, செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் கொடுக்காத போது அவரை கைது செய்ய முடியாது என்றும் மேலும் ஜாமீனில் அவரை விடுவிக்க வேண்டும் என்ற வாதத்தை எடுத்துரைத்தோம். அது மட்டுமல்லாமல், அவர் சிகிச்சையில் இருந்தபோது நீதிமன்றக் காவலில் வரும் 15 நாட்கள் முடிவடைந்த பிறகு மீண்டும் விசாரிக்க முடியாது என்ற வாதத்தை எடுத்து வைத்தோம்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்படும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். நல்ல விசாரணை அமைப்பாக இருந்தால் அவர் சிகிச்சை முடிந்த பிறகு கைது செய்து கொள்ளலாம் என்று விட்டிருப்பார்கள். ஆனால், இவர்கள் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்தாலும் அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிடுகிறார்கள். அவர்கள் அதை எடுத்துரைத்த போது நீதிமன்றமும் செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் இருந்து விசாரித்துக் கொள்ளலாம் என்ற தீர்ப்பையும் வழங்குகிறது. இப்போது மீண்டும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விசாரிக்க இன்னும் சில நாட்கள் அவகாசம் கேட்கிறது. இது அப்போதே அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டாமா? இந்த அமலாக்கத்துறையின் இரட்டை வேடத்தைத்தான் நீதிமன்றத்தில் முறையிட்டோம்.
செந்தில் பாலாஜி மனைவி கொடுத்த ஆட்கொணர்வு மனு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
செந்தில் பாலாஜியின் மனைவி கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் தான் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதுமட்டுமல்லாமல், இந்த கைது தவறான முறையில் நடந்திருப்பதாகக் கூறியிருக்கிறோம்.
செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க சிறிது காலம் தேவைப்படும் என்பதற்காகத்தான் அவருடைய ஓய்வுக்காலத்தை நீட்டித்து இருக்கிறார்களா?
செந்தில் பாலாஜிக்கு செய்திருப்பது பைபாஸ் அறுவை சிகிச்சை. அதனால் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து சில நாட்களுக்குள் வரலாம். ஆனால், அவர் முழுவதுமாக குணமடைய சிறிது காலம் அவகாசம் தேவைப்படும். இப்படி அவரது உடல்நிலை மோசமாக இருக்கும் சூழ்நிலையில் அவரை சந்தேகப்படுகின்றனர். செந்தில் பாலாஜி உயிருக்குப் போராடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது அவரை விசாரிக்க வேண்டும் என்று கேட்டதுதான் இந்த அமலாக்கத்துறை.
செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக இருக்கிறாரா?
செந்தில் பாலாஜியின் தம்பியை பற்றி அமலாக்கத்துறையினரிடம் தான் கேட்க வேண்டும். அதைப் பற்றி நான் எப்படி கருத்து சொல்ல முடியும்.
செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாமல் போனால் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்குவாரா?
இப்போதும் அமலாக்கத்துறையின் பிடியில்தான் இருக்கிறார். மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என்பதை தமிழக முதல்வர்தான் முடிவு செய்ய முடியும். மாறாக ஆளுநரோ அமலாக்கத்துறையோ கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அமலாக்கத்துறை விசாரணையில் செந்தில் பாலாஜி மிரட்டும் தொனியில் பேசுகிறார் என்று குற்றம் சாட்டி வருகிறார்களே?
இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து எதிர்க்கட்சியினரையும் மிரட்டிக் கொண்டிருப்பதுதான் அமலாக்கத்துறை. இந்த அமலாக்கத்துறை பாஜக கைப்பாவையாக இருந்து கொண்டு யாரையெல்லாம் கைது செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்தால் தெரியும். செந்தில் பாலாஜி, டி.கே.சிவக்குமார், சஞ்சய் ராவத், மணீஷ் சிசோடியா என எதிர்க்கட்சிகளை மட்டுமே தாக்கும் ஏவல் படையாகத்தான் இருக்கிறது அமலாக்கத்துறை.
விஜயபாஸ்கர் குட்கா வழக்கில் ரூபாய் 25 கோடிக்கும் மேல் ஊழல் செய்தார். ஆனால், அவர் மீது அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தவில்லை. செந்தில் பாலாஜியை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்? அதே போல் கர்நாடகாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினரை 8 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்ததாக காலையில் கைது செய்து மாலையில் விடுவிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், அதிமுக ஆட்சியில் 2013 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆண்டு வரை நடந்த ஊழல் என்று சொல்கிறார்கள். 10 வருடங்கள் கழித்து அமலாக்கத்துறையினர் கைது செய்வது என்பது நகைச்சுவை நாடகமாக இருக்கிறது.
செந்தில் பாலாஜியை வெளியே விட்டால் அவர் ஆதாரத்தை கலைத்து விடுவார் என்று சொல்கிறார்களே?
10 வருடங்களுக்கு முன்னே நடந்த ஊழலின் ஆதாரத்தை இப்போதுதான் செந்தில் பாலாஜி வெளியே வந்து கலைத்து விடுவாரா? இதெல்லாம் யாரை ஏமாற்றுகிற வேலை.
செந்தில் பாலாஜியின் வீட்டில் ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா?
அதிமுக ஆட்சியில் 10 வருடங்களுக்கு முன் நடந்த ஊழலுக்கு 2023 ஆம் ஆண்டில் தலைமை செயலகத்தில் சென்று ஆவணங்கள் இருக்கும் எனத் தேடி வந்தனர். இதிலிருந்து, தலைமை செயலகத்திற்குள்ளே எங்களால் வர முடியும் என்பதை காட்டுவதற்கும், திமுகவை சீண்டிப் பார்ப்பதற்கும் தான் இது போன்ற வேலையை செய்து வருகின்றனர். அங்கு தேடியும் ஒரு ஆதாரத்தையும் எடுக்கவில்லை. இதைக் கண்டு அச்சப்படக்கூடிய இயக்கம் திமுக கிடையாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஏன் ஒத்துழைப்பு தரவில்லை?
இந்த கைது முறையே தவறு என்றுதான் நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறோம். அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்வது வழக்கமாக அதிகாரிகள் சொல்லும் சொல் தான்.
நீதிமன்றக் காவலில் இருக்கும் போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியுமா?
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும். அதன் அடிப்படையில் தான் நீதிமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம்.