Skip to main content

பாஜகவில் இணைத்துக்கொண்டால் அமலாக்கத் துறை சோதனை செய்யமாட்டார்கள் - பத்திரிகையாளர் பாண்டியன்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

Tamizha Tamizha Pandian Interview

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியனை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு...

 

பாஜக மீது எந்த வித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. அமலாக்கத் துறையினர் அவர்களது கடமைகளைத்தான் செய்கிறார்கள். இதற்குப் பின்னால் எந்த அரசியல் பின்புலமும் இல்லை என்று அண்ணாமலை கூறுகிறாரே?

 

ஆருத்ரா பைனான்ஸில் நடந்த மோசடி வழக்கில் பணம் கொடுத்தவர்கள் அனைவரும் பாஜக அலுவலகத்தில் ஏன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மேலும், மோசடி செய்தவரை அண்ணாமலையும் அமர் பிரசாத் ரெட்டியும் தமிழக பாஜக செயலாளராக ஏன் நியமித்தார்கள். ஆருத்ரா பைனான்ஸில் 2500 கோடி ரூபாய் ஏமாற்றி மோசடி செய்தவரை காவல்துறையினர் தேடும் நிலையில் மோடியை வரவேற்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறார். பல ஆயிரம் கோடி மோசடி செய்த ஒருவரின் அலுவலகத்தில் தான் பாஜகவின் வார் ரூம் நடக்கிறது.

 

மேலும், அதானி, நீரவ் மோடி, லலித் மோடி போன்றவர்களை எல்லாம் அமலாக்கத் துறையினர், வருமான வரி துறையினர் கண்ணுக்கு தெரிவதே இல்லை. அவர்கள் வீட்டில் சோதனை நடத்தாது. பாஜகவில் தங்களை இணைத்து கொண்டால் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்த மாட்டார்கள். மாநில கட்சிகளை பலவீனப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதே பாஜகவினுடைய அரசியல் தந்திரம். அதனால் திமுகவில் பக்கபலமாக இருக்கக் கூடிய செந்தில் பாலாஜி மூலம் இடையூறு செய்து திமுகவை கவிழ்க்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

 

இதன் மூலம் அதிமுக, பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்வதற்கு திமுகவில் உள்ள அமைச்சர்களுக்கு வருமான வரி துறையினர் மூலம் சோதனை நடத்துகிறார்கள். இது முழுக்க முழுக்க அரசியல் சூத்திரம் தான். இதற்கு உதாரணம், டெல்லியில் வென்று பஞ்சாபிலும் வென்ற அரவிந்த் கெஜ்ரிவாலை கவிழ்க்க, அவருடைய 2 அமைச்சர்களான மணீஷ் சிசோடியா, சத்தியேந்திர குமார் ஜெயின் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் அமலாக்கத் துறையினரும் வருமான வரி துறையினரும் எதிர்க்கட்சிகளை மட்டும் பலவீனப்படுத்துவதற்கு இயங்கும் துறையாக  மாறி வருகின்றன.

 

செந்தில் பாலாஜியை கைது செய்தும் என்ன வழக்கு போட்டிருக்கிறார்கள் எனத் தெரியாது என்று திமுக வழக்கறிஞர்கள் கூறுகின்றார்களே?

 

அராஜகமாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு பாஜக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சிவசேனாவில் நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கக்கூடிய சஞ்சய் ராவத், பாஜக செய்த ஊழல் பட்டியலை அமலாக்கத் துறையினரிடம் ஒப்படைக்கிறார். ஆனால், இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், 18 வயதுக்கு கீழான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்யக் கோரி பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர் மீதும் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டும் அவரைக் காப்பாற்ற பாஜக நினைக்கிறது. அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க யாரும் நினைக்கவில்லை. பாஜகவை சார்ந்தவர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாதென நீதிபதிகளுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது என்று ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணீர் மல்கக் கூறுகிறார். இது தான் பாஜகவினுடைய கொள்கையாக இருக்கிறது.