கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலிண்டர் வெடித்து கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தீவிரமாகத் தமிழக அரசை விமர்சித்து வரும் நிலையில், அவர்களின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா அல்லது அரசியல் செய்கிறார்களா என அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில், ஆளும் கட்சியான திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது பாஜக. அரசின் நிர்வாகத் திறமையே இந்த கோவை சம்பவத்திற்குக் காரணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தியாவின் அரசியல் தட்பவெப்ப நிலையைக் கொதி நிலைக்குக் கொண்டு சென்ற கட்சி இந்த பாரதிய ஜனதா கட்சி. எப்போது அவர்களுக்குப் பதவி ஆசை வந்ததோ, அப்போதே அவர்களின் அரசியல் மதத்தை மையமாக வைத்து இயங்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவில் எங்கே அசம்பாவிதங்கள் நடந்தாலும் அந்த அசம்பாவிதத்துக்குப் பின்னால் கண்டிப்பாக பாஜக இருக்கும். 18 மாத பயங்கரவாத சம்பவங்களோடு தொடர்புடைய கட்சி பாஜக. எப்போது அவர்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று முயற்சி செய்தார்களோ அப்போதே இந்தியா பாதுகாப்பு இல்லாத நிலைக்குச் சென்றுவிட்டது. ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்தி இந்த நாட்டில் சமூக நீதியைச் சூறையாடியவர்கள் இவர்கள். அன்றிலிருந்து இந்தியாவின் அமைதியைக் குலைத்து கலக்கத்திலேயே மக்களை வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், திண்ணத்திலும் இவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இன்றைக்குத் தமிழகத்தில் அமைதியைக் கொண்டு வந்திருக்கிறார் அண்ணன் ஸ்டாலின். அதை எப்படியாவது தடுத்து தடை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தில் இவர்கள் தொடர்ந்து செயல்படுகிறார்கள். இந்த ஆட்சியை அவமானப்படுத்த வேண்டும். செயல்பட விடாமல் தடுக்க அண்ணாமலை அவரால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து பார்க்கிறார். அண்ணாமலை கூறுவதை அவர்கள் கட்சிக்குள் இருப்பவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக பாஜகவுக்கு இதுவரை எத்தனையோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள். ஆனாலும் யாரும் இவரைப் போல் இருந்ததில்லை. அனைவரும் மரியாதையுடன் தான் பேசுவார்கள். இவரைப் போல் மானாவாரியாகப் பேசியதில்லை. நாவடக்கம் அண்ணாமலைக்கு மிக முக்கியமாகத் தேவையான ஒன்று. அதை அவர் விரைவில் தெரிந்துகொள்வார்.
கடலூர் சம்பவத்தைப் பற்றி சிலர் கேட்கிறார்கள், அண்ணாமலை உள்ளிட்ட அவர்கள் கட்சியினர் யாரிடமும் எந்தக் கேள்விக்கும் நேரடியான பதில் வராது. பதிலும் அவர்களிடம் இருக்காது. செந்தில் பாலாஜி மீது இவருக்குத் தனிப்பட்ட பகை இருக்கிறது. அதனால் அவரை இவர் டார்கெட் செய்கிறார். ஏனென்றால் கொங்கு பெல்ட் என்று சொல்லக்கூடிய இவருக்கு அரவக்குறிச்சி தொகுதி தான் சொந்தத் தொகுதி. இதில் போட்டியிட்ட அவர் வெற்றிபெற்று செந்தில் பாலாஜிக்கு அரசியல் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க நினைத்தார். ஆனால் நடந்த சம்பவம் உலகறியும். கோவையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத திமுகவை கரூரில் 4 தொகுதிகளில் வெற்றிபெற வைத்தார்.
இந்த அதிர்ச்சியை இன்றளவும் அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் என்ன நடந்தது. எங்களுக்குக் கொங்குப் பகுதியில் நொங்கு காய்ச்சிக் கிடக்கு என்று கதை விட்டு வந்தார்கள். ஒரு இடத்தில் கூட இவர்களால் வெற்றிபெற முடியாமல் போனது. உங்களால் உள்ளாட்சித் தேர்தலில் கணக்கே துவங்க முடியாமல் போய்விட்டது. இவர்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கோவை தெற்குத் தொகுதியில் கூட இவர்களால் வெற்றிபெற முடியவில்லை. ஒரு மாநகராட்சி உறுப்பினரை வெற்றிபெற வைக்க முடியாத ஏக்கத்தில் இவர்கள் எப்படியாவது ஆட்சிக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்துவிடலாம் என்று தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.
இவ்வாறு அந்தக் கட்சி அடையாளம் இல்லாமல் அழிந்து வருவதற்குச் செந்தில் பாலாஜியும் ஒரு காரணமாக இருக்கிறார். எனவே அவர் மீது ஒரு தனிப்பட்ட வெறுப்பு, பகை உணர்வு இவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதனால் அவரை தேவையில்லாமல் சீண்டிப் பார்க்கிறார்கள். கொலையாளி தொடர்பான தகவல் உங்களுக்கு எப்படி முதலில் தெரிந்தது என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினால் குரங்கு, நரி, சாராய வியாபாரிக்குப் பதில் சொல்ல முடியாது என்று தெனாவட்டாக பதில் சொல்கிறார். உன் கட்சிக்காரர்கள் எத்தனை பேர் சாராயம் வித்துப் பிழைக்கிறார்கள் என்று முதலில் உனக்குத் தெரியுமா? தேடப்படும் குற்றவாளிகளைக் கட்சியில் சேர்க்கும் அண்ணாமலை அஸ்தமனத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் என்பது மட்டும் நிஜம்.