Skip to main content

பெருங்கற்கால கல்வட்ட எச்சங்கள் கண்டுபிடிப்பு!

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

Discover the stone remains of the Paleolithic era

 

காளையார்கோவில் நகர்ப் பகுதியில் பெருங்கற்கால கல்வட்ட எச்சங்களை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

 

சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, செயலர் இரா. நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகியோர் காளையார் கோவில் பாண்டியன் கோட்டைப்பகுதி மற்றும் காளையார் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்நிலையில் காளையார் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விளையாட்டுத் திடலில் 3000 ஆண்டுகள் பழமையான கல்வட்ட எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது; “கானப்பேர், கானப்பேரெயில்,திருக்கானப்பேர், சோமநாத மங்கலம் என வழங்கப்படும் காளையார் கோவில், சங்ககாலம் முதல் இயங்கிவரும் ஊராகும் இதற்குச் சான்றாக பாண்டியன் கோட்டை திகழ்கிறது.

 

Discover the stone remains of the Paleolithic era

 

பாண்டியன் கோட்டை

காளையார் கோவிலில் நகர்ப்பகுதியின் மையப் பகுதியில் வாள் மேல் நடந்த அம்மன் கோவிலுக்கு வடக்குப் பகுதியில் 33 ஏக்கர் பரப்பளவில் வட்ட வடிவில் அகழி சூழ நிராவிக்குளத்துடன் பாண்டியன் கோட்டை தொல்லியல் மேடாகவும் காடாகவும்  காட்சி தருகிறது. கானப்பேர் கோட்டை பற்றியும் அதன் அகழி பற்றியும் இப்பகுதியை ஆண்ட வேங்கை மார்பனை பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வெற்றி கொண்ட செய்தி பற்றியும் புறநானூற்றின் 21 பாடல் எடுத்துரைக்கிறது.மேலும் இதற்குச் சான்றாக பானை ஓடுகள் விரவிக் கிடப்பதோடு மோசிதபன் என எழுதப்பெற்ற தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடு, பானை ஓட்டுக் கீறல்கள்,வட்டச் சில்லுகள்,சங்க கால ஓட்டு எச்சம், சங்க கால செங்கல் எச்சங்கள் முதலியன கிடைக்கப் பெற்றுள்ளன.

 

சங்க காலத்திற்கும் முந்தைய ஊர்

பொதுவாக சங்க காலத்தை  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். ஆனால் அதற்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது பெருங்கற்காலம் எனலாம். நகர்ப்பகுதியிலே இக்கல்வட்டங்கள் காணப்படுவதால் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே இப்பகுதி மனிதர்களின் வாழ்விடப்பகுதியாக இருந்ததை அறிய முடிகிறது.

 

பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள்

இறந்த மனிதனுக்கு மீண்டும் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையிலோ நல்லடக்கம் செய்யவோ பெருங்கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்களை அமைத்த காலங்களை பெருங்கற்காலம் என்கிறோம்.இவ்வாறான கல்வட்டங்கள் பெருங்கற்கள் வட்ட வடிவமாக அடுக்கி காணப்படுகின்றன. 

 

காளையார் கோவிலில் கல்வட்டம்

காளையார்கோவில் தென்றல் நகரை அடுத்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் முழுதும் தரையில் புதைந்த நிலையில் அடுத்தடுத்து  கல்வட்டங்கள் எச்சங்களாக காணக் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு இப்பகுதி பெருங்கற்கால ஈமக்காடாக இருந்ததை அறிய முடிகிறது. மேலும் மேற்பரப்பிலே பெருங்கற்கள் இப்பகுதியில் சாலையோரங்களில் கிடப்பதும் இதற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன‌. இந்தப் பகுதியில் மற்ற பணிகளின் போது பானை ஓடுகளும் எலும்புகளும் தான் சிறுவனாக இருந்த போது கண்டெடுக்கப்பட்டதாக இப்பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் தெரிவித்தார். இப்பகுதியில் நல்லேந்தல், அ. வேளாங்குளம் போன்ற இடங்களில் சிதைவுறாத கல்வட்டங்கள் பெருமளவில் காணக் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பாண்டியன் கோட்டையை அகழாய்வு செய்ய சிவகங்கை தொல்நடைக் குழு மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து தொல்லியல் துறை  அவ்விடத்தில் ஆய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என்று கூறிய நிலையில் காளையார் கோவில் நகர்ப்பகுதியில் கல்வட்ட எச்சங்கள் காணக் கிடைப்பது மேலும் ஒரு தரவாக பார்க்கப்படும்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்