வாக்குப்பதிவிற்கான நாள் நெருங்கி வருவதால் நாங்குநேரி இடைத்தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் சூட்டைக் கிளப்பியுள்ளனர். இரட்டை இலையை எந்தளவுக்கு நம்புகிறாரோ, அதைவிட எடப்பாடியின் கரிசனத்தை ரொம்பவே நம்புகிறார் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன். ஏனெனில் கையில் காசு இல்லாமல் திண்டாடுகிறார். இந்த எம்.எல்.ஏ. பதவிக்கு ஒன்றரை வருஷம்தான் ஆயுசு என்பதால், நாராயணனுக்கு செலவழிக்க அவரது உறவினர்கள் தயங்கி நிற்கிறார்கள். தொகுதியில் முதலிடத்தில் இருக்கும் 61,539 இந்து நாடார் ஓட்டுகளை பெரிதும் நம்புகிறார் அதே இனத்தைச் சேர்ந்த நாராயணன். அதிலும் சாமித் தோப்பு அய்யா வழி பக்தரான நாராயணன், அந்த பக்தர்கள் தன்னை கரை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார்.
அய்யா வழி பக்தர்களை அதிகம் நம்பினால், தொகுதியில் இருக்கும் 20,513 கிறிஸ்தவ ஓட்டுகளை வாங்குவது கஷ்டம் என்பது ஆளும் தரப்பிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கவலையை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள் பட்டியலின மக்கள். சிலபல காரணங்களால் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. தன்னிடம் எதுவும் கலந்தாலோசிக்காமல் தன்னை புறக்கணிப்பதாக நினைக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனும் சைலண்ட் மோடுக்குப் போய், ஆளும் தரப்பை அலறவிட்டுக் கொண்டிருக்கிறார். தாழ்த்தப்பட்ட இனத்தின் உட்பிரிவு இனங்களை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வலியுறுத்தி, அந்த இனமக்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் கொந்தளித்த ஆயர்குளம், அரியகுளம், இலையார்குளம், தேவகன்குளம் உள்ளிட்ட 65 கிராமங்களில் வசிக்கும் பட்டியலின மக்கள் நான்கு நாட்களுக்கு முன்பு வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைக் காட்டியதால் இலைத் தரப்பு மிரண்டு போயுள்ளது. ஆளும் கட்சியுடன் மல்லுக்கட்டும் காங்கிரசின் ரூபி மனோகரனோ ரூபாயை தாராளமாக இறக்கி வருகிறார். மொத்த பட்ஜெட் 20 சி என்ற கணக்குடன் கோதாவில் குதித்திருக்கும் ரூபி மனோகரன், தி.மு.க. நிர்வாகிகளிடம் மொத்த தொகையையும் ஒப்படைத்துவிட்டார். இது காங்கிரஸ் நிர்வாகிகளை சங்கடத்திற்குள்ளாக்கியது. அப்ப எம்.எல்.ஏ.வாக இருந்து இப்ப எம்.பி.யாகியிருக்கும் வசந்தகுமாரும் இப்ப நிற்கும் ரூபி மனோகரனும் சென்னைக்காரர்கள். உள்ளூர்க்காரர்களான நமக்கு இனிமே சீட் கிடைக்காது என்ற விரக்தியில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரசின் முன்னாள் தலைவர்களான மோகன் ராஜாவும் தமிழரசனும் ஒதுங்கியே இருந்தார்கள்.
"ஆஹா இது நம்ம சம்பந்தி ரூபி மனோகரனுக்கு சிக்கலாச்சே' என நினைத்த எம்.பி. வசந்தகுமார், கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்களை வளைக்க வேண்டிய விதத்தில் வளைத்துவிட்டார். இப்போதைய கிழக்கு மாவட்டத் தலைவரான சிவக்குமாரும் நன்றாகவே வளைந்துவிட்டார்.
வேட்பாளர் காங்கிரஸ் என்றாலும் களத்தில் சுறுசுறுப்பு காட்டுவதென்னவோ தி.மு.க.வின் தேர்தல் படைதான். ஐ.பெரியசாமி, ஆவுடையப்பன், கருப்பசாமி பாண்டியன், சுரேஷ்ராஜன், அனிதா ராதாகிருஷ்ணன் என 27 பேர் கொண்ட படை நாங்குநேரியை கலக்கிய நிலையில்... தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் வேன் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம் ஆகியவை கூடுதல் தெம்பு தந்துள்ளது. களக்காடு தி.மு.க. ஒ.செ. பி.சி.ராஜன் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் காரியாலயத்தைத் திறந்து வைத்த எம்.பி. கனிமொழி, இத்தொகுதிக்கு கலைஞர் செய்த திட்டங்களைப் பட்டியலிட்டுக் கிளம்பியிருக் கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக கடைசிநேர "பணி'கள் முக்கியம் என்பதே கள நிலவரம்.