தமிழகத்தில் பல்வேறு அரசியல் சூழல்கள் நடந்துவரும் நிலையில் திராவிடர் கழகத்தின் தலைவரும் பெரியார் கொள்கை உடையவருமான கி.வீரமணி அவர்கள் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல்கள் குறித்த கேள்விகளுக்கு நக்கீரனுக்கு கருத்து கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு பேசினார். அதை சில காங்கிரஸ் தலைவர்களும் சில பா.ஜ.க. தலைவர்களும் வரவேற்றுள்ளனர். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பிரணாப் முகர்ஜி பற்றி தெளிவான கருத்து வரவேண்டும் அவர் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு அழைப்பை ஏற்று போனது என்பது எங்களை பொறுத்தவரை எதிர்பார்க்க முடியாத ஒன்று அல்ல மற்றவர்கள் பெரிய அளவில் செய்யமாட்டார்கள் ஆனால் அவர் உள்ளே இந்துத்துவ மனப்பான்மை இருக்கிறது. அவர் குடியரசு தலைவராக இருந்தபோது மட்டுமல்ல அதற்கு முன்பு உள்துறை அமைச்சராக இருந்தபோதே அவருக்குள் இருந்திருக்கிறது என்பதை அண்மையில் ஒரு நூலில் எழுதியிருக்கிறார். அந்த நூலில் அவர் ''திடீரென்று ஒருநாள் அமைச்சரவை கூடுகிறது அப்போது தமிழகத்தில் சங்கராசாரியாரை அங்கு இருக்க கூடிய முதல்வர் உத்தரவில் தீபாவளி அன்று கைது செய்கிறார். எனக்கு ஆத்திரமாக வருகிறது இரத்தம் கொதித்தது'' என்று இதுதான் மதசார்பின்மையா? அவரை கைது செய்ததை போன்று மற்ற மததலைவர்களை செய்வார்களா?'' என்று அமைச்சரவை உள்ளேயே கேட்டுவிட்டார். அமைச்சரவையில் இதற்கு என்று சப்ஜட் இல்லை என அவரை சமாதானப்படுத்தினார்கள். உடனே அவரை பெயிலில் விட வேண்டும் அவர் என பெயில் கொண்டுவர உத்தரவு போட்டார். எந்த வகையில் இவர் பெயில் விடமுடியும்?. இவர் ஹோம் மினிஸ்டராக இருக்கலாம் ஹோம் மினிஸ்டராக இருந்தா காவல்துறையிடம் சொல்லலாமே தவிர வேற ஒன்றுமில்லை. ஜெயலலிதாவின் துணிச்சலான காரியங்கள் என்ற பட்டியலில் முதலில் இடம்பெற வேண்டியது சங்கராசாரியாரை கைது செய்ததுதான். அந்த சங்கராசாரியார் பிரச்சனையை அதிகம் எடுத்து சொன்னது ஒன்று நக்கீரன், மற்றொன்று விடுதலை பத்திரிகை. விடுதலையை விட பல கூடுதலான தகவல்களை நக்கீரன் சொன்னது.
இதே இன்னொரு மதம் சார்ந்த விழா பண்டிகை நடக்குபொழுது ஒருவரை கைது பண்ண முடியுமா? அப்படி என்று கேட்கும்போதே தெரிகிறது அவரது இந்துத்துவம். ''இதுதான் மதச்சார்பின்மையா'' அப்படி என்று கேட்டிருக்கிறார் இது புத்தகத்தில் அப்படியே இருக்கு ஆகவே அவரை பொறுத்தவரை அவருடைய மனம் இந்துத்துவ மனம்தான். எனவே அவர் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு சென்றார் ஆனால் அவர் அங்கு பேசும்போது பன்முகத்தன்மை, மலைப்பிரச்சங்கம் எல்லாம் பேசி இருக்கிறார். அதில் ஆர்.எஸ்.எஸ். இரண்டு வகையில் லாபம் அடைகிறான் ஒன்று மாறுபட்ட கருத்துகளை கூறுபவரை நாங்கள் இங்கே அழைத்து வந்திருக்கிறோம் என்று அதை பீடமாக்கி கொள்கிறார்கள், இரண்டாவது அவர் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பேசியது அன்றைக்கு ஒருநாள்தான் ஆனால் அன்று எடுக்கப்பட்ட படம் அழிக்க முடியாதது. ஆர் .எஸ்.எஸ் காரர்கள் சொல்லுவார்கள் காந்தி எங்களை ஆதரித்தார்,அம்பேத்கார் ஆதரித்தார், தற்போது பிரணாப் ஆதரித்தார் என அவர்கள் கூறிக்கொள்வார்கள். இதையேதான் பிரணாப்பின் மகளும் சொன்னார் அவர் பேசிய பேச்சு மறைந்துவிடும் ஆனால் அந்த புகைப்படம் மறைந்துவிடாது. இதில் வெற்றி யாருக்கென்றால் ஆர்.எஸ்.எஸ்க்குதான்.
''தமிழர் தலைவர்'' பெரியாருடைய வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றுள்ளது. அதை படித்து பாருங்கள் சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்து ஜயா வேகமாக நடத்தி கொண்டிருந்த காலம் அது. திடீரென்று ஒரு கடிதம் சிங்கேரி சங்கராசாரி மடத்திலிருந்து வருகிறது. சமஸ்கிருத வார்த்தைகளுடன் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் நீங்கள் அண்மையில் செய்யும் சேவையெல்லாம் நன்றாக உள்ளது என பெரியாரை பாராட்டி மடத்துக்கு வர வேண்டும் என்று அழைப்புவிடுக்கபட்டிருந்தது அந்த கடிதம் தமிழ் தலைவர் புத்தகத்தில் கூட இருக்கு. அந்த கடிதத்தை படித்த பெரியார் உடனே நண்பர்களை கூப்பிட்டு ஆலோசனை நடத்தினார் பிறகு பெரியார் அந்த மடத்திற்கு ஒரு கடிதம் எழுதுகிறார் அந்த கடிதத்தில் ''என் தொண்டுகளை பற்றி எல்லாம் பாராட்டியுள்ளீர்கள் நன்றி ஆனால் நான் வந்து சந்திப்பதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. அதனால் உங்க அழைப்பை ஏற்கமுடியாது'' என்று கூறியிருந்தார். அந்த முடிவு கொள்கைபூர்வமானது. கொள்கையில் என்றும் மாறாமல் இருக்க வேண்டும்.
பெரியார் சில சாதி சங்கங்களின் மாநாட்டிலும் கலந்துகொண்டு பேசியுள்ளாரே அதுபற்றி??
சாதியை ஒழிக்க வேண்டும் என சாதியை கண்டித்துதான் அங்கேபோய் கலந்துகொண்டார். அதுபோல மதுரை பரமக்குடியில் வெற்றிலைபாக்கு வியாபாரிகள் நடத்திய மாநாட்டுக்கு போனார் ஆனால் அங்கேபோய் வெற்றிலை போடுவதால்தான் எச்சில் துப்பி எல்லாம் குப்பையாக்கி வைத்துள்ளனர் எனவே இதை ஒழிக்க வேண்டும் என அவர்களது மேடையிலேயே கூறினார் அது அவருடைய இயல்பு. எல்லா இடத்திற்கும் போன அவர் சிங்கேரி மடத்திற்கு போகாதது ஏன் என்றால் அங்குபோவது பயனில்லை. ஏனென்றால் பலவகையில் அதை அவர்கள் லாவகமாக பயன்படுத்தி கொள்வார்கள் என்ற தொலைநோக்கு பார்வை அவரிடம் இருந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸை எந்த தேதியில் போய் அம்பேத்கர் பாராட்டினார் என்று சொல்லுங்கள் என்றால் அவர்களால் சொல்ல முடியாது. காந்தி கண்டித்த அமைப்பு எது? காந்தியை கொல்ல பயிற்சி கொடுத்த அமைப்பு எது? மூன்று முறை தடை விதிக்கப்பட்ட அமைப்பு எது? காமராஜர் டெல்லியில் இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த பொழுது பட்டப்பகலில் கொல்ல முயற்சி செய்த அமைப்பு எது? இந்தமாதிரி எல்லா கேள்விகளும் கேட்டால் சிக்கல் வரும் ஆனால் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்றால் ஓநாய் சைவம் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். ஓநாய்க்கு உபதேசம் செய்ய ஒருவர் போனார் ''நீங்க சைவமாகதான் இருக்கனும்'' என்று ஓநாய்கள் மத்தியில் சைவத்தைப்பற்றி நன்கு அருமையாக பேசிவிட்டேன் என்கிறார் அப்படித்தான் இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை பெரியார்வாதிகள், அம்பேத்கர்வாதிகள், அரசியல் பேசுபவர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுக்க வேண்டிய காலம் இது என சமீபத்தில் ஒரு சினமா கூட பேசியது அதை நீங்க எப்படி பார்க்கிறீர்கள்?
நிச்சயம் காலத்தின் கட்டாயம். இப்போதே ஒருங்கிணைந்த சூழல்தான் ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே மனப்பூர்வமாக மற்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றில்லை ஆனால் காலம் ஒன்று சேர்க்கும். மாவோ சொன்ன மாதிரி நான் என்ன ஆயுதத்தை எடுப்பது என்பதை நான் முடிவு செய்வதை விட என் எதிரிதான் முடிவு செய்கிறான். அதைப்போன்று மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று சும்மா விடுவதில்லை. காற்று வந்தால் மரங்கள் தானாகவே ஆட வேண்டிய அவசியம் வரும். எனவே இந்த காலகட்டத்தில் தலையாய தேவை நீங்க சொன்ன கருத்து. அதை திராவிடர் கழகம் ஒன்றிணைத்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே ஜனநாயக உரிமை பாதுகாப்பு பேரவை முறையில் கூட மாநில உரிமைகள், சமூக நீதி, இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்ககூடிய ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். அதில் மிகப்பெரிய அளவு வெற்றியும் பெற்றிருக்கிறோம் என்றும் நினைக்கிறோம். நாம் வெற்றிபெற்றுவிட்டோமா என்பதை விட இந்த உணர்வு பக்கத்தில் இருக்கக்கூடிய சந்திரபாபு நாயுடுக்கு போய் சேந்திருக்கிறது. கர்நாடகாவிற்கும் போய் சேர்ந்திருக்கிறது அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் பிரச்சனை அது வேறு ஆனால் சுயமரியாதை அங்கும் வளர்ந்துள்ளது.
ரஜினி ஆன்மீக அரசியல் என்ற கருத்தை முன்வைக்கிறார். தமிழகம் ஒரு முற்போக்கு பூமியாக பெரியார் போன்றவர்களால் இருந்துவருகின்ற நிலையில் அந்த ஆன்மீக அரசியலை கண்டு சிலர் பயப்படுகின்ற சூழல் இருக்கிறதா ?
ஆன்மீக அரசியல் என்ன என்பது அவருக்கே தெரியாதபோது எனக்கு எப்படி தெரியும்?. பெரியாரிடம் ஒருவர் கேட்டார் ''ஏன் கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள்'' என்று. அதற்கு பெரியார் அய்யா நான் கடவுள் இருக்கா இல்லையா என்று சொல்வதை விடுங்கள் முதலில் கடவுள் என்றால் என்னவென்று சொல்லுங்க என்று அவரிடம் கேட்டார். அதுபோல ஆன்மீகம் என்றால் என்ன என்பதை ரஜினி சொல்லட்டும். ஆத்மா என்பதே ஒரு போலி பித்தலாட்டம். ஒருவர் இறந்தவுடன் ஆத்மா போய்விடுகிறது உடனே உயிர் போய்விட்டது என்று சொல்கிறான். ஆனால் ஆத்மா கூடுவிட்டுக் கூடு பாய்கிறது என்கிறான். அப்ப கூடுவிட்டுக் கூடு பாய்ந்தால் ஆத்மா எங்கே போய்விடும். ஆத்மா என்பது ஆன்மா ஆனது அது அப்படியே ஆன்மீகம என்ற புதுவார்த்தையாக மாறியுள்ளது. ஏனென்றால் மதம்சார்ந்த அரசியல் என்று சொன்னால் சரியாக இருக்காது எனவே ஆன்மீகம் என்ற வார்த்தைபோர்வையால் மதம் என்ற சொல் மறைக்கப்பட்டுள்ளது. யானைக்கு மதம் பிடித்துவிட்டால் பாகனை கொல்லும். ஆட்சிக்கு மதம் பிடித்துவிட்டால் மக்கள் கொல்லப்படுவார்கள். அதுதான் மிக தெளிவாக வந்திருக்கு. எனவே மதம் என்ற உணர்வு வந்தவுடன் பயப்படுகிறார்கள் எனவே அதுக்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஆன்மீகம் என்ற வார்த்தை. ''இஃப்யூமிஸம்'' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் அதாவது அமலங்கத்தை மங்கலமாக சொல்வது அது மாதிரிதான் அந்த வார்த்தையும்.
ஆன்மீகம் என்றால் இந்த உலகத்துக்கு சம்பந்தபடாமல் பேசுவது ஆனால் அரசியல் என்பது இந்த உலகத்தை சம்பந்தப்படுத்தி பேசுவது. அரசியலை ஆன்மீகமாக நடத்துவது என்பதெல்லாம் பித்தலாட்டம். அவர் இமயமலைக்கு போகிறார் அங்கு 4 ஆயிரம் ஆண்டுகளாக இருக்ககூடிய பாபாவை பார்த்துவிட்டு வருகிறார் அவர் அவருடைய கண்ணுக்கு மட்டும்தான் தெரிகிறார் அதெல்லாம் அவருடைய உரிமை. ஆனால் அவர் அரசியலுக்கு வரும்போது அவருடைய கொள்கைகளை சொல்லவேண்டும். ஊழல் நடந்திருக்கிறது என்று சொன்னால் போதாது. ஊழலை கண்டுபிடிக்க வேண்டியது யார் இதுவரை எந்த ஊழலை கண்டுபிடித்து இருக்கிறார்கள்?. எதில் ஊழல் வந்திருக்கு என்பதை அவர் பட்டியல் போட வேண்டும்.. இப்போது வெற்றிடம் உள்ளது என்று சொல்கிறார். அறிவியல் ரீதியாக வெற்றிடம் என்ற ஒன்றே கிடையாது எனவே அறிவியல் ரீதியாக சிந்தனை இல்லாத அரசியல் ஆன்மீக அரசியல் என்பதற்கும் இதுதான் நல்ல உதராணம். எம்.எல்.ஏ ஆகாமல், எதிர்க்கட்சி ஆகாமல், போராடாமல் நேரடியாக அந்த பதவியை அடைவேன் என்பது எப்படி சாத்தியம்? சொல்லப்போனால் வெற்றிடம் என்பது அவரது சிந்தனையில்தான் இருக்கிறது.