Skip to main content

சி.எஸ்.கே இஸ் "பேக்"

Published on 06/04/2018 | Edited on 07/04/2018

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வருடம் கழித்து மறுபடியும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் களம் இறங்கக் காத்துக்கொண்டு இருக்கிறது, சென்னை அணி எப்படி விளையாட ஆர்வம் காட்டிக்கொண்டு இருக்கிறதோ, அதேபோல சி.எஸ்.கே. ரசிகர்களும் மைதானத்திலும், வீட்டிலும் விசிலடித்துக் கொண்டாட காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாளைக்கு ஐபிஎல் போட்டி ஆரம்பமாகுது, வீட்டில் இனிமேல் சீரியலுக்கும், கிரிக்கெட்டுக்கும் சண்டை ஆரம்பம் ஆகிவிடும். இரண்டு மாதம் மாலை, இரவு என ஒரு நாளைக்கு இரண்டு வேளையும் கிரிக்கெட் மட்டுமே, ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். சரி, சென்னை நாளைக்கு முதல் ஆட்டம் விளையாட இருக்கு, அதுவும் நம்ம அணியின் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் கூட. அதனால தொடக்கமே அருமையா இருக்கும்னு ஒரு நம்பிக்கையில் எட்டு கோடி தமிழகமும், இந்தியாவில் மூளை முடுக்கெங்கும் உள்ள சிஎஸ்கே விசிறிகளும் மெர்சலா காத்துக்கிட்டு இருக்காங்க. மும்பை அணியும் குறைவானது இல்ல, சி.எஸ்.கே.  கடைசியா ஆடின பைனலில்கூட மும்பைகிட்ட தான் தோத்துச்சு. அதுக்குலாம் சேத்துவெச்சு சிஎஸ்கே அணி கொடுக்கும், கொடுக்கணும்னு நம்புவோம். தலைவர் ஸ்டைலில் சொல்லனும்னா, திருப்பி கொடுக்கணும்ல...  
 

csk in out bus


பிராக்டிஸ் மேட்ச்சுக்கே சேப்பாக்கம் மைதானம் ரசிகர்களால் நிறைந்திருந்தது. நெட்ஸில் தோனி அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் பார்வையாளர்களாக இருக்கும் ரசிகர்களின் கரகோஷம், மெரினா கடற்கரையிலிருப்பவர்களுக்கும் கேட்கும் அளவுக்கு இருந்தது. இந்த சிஎஸ்கே அணிக்குள்ளவே இருக்கும் பெரிய பிளேயர்களான தல, குட்டி தல, பாப் டு பிளேஸிஸ் மற்றும் ஜட்டு போன்றவர்களை தவிர்த்துவிட்டு. மற்ற வீரர்களை வைத்து இரண்டு அணிகளாக பிரித்து வைத்து ஆடிய ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் பந்தை போட, அம்பதி ராயுடு பேட்டை வைத்து வெளு வெளு என்று வெளுத்துவிட்டார். இதில் என்ன ஒரு வேடிக்கைனு பார்த்தா இவங்க இரண்டு பேரும் மும்பைக்காக கடந்த சீசன் வரைக்கும் விளையாடினவங்க. இந்த வருடத்திலிருந்து சிஎஸ்கேவில் சேர்ந்துட்டாங்க. இனி அவர்கள் இருவரும் நம்மில் ஒருவர் என்ற வசனமெல்லாம் நாம் சொல்ல வேண்டாம், ஹர்பஜனின் டிவிட்டர் பக்கமே சொல்லும். நம்மூரில் உள்ளவர்கள் இவ்வளவு பொறுப்பாக தமிழ் டைப் செய்யும் ஒரு ஆண்மகனை பார்த்திருக்க மாட்டார்கள். டிவிட்டரில் ஆளப்போறான் தமிழன் வரி வரைக்கும் அத்தனையும் போட்டுட்டாரு.   
 

csk dance


காலா பட வசனத்தை வேற தலைய பேசவச்சாங்க , அத நம்ம பசங்க டிரெண்டாக்கி, வைரலாக்கி அழகு பாக்குறாங்க. பீச் ரோட்டுல, ஓபன் பஸ்ஸில் அணி வீரர்கள் எல்லாம் பிராக்டிஸ்க்கு போக, அதை ரோட்டில் போகும் அனைவரும் பார்த்து மெர்சலாகி, அவரவர் மொபைலில் வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டனர். அணியின் குத்து டான்சர் பிராவோ (ஒரு படத்தில் டான்ஸ்லாம் கூட ஆடியிருக்கார், பாடியிருக்கார்.) அவர் இங்கும் வந்தும் அதைத்தான் செய்கிறார். அவர் மேல ஒரு நம்பிக்கை இருக்கு, அவர் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஒவ்வொரு டான்ஸ் இருக்கும்னு. அதை பார்க்கும் ரசிகரும் சிலுர்த்து சில்லறைய விட்டெரிவாங்க. சிஎஸ்கே அணியின் இன்னொரு தமிழ் புலவரா மாற இருக்காரு சவுத் ஆப்ரிக்க சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். ஐபிஎல் ஏலம் முடிஞ்சவுடனே ஒரு தமிழ் ஆசிரியர தனக்குனு வச்சிக்கிட்டு டிவிட்டரில் பதிவிட ஆரம்பிச்சிட்டாரு. இவரைத் தொடர்ந்துதான் ஹர்பஜனே பதிவுகள் போட்டாரு இருந்தாலும் ஹர்பஜன் கொஞ்சம் வேகம் போல, டப்புனு ரீச் ஆகிட்டாரு.
 

csk fun


சென்னை அணி மேட்ச் என்றாலே நல்ல பொழுதுபோக்கு படம் பார்த்தது போல இருக்கும். வெற்றியோ, தோல்வியோ கடைசிவரை நமக்கு ஒரு நம்பிக்கையை அளித்துக்கொண்டே இருக்கும், இந்திய கிரிக்கெட் அணியை போன்றே.  இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன் தோனி தலைமையில்தானே சென்னையும் இருக்கிறது. எட்டு கோடி மக்களின் மனதில் ஆழ பதிந்திருக்கும் ஒரு அணியாக இருக்கிறது. அதுவும் இந்த வருடத்தின் முதல் மேட்ச் மும்பையுடன் நடக்க இருப்பதை நினைத்தாலே ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், பயமாகவும் இருக்கிறது. இதுவரை சென்னை அணியை பற்றிய வல்லுனர்களின் பார்வையில் வழக்கமான சுழற்பந்து வீச்சாளர்களையும், அதிரடி பேட்ஸ்மேன்களையும் சென்னை அணியின் பலம் என்று தெரிவித்திருக்கின்றனர். யாரென்றே தெரியாத வீரர்களையும் வேர்ல்ட் ஃபேமஸ் ஆக்குவதுதான் சி.எஸ்.கே. ஸ்டைல், அது இதிலும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எது என்னவோ சென்னை அணி வந்துவிட்டது. இரண்டு வருடத்துக்கு முன் எப்படி போனதோ அதே உணர்வுடன் வந்துவிட்டது...