புதிய கல்வி கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய கருத்தை காட்டமாக தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அவரை கடுமையான சொற்களால் வறுத்தெடுத்தார்கள். இதுதொடர்பான வாத, பிரதிவாதங்கள் அதிக அளவில் எழுந்துள்ள நிலையில், திமுகவின் தமிழன் பிரசன்னாவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். இதோ அவரின் அதிரடி பதில் வருமாறு,
புதிய கல்வி கொள்கை பற்றிய விவாதம் தற்போது அனைத்து தரப்பினரிடமும் இருந்து எழுந்துள்ளது. திமுகவும் புதிய கல்வி கொள்கை தொடர்பாக குழு ஒன்றை அமைத்துள்ளது. நடிகர் சூர்யா இதுதொடர்பாக பேசினார், அவருக்கு பாஜக, அதிமுக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதை பற்றிய உங்களின் பார்வை என்ன?
மத்திய அரசு வெளியிட்டுள்ளது புதிய கல்வி கொள்கை அல்ல, அது புதிய காவிக் கொள்கை. பழைய காவிக் கொள்கையை பெயிண்ட் அடித்து புதிய கல்வி கொள்கை என்று அறிவித்துள்ளனர். சனாதான கொள்கையை வலியுறுத்தி மீண்டும் குலக் கல்வி திட்டத்தை கொண்டு வருவதற்கு விருப்பப்படும் ஆர்எஸ்எஸ் திட்டத்தினை திணிக்கும் முயற்சி தான் இந்த கல்விக்கொள்கை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைக்கூலியாக செயல்படும் பாஜக அரசு அவர்களின் எண்ணத்தை செயல்படுத்துவதற்கு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளில் முக்கியமான ஒன்று இந்த புதிய கல்வி கொள்கை திட்டம். பல சாமானியர்களுக்கு இந்த கல்வி கொள்கை பற்றி சரிவர தெரியவில்லை. கல்வி கொள்கையில் என்ன இருக்க போகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். நவீன காலத் தீண்டாமையின் ஒரு அங்கமே இந்த புதிய கல்விக்கொள்கை. தீண்டாமையை கல்வி என்ற பெயரில் மத்திய பாசிச பாஜக அரசு திணிக்க பார்க்கிறது. பல தலைமுறைகளாக படித்து வருபவர்களோடு, புதிதாக படிக்கும் ஒரு ஏழை தொழிலாளியின் குழந்தை எப்படி போட்டி போடமுடியும். பயிற்சி கொடுக்கப்பட்ட குதிரையுடன், பொதி சுமக்கும் குதிரை எப்படி போட்டியில் வெற்றிபெற முடியும்.
தரமான கல்வியை நோக்கி இந்த கல்விக்கொள்கை அழைத்து செல்லாதா?
நுழைவு தேர்வு அடிப்படையில் தான் தரமான கல்வி மாணவர்களுக்கு கிடைக்கும் என்று ஒரு போலியான புரிதலை இந்த கல்விக்கொள்கையின் வாயிலாக மக்களுக்கு திணிக்கப்படுகிறது. நுழைவு தேர்வை ரத்து செய்த பூமி தமிழகம். மாணவர்களின் எதிர்காலம் இந்த நுழைவு தேர்வுகளால் பாதிக்கப்படும் என்று தெரிந்த காரணத்தால்தான் கலைஞர் அதனை தமிழகத்தில் இருந்து விரட்டினார். பணம் இருப்பவர்கள் தான் நுழைவு தேர்வுக்காக பயிற்சி பெற முடியும், நீங்களும், நானும் எப்படி அதில் வெற்றிபெற இயலும். ஏழைகள் யாரும் படிக்க கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த கல்விக் கொள்கை கொண்டுவரப்படுகிறது. எப்படி குலக் கல்வி திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டதோ அதன் மற்றொரு வடிவமாகவே இதை நான் பார்க்கிறேன்.
இதை எப்படி குலக்கல்வி திட்டத்தோடு இணைத்து பார்க்கிறீர்கள்?
இந்த கல்வி கொள்கை வரைவின் படி முன்னேறியவர்கள் பொறியியல் படிக்க சென்றுவிடுவார்கள், ஏழைகள் தான் கையில் டெஸ்டரை வைத்துக்கொண்டு 10 ரூபாய் கொடுப்பார்களா என்று அலைய வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது டிப்ளோமா என்ற படிப்பு இருக்கு. இது ஒரு தொழிற்கல்வி. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் வீட்டு சூழ்நிலை காரணமாகவோ அல்லது கல்வியில் சோபிக்க முடியாத காரணத்தாலோ அவர்கள் அந்த படிப்பில் சேர்ந்து விரைவில் வேலைக்கு போகலாம். பிறகு, அவர்கள் பொறியியல் போன்ற மேற்படிப்பில் சேர விரும்பினால் அதற்கு தமிழகத்தில் வாய்ப்பு இருக்கிறது. இது அனைத்தும் இந்த புதிய கல்விக்கொள்கையால் அடிப்பட்டு போய்விடும். அதையும் தாண்டி ஓராசிரியர் பள்ளிகளை மூடுவோம் என்று கூறுகிறார்கள். இது எவ்வளவு பெரிய மோசடித்தனம். மலை கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் தன்னுடைய ஆரம்ப கல்வியை தொடங்க வேண்டும் என்றால், பலகிலோ மீட்டர் பயணம் செய்துதான் படிக்க வேண்டி உள்ளது. இப்படி சூழ்நிலைகள் இருக்கும்போது, நீங்கள் பள்ளிகளை மூடுவோம் என்றால், நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? மேலும், கல்லூரிகள் தரம் பிரிக்கப்படும் என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் எ,பி,சி என்று ரேங்க் வழக்கப்படும் என்கிறார்கள். மேலும், கல்லூரிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறைக்கப்படும் என்றால், அந்த கல்லூரிகள் வசதிப் படைத்தவர்களை மட்டுமே தங்களுடைய கல்லூரிகளில் சேர்ந்துக் கொள்ளும். வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள், அவர்களின் படிப்பு முடக்கப்படும். 'சி' கல்லூரிகளில் படித்தவனுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுப்பார்களா? இதற்கு மிக முக்கிய உதாரணம் சென்னை ஐஐடி. அங்கு 90 சதவீதம் யார் இருக்கிறார்கள். அதனால் தான் இதனை குலக்கல்வி திட்டத்தின் மற்றொரு வடிவம் என்று தொடர்ந்து கூறுகிறோம். அடுத்து மும்மொழிக் கொள்கை. இந்தி பேசம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தோடு, வேறு ஏதேனும் ஒரு மொழியை சேர்வு செய்து படித்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலத்தோடு, இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது இந்தி திணிப்பு இல்லையா, நேரடியாக செயல்படுத்த முடியாது என்று மறைமுகமாக கொண்டு வருகிறார்கள். இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்வது.
அதை தற்போது மாற்றிக்கொண்டு விட்டார்களே?
கஸ்தூரி ரங்கன் புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மும்மொழி கொள்கை தொடர்பாக எதிர்ப்பு வந்த உடனே, நான்கு நாட்களுக்கு பிறகு அது பழைய அறிக்கை, அதுதான் வெளியாகி உள்ளது என்று தெரிவிக்கிறார். ஒரு குழுவே ஒழுங்காக செயல்படாத போது அவர்களை நம்பி எங்களின் எதிர்கால பிஞ்சுகளை எப்படி ஒப்படைக்க முடிக்கும். நடிகர் சூர்யா அவருடைய அகரம் நிறுவனத்தின் விழாவில் பங்கேற்ற போது புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சில கருத்துக்களை பேசுகிறார். இதற்கு தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ அரைவேக்காட்டு தனமாக பேசக்கூடாது என்று பதில் அளிக்கிறார். பாஜகவினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நான் அவருக்கு சவால் விடுகிறேன், வேண்டுமென்றால் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை அழையுங்கள், இல்லையென்றால் தமிழகத்தை வீணாக்கிய ஈபிஎஸ் ஓபிஎஸ்-யை அழையுங்கள். இவர்கள் இந்த கல்விக்கொள்கை தொடர்பாக வெளியான 484 பக்க அறிக்கையை படித்தார்களா என்று கேட்போம். அவ்வாறு படித்து எதையாவது தெரிந்து கொண்டார்களா என்பதையாவது முதலில் அவர்களிடம் கேட்போம். சூர்யா ஒரு பாமரனாக தன் மனதில் எழுந்த கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால், அமைச்சர் கடம்பூர் ராஜூ அரைவேக்காட்டு தனமாக சூர்யாவின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். அவர்கள் எங்கு படித்தால் உங்களுக்கென்ன. பணம் இருப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் படிப்பார்கள். ஏழை எளியவர்களின் படிப்புக்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டால் கேட்பவர்களை மிரட்டுவது என்பது எந்த விதத்தில் நியாயம்.
சூர்யா மாணவர்களை தூண்டிவிடுவதாக அமைச்சர் தெரிவிக்கிறாரே?
அவர் தூண்டிவிடுவதில் என்ன தப்பு என்றுதான் நான் கேட்கிறேன். நீட் தேர்வி்ல் என்ன நடந்தது, மத்திய அரசுக்கு நாங்கள் நீட் தேர்வுக்கு விலக்குகோரி மசோதாவை அனுப்பி வைத்துள்ளோம் என்று நேற்று வரையில் சொல்லி வந்தார்கள். இன்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் என்ன கூறியிருக்கிறார்கள், நாங்கள் ஒரு ஆண்டுக்கு முன்பே அதனை திருப்பி அனுப்பி விட்டதாக தெரிவித்துள்ளார்கள். ஒரு அரசாங்கம் கல்வி விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றலாமா? இவர்கள் தான் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த துடிக்கிறார்கள்.
மத்திய அரசு கல்வி தொடர்பாக ஒரு வரைவு அறிக்கையை தானே வெளியிட்டு உள்ளது. அதற்கு ஏன் அதிகபட்ச பதட்டத்தை அனைவரும் வெளிப்படுத்துகிறீர்கள்?
இதை தற்போது எதிர்க்கவில்லை என்றால், அதை ஒரு எழுத்து மாறாமல் அமல்படுத்துவார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு செய்தி, தனியார் கல்லூரிகளை வார்த்தெடுக்க சிறப்பு நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். ஜியோ கல்லூரிக்கு 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அந்த பெயரில் ஒரு கல்லூரியாவது இருக்கிறதா? வெறும் இணையத்தில் மட்டும் இருக்கிற ஒன்றுக்கு 1000 கோடி ஒதுக்கப்படுகிறது என்றால், இது யாரை ஏமாற்றும் செயல். கல்வி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்றால் அதனை எதிர்ப்பதில் எந்த தவறும் இல்லை.