நாம் சுதந்திர நாட்டில்தான் இருக்கிறோமா? அல்லது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திற்கு சென்றுவிட்டோமா? என்ற குழப்பம் கடந்த மூன்று நாட்களாக வாட்டி வதைக்கிறது.
பிரிட்டிஷ் கம்பெனிகளுக்கு ஆதரவாக அன்றைய அரசு மக்களை வாட்டி வதைத்தது. இந்தியாவின் உள்நாட்டு தொழில்கள் நசுக்கப்படுவதை கண்டித்து நடந்த போராட்டங்களை துப்பாக்கி முனையில் ஒடுக்கியது பிரிட்டிஷ் அரசு. ஆனால், தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் குறித்து செய்தி வெளியிட பிரிட்டிஷ் அரசு தடை விதித்ததே இல்லை.
அதுபோல, எவ்வளவு பெரிய கலவரங்கள் நடைபெற்றாலும் அரசியல் தலைவர்கள் மக்களைச் சந்திக்க அனுமதி மறுத்ததே இல்லை.
ஆனால், நாடு விடுதலைப் பெற்றபிறகு ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் முன்னின்று நடத்திய மதக்கலவரத்தில் மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது கலவரப்பகுதிக்கு செல்ல காந்தி புறப்பட்டார். அவருடைய முடிவை கைவிட வேண்டும் என்று விடுதலைப் பெற்ற இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார். நவகாளி யாத்திரையை அவர் தொடங்கினார். அதன்பிறகே அங்கு அமைதி திரும்ப அரசு நடவடிக்கை எடுத்தது.
ஆனால், ஒரு நகரில் பெரும்பகுதி மக்களை விஷக்கொல்லியாய் மெல்லக் கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராடும் மக்களை குருவிகளைப்போல தமிழகக் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாய் கொன்று குவித்திருக்கிறது. ஒரு குஜராத்தி முதலாளியின் நிறுவனத்தை காப்பாற்ற பிரதமர் மோடி மூலமாக உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. அந்த விருப்பத்தை நிறைவேற்றும் ஏவல் துறையாய் போலீஸ் செயல்பட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுவிட்டது என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டால் முடிந்திருக்கக்கூடிய போராட்டத்தை ரத்தக்களறியாக்கி தனது கையாலாகாத்தனத்தை எடப்பாடி அரசு வெளிப்படுத்தி இருக்கிறது. மாநில முதல்வரும் அமைச்சர்களும் வாய்மூடி மவுனிகளாய் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லப்போன எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குப்போடும் நிலைதான் இருக்கிறது.
அமைச்சர்களும் மக்களைச் சந்திக்காமல், எதிர்க்கட்சித் தலைவர்களையும் மக்களைச் சந்திக்க விடாமல் செய்யும் இது சர்வாதிகார நாட்டில்தான் நடக்கும். போலீஸ் படை மட்டுமே தூத்துக்குடி நகரில் வீதிவீதியாக வீடுவீடாக புகுந்து கொடூரமான தாக்குதலில் ஈடுபடுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
போலீஸ் இப்போது எடப்பாடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
சமீபத்தில் பெண் பத்திரிகையாளர்களை பற்றி கேவலாமாக கருத்துத் தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகரை கைதுசெய்ய முடியாமல் இருந்த கையாலாகாத காவல்துறை அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொல்வதும், இரவோடு இரவாக வீடுகளுக்குள் புகுந்து கொடூரமாக தாக்குதல் நடத்துவதும்தான் வீரமா என்று பொதுமக்கள் வினா எழுப்புகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினையே சந்திக்க முதல்வர் மறுப்பது, ஜனநாயகக் கேலிக்கூத்தாகும். எதையும் போலீஸ் அடக்குமுறையை கையாண்டு அடக்கிவிடலாம் என்று நினைப்பது அரசின் முட்டாள்தனம் என்று அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு கொந்தளிக்கும் நிலையில் இருப்பதை சற்றும் உணராமல் போலீஸ் பாதுகாப்பில் பதவியில் நீடிக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்தால் அது நிச்சயமாக ரொம்பநாள் நீடிக்காது என்பதே நிஜம். ஏனெனில் சாது மிரண்டால் காடுகொள்ளாது என்பது பழமொழி.
மூன்று மாவட்டங்களை இணையத்தொடர்பில் இருந்து துண்டித்துவிட்டு போலீஸ் வெறியாட்டம் நீடிப்பதை தமிழகத்தின் மற்ற மாவட்டத்து மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மக்கள் அலை சுனாமியாக எழுந்தால் எடப்பாடி அரசாங்கத்தை சுருட்டி விழுங்கித் துப்பிவிடும் என்பதே உண்மை.