Skip to main content

'சுபஸ்ரீ விவகாரம்' அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் - குற்றவியல் ஆய்வாளர் தடாலடி!

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

கடந்த வாரம் சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் பலியானார். இதுதொடர்பான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பல நாட்கள் ஆகியும் இந்த வழக்கு சம்பந்தமாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் ஆய்வாளர் ராஜூவ் ஸ்டீபனிடம் நாம் பேசியபோது இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய விஷயங்களை நம்மிடம் பகிர்ந்தார். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

cn



பேனர் விழுந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக கடந்த வாரம் பலியானார். இந்த விவகாரத்தில் நடிகர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்த இறப்புக்கு பேனர் மட்டுமே காரணம் என்று நினைக்கிறீர்களா?

முதலில் சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்து ஏற்பட மிகமுக்கிய காரணம் வாகன விதிகளை யாரும் முறையாக பின்பற்றவில்லை என்பதுதான். திருமணத்துக்கு எதற்காக நடுரோட்டில் பேனர் வைக்க வேண்டும். நடுரோட்டில் வைத்தால் தான் திருமணம் நடக்குமா? சாலையில் பேனர் வைக்க கூடாது என்று தடை இருந்தாலும் அதை இந்த மாதிரியான நபர்கள் மதிப்பதில்லை. அதனை அதிகாரிகளும் முறையாக பார்ப்பதில்லை. இவர்களின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு முக்கிய காரணம். சாலை விதிகள் என்ற ஒரு அம்சத்தையே யாரும் முறையாக பின்பற்றவில்லை. போதுமான ஒரு விழிப்புணர்வை மக்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்தவில்லை. 40 கிலோ மீட்டர் வேகத்தில் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது சாலையில் வலது புறம் செல்லாமல் இடதுபுறம் செல்ல வேண்டும் என்பதை அரசாங்கம்தான் அனைவரும் புரியும்படி சொல்ல வேண்டும்.


விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும். தலைக்கவசம் அணிந்துச்சென்றால் மட்டும் இந்த மாதிரியான விபத்துக்களை தடுக்க முடியுமா? தலைக் கவசம் அணிந்து லாரி மோதினால் நாம் என்ன ஆவோம். வாகன விதிகளும், அதனை முறையாக பின்பற்றுவதுமே இத்தகைய பாதிப்புகளை தடுக்க முடியும். அதைவிட்டு விட்டு தேவையில்லாத விவகாரங்களை பற்றி பேசி எந்த பயனுமில்லை. இந்த சம்பவம் என்பது அரசுக்கு தலைகுனிவான ஒன்று. அவர்கள் வெட்கப்பட வேண்டும். இழப்பீடு கொடுப்பதால் அவரின் உயிர் திரும்பி வந்து விடுமா? இந்த ஏமாற்று வேலைகளை விட்டுவிட்டு முறையான விதிமுறைகளை பின்பற்றினால்தான் நம்மால் இந்த விபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும்.