Skip to main content

வீட்டிலுள்ளவர்களுக்குக் கரோனா இருந்தால்கூட வேலைக்கு வரவேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்கள்: கரோனா அகமான எழிலகம்!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

Ezhilagam

 

"கரோனாவால் சக பணியாளர்கள் இறந்தபிறகும் எங்களுக்கெல்லாம் டெஸ்ட்கூட எடுக்காமல் அலுவலகம் வரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’’என்று கரோனா அச்சத்தால் அலறித் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் சென்னை எழிலகத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள்.

 

தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவேண்டும் என்று உத்தரவிட்டது தமிழக அரசு. இதனால், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட ஆரம்பித்தது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்திலுள்ள எழிலகம் கட்டிடத்தில் வருவாய் நிர்வாக ஆணையரகம், நில நிர்வாகம், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம், மாநில திட்ட ஆணையம், பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, வணிக வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நல வாரியம் உள்ளிட்ட அரசுத்துறைகள் இயங்கிவருகின்றன.

 

இதில், வருவாய் நிர்வாக ஆணையரகத்தில் பணிபுரிந்த அலுலக உதவியாளர்கள் மற்றும் துணை ஆணையர்களுக்குக் கரோனா தொற்று பரவியதால் மருத்துவச் சிகிச்சையில் உள்ளார்கள். மேலும், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த உதவி ஆணையர் கடந்த 2020 ஜூன் -28 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அவரது, தாயாரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். அதேபோல், நில நிர்வாக ஆணையரகத்தில் ஒரு துணை ஆணையருக்கும் நில சீர்திருத்தத்துறையில் இரண்டு துணை ஆணையர்களுக்கும் கலால் துறையைச் சேர்ந்த கண்காணிப்பாளருக்கும் மற்றொரு உதவி ஆணையருக்கும் கரோனா தொற்றியிருப்பது உறுதியாகிவிட்டது.

 

இப்படி, எழிலகத்திலுள்ள பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் கரோனா தொற்றிக் கொண்டிருக்கிறது.

 

ஆனால், இந்தச் சூழலில்கூட யாருக்கும் கரோனா பரிசோதனையை அரசாங்கம் செய்யவில்லை. குறைந்தபட்சம் வளாகத்தைக்கூட சுத்தப்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். மேலும், "இந்தப் பேரிடர் சூழலில் 10:15 மணிக்கு வந்தால்கூட வருகைப் பதிவேட்டை க்ளோஸ் பண்ணி வைத்துவிடுகிறார்கள். வீட்டிலுள்ளவர்களுக்குக் கரோனா இருந்தால்கூட வேலைக்குவந்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்'' என்று குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.

 

http://onelink.to/nknapp

 

இதுகுறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டியை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, "கரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம். ஒருவருக்குக் கரோனா இருந்தாலும் அவருடன் தொடர்பிலிருந்த பணியாளரையும் பரிசோதித்து தனிமைப் படுத்திவிடுகிறோம். அவருக்கு, இல்லை (நெகட்டிவ்) என்று வந்தால்தான் அலுவலகம் வரச்சொல்கிறோம். கரோனா சூழலில் எல்லோருமே கஷ்டங்களுக்கிடையில்தான் பணிபுரிகிறார்கள். அதற்கேற்றாற் போல் அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று உறுதியளித்தார்.

 

உறுதியை நடைமுறைப்படுத்தினால்தான் எழிலக அரசுப் பணியாளர்கள் அச்சம் நீங்கி மக்கள் பணி செய்வார்கள்.

 

 

Next Story

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Jacto Geo struggle calls for cancellation of new pension scheme

வேலூர்  சத்துவாச்சாரியில்  உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த முறையைக் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையானது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக வந்து 500க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் வாகனங்களில் அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.