ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் தூத்துக்குடி நகரம் போர்க்களம் ஆனது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
பரபரப்பான அந்த நேரத்தில் சின்னத்திரை நடிகை நிலானி நிலா, படப்பிடிப்பின் நடுவே காக்கி உடையில் ஒரு வீடியோவை பதிவு செய்து வெளியிட்டிருந்தார்.
அதில் அவர்,
''இந்த சீருடையை அணிந்திருப்பதற்கு மிகவும் கேவலமாக இருக்கிறது. அப்பாவி மக்களை சாகடித்துள்ளார்கள். சத்தியமாக நான் ஷீட்டிங்கில் இருந்தேன். என்னால தவிர்க்க முடியவில்லை. இல்லையென்றால் நான் தூத்துக்குடியில் இருந்திருப்பேன்.
எந்த போராட்டம் நடத்தினாலும் போலீசாருக்கு முதலில் சுடுவதற்கான அதிகாரம் கிடையாது. முதலில் தண்ணீரால் துரத்தி அடித்திருக்க வேண்டும். பின்னர் கண்ணீர் புகைக்குண்டு போட்டியிருக்க வேண்டும். அதையும் மீறி நடந்தால் ரப்பர் புல்லட்டால் காலுக்கு கீழே சுட்டியிருக்க வேண்டும். இதில் எதையாவது பின்பற்றியிருக்கிறார்களா.
எடுத்த எடுப்பிலேயே நெஞ்சில் குறி வைத்து சுடுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது. இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. துப்பாக்கிச் சூட்டில் இறந்த 8 பேர், இந்த போராட்டத்தை ஆரம்பித்து வழி நடத்தி வந்தவர்கள். ஆகையால் இது திட்டமிட்ட கொலை. போராட்டத்தின்போது தற்செயலாக நடந்தது இல்லை.
இன்று அவர்கள், நாளை நாம்தான். இதை யாருமே கேட்கவில்லையென்றால் நாம் நல்லாயிருப்போமா என்றால் கண்டிப்பாக கிடையாது. நமது வளங்களை சுரண்டிவிட்டார்கள், நீரை சுரண்டிவிட்டார்கள், நம் மண்வளம் உள்பட எதுவும் நம்மிடம் இல்லை.
நம்மை முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறார்கள். போராளிகளாக, தீவிரவாதிகளாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள், காரில் சொகுசாக போகிறவர்களெல்லாம் கீழே இறங்கி வாங்க. உங்களோட வாழ்க்கைக்கும் சேர்ந்துதான் நாங்களெல்லாம் போராடிக்கொண்டிருக்கிறோம். இலங்கையில் என்ன நடந்ததோ அது தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. இன்னொரு பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும் இழக்க வேண்டாம்'' என கூறியுள்ளார்.
இந்த பரபரப்பான வீடியோ வாட்ஸ் அப்களில் பரவியது. சென்னை வடபழனி காவல்நிலையத்தில் அவர் மீது புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம், குன்னூரில் படப்பிடிப்பில் இருந்த நிலானி நிலாவை சென்னை வடபழனி போலீசார் கைது செய்தனர்.