Skip to main content

இந்தியாவின் 8வது தேசியக் கட்சியாக உருவெடுத்த ஆம் ஆத்மி; 2024ல் பிரதமரைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுமா?

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

hjk

 

'ஆம் ஆத்மி' 10 வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு பேரையே இந்திய அரசியல் களம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் இன்றைக்கு 150க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை இந்தியா முழுவதும் பெற்று தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சட்டமன்ற உறுப்பினர்களையும் தாண்டி டெல்லி, பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி., பிரதான தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளை அந்த இரண்டு மாநிலங்களிலும் கூப்பில் அமர வைத்துள்ளது. 

 

இது ஒருபுறம் இருக்க இன்று வெளியான குஜராத் தேர்தல் முடிவுகளிலும் ஆம் ஆத்மியின் அதிரடி தொடர்கிறது. குறிப்பாக 5 தொகுதிகளில் அக்கட்சி முன்னணியிலிருந்து வருகிறது. இதன் மூலம் குஜராத்தில் தனது கால் தடத்தைப் பதித்துள்ளது. 77 தொகுதிகளில் கடந்த முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை அங்கு 17தொகுதிகளில் மட்டுமே முன்னணியிலிருந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி இந்த படுதோல்வி அடையப் பிரதான காரணமாகக் குஜராத்தில் ஆம் ஆத்மி இருந்துள்ளதாகத் தேர்தல் முடிவுக்கு பிறகான நிலவரம் வெளிப்படையாகக் காட்டுகிறது.

 

பல தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி பெற்ற வாக்குகளைக் கணக்கிட்டால் பாஜகவின் வாக்குகளை விட அதிகமாக இருக்கிறது. தேர்தல் கணக்குகள் இதே முறையில் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் ஆம் ஆத்மி பிரித்த வாக்குகளே பாஜக இந்த இமாலய வெற்றிக்கும், காங்கிரஸின் இந்த படுதோல்விக்கும் காரணமாக இருந்துள்ளது என்பது மட்டும் நிஜம். அந்த வகையில் குஜராத்தில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற்ற ஆம் ஆத்மி இமாச்சல் பிரதேசத்தில் எந்தத் தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இது ஆரம்பம்தான், அடுத்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,கர்நாடகா  உள்ளிட்ட 10 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் மேலும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறும் வாய்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்துள்ளது. 

 


அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சி குஜராத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தேசியக் கட்சியாக மாறியுள்ளது. ஒரு மாநிலக் கட்சி தேசிய கட்சியாக மாறுவதற்கு மொத்த நாடாளுமன்ற இடங்களில் 2 சதவீத இடங்களை மூன்று வெவ்வேறு மாநிலங்களில் பெற்றிருக்க வேண்டும், அதாவது குறைந்தது 11 மக்களவை உறுப்பினர்களை மூன்று மாநிலங்களிலும் சேர்த்துப் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது வாய்ப்பாக 4 மாநில சட்டப்பேரவையில் அக்கட்சி 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும், கூடவே 4 மக்களவை உறுப்பினர்களையும் பெற்றிருக்க வேண்டும். 

 

மூன்றாவது வாய்ப்பாக குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் ஒரு கட்சி சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளையும், 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றால் அந்த கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறும். ஏற்கனவே டெல்லி, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் மாநிலக் கட்சியாக ஆம் ஆத்மி உள்ள நிலையில் தற்போது நான்காவது மாநிலமாக குஜராத்திலும் 12 சதவீத வாக்குகளோடு 5 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சி இந்தியாவில் எட்டாவது தேசிய கட்சி என்ற பெருமையை தற்போது பெற்றிருக்கிறது.