Skip to main content

தமிழகத்தின் கடைசி ஏழை அமைச்சர் இவர்தான்...?

Published on 18/06/2018 | Edited on 18/06/2018
kakkan

 

 

 


கக்கன் - பல ஊர்களில் இவரது பெயரில் பல இடங்கள் இருக்கும். அந்த இடங்களை அறிந்த அளவுக்கு நாம் இவரை அறியவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய உண்மையே. ஒரு சுதந்திர போராட்ட வீரராக, காங்கிரஸ் கமிட்டி தலைவராக, அமைச்சராக இப்படி எந்த பதவியை வகித்தபோதும் நேர்மை என்ற ஒன்றை மட்டும் அவர் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவில்லை. எளிமையாக, நேர்மையாக இருப்பது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது, இறக்கும் பொழுது ஒரு பையும், சில வேஷ்டி சட்டைகளும் மட்டுமே வைத்திருந்தது என்பதெல்லாம் நமக்கு வாட்ஸ்-அப்  செய்திகளில் படித்து அலுத்துப்போன விஷயமாகிவிட்டாலும்  இன்றைய அரசியல் தலைவர்களிடம் சற்றே ஒப்பிட்டுப் பார்த்தால் தான் நமக்கு அவரின் அருமை தெரியும்.
 

 

 

கல்வி அவரை பெரிதாக ஈர்க்காத நிலையில், காந்தியும், காங்கிரஸும் அவரை ஈர்த்தனர். ஆலய நுழைவு போராட்டம், வெள்ளையனே வெளியேறு போன்ற பல போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவர். "விவசாய துறை அமைச்சராக" இருந்து மணிமுத்தாறு, அமராவதி போன்ற நீர்த்தேக்கத் திட்டங்கள், மேட்டூர் அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டது, வைகை, பாலாறு திட்டங்கள், பூண்டி நீர்ப்பாசன ஆய்வு மையம் அமைத்தது, என இன்றுவரை பயன்படும் பல திட்டங்களில் முக்கிய பங்காற்றியவர்.  
 

 

 

அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும், அவர் பேருந்தில் பயணம் செய்தார் என்பது போன்ற  செய்திகள் செய்தித்தாள்களில் வந்துகொண்டேதான் இருந்தது. தனது இறுதி நாட்களை அரசு மருத்துவமனையிலேயே போக்கினார். தன் நேர்மையின் மூலம் எல்லாரிடமும் கட்சிகள் தாண்டிய அன்பையும், மதிப்பையும், பெற்றிருந்தார். அரசுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த அந்த அரிதான மனிதர் 1981ல் உயிரிழந்தார். தமிழ்நாட்டின், கிட்டத்தட்ட  கடைசி ஏழை அமைச்சர், கக்கனது பிறந்த நாள் இன்று.