
உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பேரிடியாக இறங்கி இருக்கிறது கரோனா வைரஸின் தாக்கம். இதை ஈடுசெய்ய நிவாரண நிதி கோரியது மத்திய அரசு. பெருமுதலாளிகள், திரைப் பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் இதற்கு உதவிவரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை பிரதரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.
இந்நிலையில்தான், மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 2021, ஜூலை வரை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. மத்திய நிதியமைச்சகம் 23ந்தேதி வெளியிட்ட இதுதொடர்பான உத்தரவில், “குறைந்தபட்சம் 4% முதல் 6 மாதங்களுக்கும், 8% அடுத்த ஆறு மாதங்களுக்கும், 12% அடுத்த ஆறு மாதங்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படாது. நிறுத்தி வைக்கப்பட்ட இந்த அகவிலைப்படி பிறகு வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ள மத்திய அரசு ஊழியர்கள், “டி.டி.எஸ். என்ற பெயரில் வருமானவரியை முன்னதாகவே செலுத்திவிட்டு, மாத ஊதியம் பெரும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று கொந்தளித்து வருகிறார்கள்.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்க்கும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் துரைபாண்டியன், "ஆவக்காய் ஊறுகாய் தயாரிப்பதையும், நாட்டின் பொருளாதார கொள்கையையும் ஒரேமாதிரி கையாளுகிறது மத்திய அரசு. அதன் தவறான பொருளாதாரக் கொள்கையால் விலைவாசி ஏறி, பணப்புழக்கம் குறைந்திருக்கும் இந்தச் சூழலில், இப்படியொரு மோசமான முடிவை எடுத்திருக்கிறது.

பெருமுதலாளிகளிடம் இருந்து அரசு வங்கிகளுக்கு வரவேண்டிய பல லட்சம் கோடி வாராக்கடன்களை வசூல் செய்யாமல், பேரிடர் காலங்களில் பயன்படுத்த வேண்டிய தற்செயல் மற்றும் அவசரகால நிதிகளைப் பயன்படுத்தாமல், புல்லட் ரயில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்காக ஒதுக்கிய நிதியில் கைவைக்காமல், மோசமான சூழலிலும் மக்கள் பணியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் கைவைப்பது கண்டனத்திற்குரியது''’என்று ஆவேசமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
“கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்தை எட்டியும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காதது, விலைவாசியைக் குறைக்காமல் சுங்கக் கட்டணத்தை அதிகப்படுத்தியது போலவே இதுவும் மக்கள்விரோத நடவடிக்கைதான் என்கிறார்கள் மத்திய அரசு ஊழியர்கள்.
--ச.ப.மதிவாணன்