Skip to main content

கமலுடன் கூட்டணிக்கு ரெடியாகும் தேமுதிக? ரஜினிக்கு சாதகமான தேர்தல் களம்... அதிரடி திட்டம்!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

"வாரத்துக்கு வாரம் ஆரவாரம்' என அப்போதெல்லாம் சினிமா படங்களுக்கு போஸ்டர் அடிப்பார்கள். ஆனால் இப்போதோ வாரத்துக்கு வாரம் ரஜினியின் அரசியல் ஆரவாரம் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. "காவிச்சாயம் பூசும் விஷயத்தில் திருவள்ளுவரும் சிக்கமாட்டார், நானும் சிக்கமாட்டேன்'' என கடந்த வாரம் அதிரடி கிளப்பினார் ரஜினி. இது போதாதா... டி.வி. மீடியாக்களில் அனல் பறக்கும் விவாதம் நடந்தது.
 

rajini



வழக்கம்போல் அரசியல் விமர்சகர்கள், "ஆமாமா ரஜினிக்கு பி.ஜே.பி. மைண்ட் செட் கிடையாது'' என தங்களின் வாதத் திறமையால் கதிகலங்க வைத்தனர். ஆனால் அதேநாளில் அடுத்த சிலமணி நேரத்தில், அதே ரஜினி அளித்த பேட்டியில்... "காவி விஷயத்தை மீடியாக்கள்தான் பெரிதுபடுத்துகின்றன' என்று சொல்லிவிட்டார்.
 

rajini



ரஜினி, "அரசியலில் அதிசயம் நிகழும்'' எனச் சொல்லி இந்த வார பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். சினிமா உலகிற்கு கமல் வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி, "கமல் 60'’என்ற நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நவம்பர் 17 அன்று நடந்தது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அரங்கத்தில்தான் முதல்வர் எடப்பாடிக்கு எதிரான அஸ்திரத்தை வீசியிருக்கிறார் ரஜினி.
 

dmdk



விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதுமே, "கட்சி ஆரம்பிக்கப் போறேன் என இப்போது வரை சொல்லிவருகிறார். வீட்டின் காம்பவுண்டுக்குள் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆக முடியாது'' என ரஜினியை குறிவைத்து தாக்கினார் எடப்பாடி. அடுத்ததாக கோயம்புத்தூரில் மீடியாக்களிடம் பேசிய போது, "ரஜினி என்ன அரசியல்கட்சித் தலைவரா, அவர் ஒரு நடிகர்தானே. வெற்றிடத்தைப் பற்றி அவர் ஏன் பேசிக்கிட்டிருக்காரு'' எனப் பேசிய எடப்பாடி, சொந்த ஊரான சேலத்தில் பேசியபோது, ரஜினி,—கமல் இருவரையும் சகட்டுமேனிக்கு போட்டுத் தாக்கினார்.

இதன் பின்தான், "ரஜினி சொன்ன வெற்றிடம் தமிழகத்தில் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது'' என ஒரு தினுசாக பேசினார் கமல். தம்மைப் பற்றி ஒருவர் கமெண்ட் அடித்தால், பதில் கமெண்ட் அடிப்பது ரஜினிக்கு பழக்கமில்லாத விஷயம். ஆனால் ‘"கமல்—60'’விழாவிலோ, எடப்பாடிக்கு பாலிஷாக பதில் சொல்லும் வகையில்... "முதல்வராவோம் என இரண்டு வருடங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்துவிட்டது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் அரசியலில் அதிசயம் நடக்கும்'' என எடப்பாடிக்கு பஞ்ச் வைத்து, தனது அரசியல் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார் ரஜினி.

அதேபோல் கமலுக்கும் தனக்கும் கொள்கை, சித்தாந்தங்களில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் நட்பில் மாறுபாடு இல்லாமல் உறுதியாக இருக்கிறோம் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். "நானும் ரஜினியும் இணைந்து செயல்படுவதில் எங்களுக்குள் ஈகோ இல்லை' என்பதை அதே விழாவில் பேசிய விழா நாயகனான கமலும் எல்லோருக்கும் புரியும்படி பேசியுள்ளார். ஏதோ ஒரு தெளிவான திட்டத்துடன் ரஜினியும் கமலும் பேசினாலும் இருவரின் ரசிகர்கள் (கமல் கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் போட்டியிட்டுவிட்டதால் தொண்டர்களாகிவிட்டார்கள்) என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய, முதலில் மக்கள் நீதி மய்யத்தின் மண்டலப் பொறுப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டோம்.


"அப்போதும் சரி, இப்போதும் சரி... அவர்கள் இருவரும் எப்போதும் நெருக்கமாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ரசிகர்களாகிய நாங்கள்தான் அடித்துக் கொண்டிருந்தோம். அது இப்போது மாறும்போல் தெரிகிறது. என்ன ஒண்ணு எங்க தலைவர் கட்சி ஆரம்பிச்சு ஒன்றரை வருஷமாச்சு, எம்.பி. தேர்தலிலும் போட்டியிட்டு 4% ஓட்டும் வாங்கியாச்சு. அதிலும் கோவை தொகுதியில் எங்க கட்சி வேட்பாளர் மூன்றாவது இடத்துக்கு வந்து ஆச்சர்யப்படுத்தினார்.

மண்டலப் பொறுப்பாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள், கொள்கை பரப்புச் செயலாளர், தேர்தல் பணிக்குழு என பொறுப்பாளர்களை நியமித்து, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முனைப்புடன் இருக்கிறார் எங்கள் தலைவர். ஆனால் ரஜினியோ, "சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சிறுத்தை சிவா படத்தைத் தொடர்ந்தும் படங்களில் நடிப்பேன். தேர்தல் நேரத்தில் கட்சி ஆரம்பிப்பேன்' என்கிறார். திடீர்னு கட்சி ஆரம்பிச்சு, ரெண்டு பேரும் எப்படி இணைந்து செயல்படப் போறாங்கன்னு தெரியல'' என்கிறார்.


தென் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசும்போது, “மாநகரங்கள், நகரங்களில்தான் கமலின் கட்சிக்கு கட்டமைப்பு இருக்கிறது. கிராமங்களில் எங்களின் மக்கள் மன்றத்திற்கு 75% உறுப்பினர்களை சேர்த்துவிட் டோம். எங்கள் தலைவர் அரசியலுக்கு வந்து வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருப்பதால், கமலுடன் கைகோர்ப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. அதேநேரம் தென் மாவட்ட மக்கள் மன்றத்தில் இப்போதே ஒரு சமுதாயத்தினரின் டாமினேஷன் அதிகரித்து வருவதையும் எங்கள் தலைவர் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்றார்.

இதற்கிடையே விஜயகாந்த் தரப்பிலிருந்து சமீபத்தில் கமலை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். தே.மு.தி.க.வும் மக்கள் நீதிமய்யமும் இணைந்து செயல்படலாம், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்கலாம் எனவும் பேச்சுவார்த்தை ஓடியிருக்கிறது. ஆனால் கமலோ, "அது சாத்தியமில்லை' எனக் கூறிவிட்டாராம். இதுகுறித்தும் ம.நீ.ம.வின் மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "முதல்வர் வேட்பாளராக ரஜினியை ஏற்றுக் கொள்வதில் எங்கள் தலைவருக்கு தயக்கமில்லை. ஆனால் தே.மு. தி.க.வின் கிச்சன் காபினெட்டின் பொலிடிக்கல் பாலிஸியும் சில எதிர்பார்ப்புகளும் அவருக்கு செட்டாகவில்லை'' என்றார்.

ரஜினியும் கமலும் ஒரே டிராக்கில் போய்க் கொண்டிருக்கும்போது, விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அதே கமல் விழாவில் பேசியபோது, "ரஜினியும் கமலும் இணைந்தால் திரையுலகமே பின்னால் நிற்கும். தமிழகத்தை ஆண்டவர்கள், இவர்களுக்கு வழிவிட வேண்டும். இவர்கள் இருவரும் ஆண்டது போதும் என்ற திருப்தியுடன் தம்பிமார்களுக்கு வழிவிட வேண்டும்'' என மேடையிலேயே விஜய் என்ட்ரி பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். "எஸ்.ஏ.சி. சொன்ன தம்பி, விஜய்யைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?' என்கிறார்கள் திரையுலகினர்.

"ரஜினியின் அரசியல் என்ட்ரியை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உட்பட பெரும்பாலான கட்சிகள் உற்று நோக்குகின்றன. அதில் காலடி வைப்பதில் உள்ள லாப-நட்ட கணக்குகளை நீண்டகாலமாகவே யோசித்து வருகிறார் ரஜினி. வெற்றிக்குச் சாதகமான தேர்தல் களம்தான் அவரது எதிர்பார்ப்பு. அதற்கான சூழல் அமையும்போது, "அதிசயம்' நடக்கும்'' என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமான வட்டத்தினர்.