எம்ஜிஆர் பெயரில் அறக்கட்டளை மற்றும் சினிமா நிறுவன துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, " எனக்கும் திரைத்துறைக்கும் வெகுதூரம். நான் திரையரங்கு சென்று படம் பார்த்து 25 ஆண்டுக் காலம் ஆகிறது. மற்றபடி தொலைக்காட்சியில் வருவதை நான் பார்த்திருக்கிறேன். பல திரைப்படத்தில் யார் நடிகர்கள் நடிகைகள் என்று கூட எனக்குத் தெரியாது. என்னுடைய மகன்கள் மற்றும் மனைவி அதில் வருபவர்களைப் பற்றி என்னிடம் கூறுவார்கள்.
இதை எதற்காக இங்குக் கூறுகிறேன் என்றால் அரசியலும் திரைத்துறையும் ஒன்றோடொன்று கலந்தது. இங்குப் பேசிய திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமானிய மனிதர் ஒருவர் முதல்வராக இங்கு வருவது அவ்வளவு எளிதல்ல என்று அவர் கூறினார். அது உண்மையும் கூட. திரைத்துறையில் வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதைப்போலத்தான் அரசியலில் வருவது என்றாலும் கஷ்டமான ஒன்று.
சிலருக்கு மட்டும்தான் அரசியலில் அந்த வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதனை நல்ல முறையில் நான் பயன்படுத்திக்கொண்டேன். மேலும் எஸ்ஏசி பேசும்போது ஏழை எளிய மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய வேண்டும், அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று பேசினார். என்னுடைய தலைவர்களே ஏழை எளிய மக்களின் கொடையாகப் பிறந்திருக்கிறார்கள். பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் ஏழை மக்களுக்காகவே உழைத்தார். அவர்களின் பொருளாதாரம் உயர்ந்தது. படிப்பு உயர்ந்தது. மருத்துவம் அவர்களுக்கு வேண்டியது கிடைத்தது. இன்னும் எத்தனையோ திட்டங்கள் அவர்களுக்கு எளிதாகக் கிடைக்க அவர் பாடுபட்டார். அதனைத் தொடர்ந்து புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா அதனை நிறைவேற்றிக் காட்டினார்கள்.
இன்னமும் சில செய்திகளைக் கூற வேண்டும் என்று விரும்புகிறேன். எங்கள் இயக்கத்தைத் தோற்றுவித்த இரண்டு தலைவர்களுமே திரைத்துறையிலிருந்து வந்தவர்கள். வேறு எந்த இயக்கத்துக்கும் இந்தப் பெருமை இருக்காது. ஆகவே திரைத்துறையின் அடித்தளத்தை ஆதாரமாக வைத்து இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டு இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. வேறு எந்த இயக்கத்திற்கும் இந்தச் சிறப்பு கிடைக்காது. திரைத்துறையில் எளிதில் ஜொலித்துவிடலாம். இரண்டு படம் நன்றாக நடித்தால் போதும், நல்ல இயக்குநர்கள் நடிகர்களுக்கு இரண்டு படங்களைச் சிறப்பாகக் கொடுத்தால் அவர்கள் எளிதில் செல்வாக்குப் பெற்றுவிடுவார்கள். ஆனால் அரசியல் அப்படி எளிதாக இருக்காது. எத்தனை எத்தனை கடினங்களைக் கடந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியாது.
ரோட்டில் மக்களைச் சந்திக்க ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து, அதாவது ஏணியில் ஒவ்வொரு படிக்கட்டாய் எப்படி ஏறுகிறோமே அப்படி படிப்படியாக உயர்ந்து இந்த இடத்தைப் பிடித்துள்ளோம். காலையில் ஏறி மாலையில் முதல்வராகி விட முடியாது. கடுமையான உழைப்பு இருக்க வேண்டும். நிறையக் கஷ்டங்களைச் சந்திக்க வேண்டும். கடுமையாக நம்மை எதிர்க்கக் காத்திருப்பார்கள். எப்போது தவறு செய்வோம். நம்மை வீழ்த்தலாம் என்ற ஒற்றை நோக்கத்தில் நம்மை நோட்டமிட்டு வருவார்கள். அவர்களிடம் நாம் சிக்காமல் எந்தத் தவறும் செய்யாமல் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். சிறிது தவறு செய்தாலும் நம் எதிர்காலத்தை அது பாதிக்கும் பெரிய தவறாக மாறிவிடும்.
நான் 34 வயதில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டேன். இது பலபேருக்குத் தெரியாது. அந்த அளவிற்கு நான் அரசியலில் அமைதியாக இருந்தேன். ஆனால் என்னுடைய எடப்பாடி தொகுதியிலே எந்த மூலை முடக்குகளில் போய் கேட்டாலும் இந்த எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்களோடு இணைந்தே என்னுடைய இத்தனை வருட பணிகளை அமைத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட 10 முறை அந்தப் பகுதியில் போட்டியிட்டுள்ளேன்.
7 முறை சட்டமன்றத்துக்கும், மூன்று முறை நாடாளுமன்றத்துக்கும் போட்டியிட்டுள்ளேன். ஒருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றாலே அடுத்த முறை மக்களைச் சந்திக்க பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும். ஆனால் இப்போது கூட 96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றியடைய வைத்துள்ளார்கள் என்றால் அதற்குக் காரணம் என்னுடைய கடினமான உழைப்பு. அதை எப்போதும் இந்த மக்களுக்குத் தருவேன்" என்றார்.