சமீபத்தில் ஐஏஎஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் அவர்கள் பொங்கலை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்முறையாக அதிரடி அரசியல் கருத்துக்களை பேசினார். அவரின் கருத்துக்கள் வருமாறு, " தமிழர்கள் உணர்ச்சி மிகுந்தவர்கள், நன்றியுணர்வு அதிகம் கொண்டவர்கள். அந்த வரிசையில் நாமும் அவர்களில் ஒருவர் என்பது நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. தமிழர்கள் நன்றியுணர்ச்சி கூடியவர்களாகவே எப்போதும் இருந்து வருகிறார்கள். யாரெல்லாம் இந்த மக்கள் பாதை அமைப்புக்கு வலுசேர்க்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியினையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமக்கெல்லாம் யார் உறவு என்று பார்த்தால் இவர்களை போன்ற கிராமத்து மக்கள்தான் நமக்கு உறவு. எங்களுக்கு உறவு பணக்காரர்கள் அல்ல, கார்ப்பரேட்டுகள் அல்ல, அவர்களை எல்லாம் என்னுடைய உறவாக வைத்திருந்தால் நான் ஏன் ஐஏஎஸ் பணியில் இருந்து விலகி இருக்க போகிறேன். எனவே என்னுடைய உறவுகள் எல்லாம் எம்தமிழ் நிலத்தின் ஏழை எளிய மக்கள். எங்களுக்கு உண்பதற்கு சோறுபோடும் மக்கள். நம் ஒவ்வொருவருக்கும் உணவு அளிப்பவர்கள் விவசாயிகள். நாம் நன்றியோடு இருக்க வேண்டியவர்கள் என்றால் நம்முடைய தாய் தகப்பனுக்கு அடுத்த படியாக நம்முடைய விவசாயிகளுக்கு இருக்க வேண்டும். அதை நாம் மறந்து செயல்பட்டால் நாம் வாழ்வதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
நாம் உயிர்வாழ காரணமாக இருக்க கூடிய அந்த விவசாயிகள் இன்றைக்கு மரணத்தின் பிடியில் இருந்து கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கும் டெல்லியில் நம்முடைய விவசாயிகள் போராடி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நம்முடைய மக்கள் பாதை அமைப்பு உறுதுணையாக இருக்கும் என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன். எனவே நாங்கள் தமிழர்களுக்காக களமாட போகிறோம் என்பது மட்டும் உண்மை. இந்த அவலங்களை எல்லாம் நாம் ஒருகாலும் கண்டுகொள்ளாமல் இருக்க போவதில்லை. எனவேதான் சொல்கிறேன் மக்கள் பாதை இளைஞர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தங்களை தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் நேர்மை உடையவர்களாக நெஞ்சுரம் உடையவர்களாக இருக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் தவறுகளை எல்லாம் தட்டிகேட்கும் இளைஞர்களாக நம்முடைய மக்கள் பாதை இளைஞர்கள் இருக்க போகிறார்கள். எனவே இந்த நல்ல நேரத்தில் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் நம்முடைய உரிமைகளை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது. உறுதியாக இருக்க வேண்டும். இன்றைக்கு நம்முடைய நாட்டில் வெறுப்பு அரசியல் வெற்றி பெறுகிறது என்று இங்கே பேசியவர்கள் தெரிவித்தார்கள். நமக்கு தற்போது தேவைப்படுவது வெறுப்பு அரசியல் அல்ல, நெருப்பு அரசியல் என்று அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
தமிழகத்தில் சூழ்ந்துள்ள வெறுப்பு அரசியலை தூக்கி எறிய நம்மைபோன்ற நெருப்பு அரசியல் செய்பவர்கள் வேண்டும். உளமாற அந்த நெருப்பு அரசியல் இளைஞர்களை நான் வாழ்த்துகிறேன். நம்முடை.ய அடையாளத்தின் மீது நமக்கு பெருமை இருக்ககூடும். எனக்கு கூட அந்த பெருமை உண்டு. இன்றைக்கு நான் விருப்ப ஓய்விலே வெளியே வந்திருக்கிறேன். கடந்த வரும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நான் பிரான்ஸ் தமிழ் சங்கம் நடத்தும் ஒரு விழாவில் பங்கேற்க அனுமதி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதினேன். ஏனென்றால் என்னை போன்ற அதிகாரிகள் வெளியே செல்ல வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். வழக்கமாக இந்த மாதிரி நேரத்தில் அரசு கால தாமதப்படுத்தும். அதை என்னுடைய கோரிக்கையின் போதும் செய்தார்கள். அவர்களுக்கு கடைசியாக ஒரு கடிதம் எழுதினேன்.
அதில், " இந்த ஐஏஎஸ் பதவி என்பது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவு பதவி, அதில் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்துவிடலாம் என்ற நோக்கத்தில்தான் சேர்ந்தேன். அதற்கு குறுக்கீடாக ஊழல் வந்து நின்ற போது, அதனை எதிர்த்து நெஞ்சுரத்தோடு நின்றேன். நான் ஊழலை எதிர்த்தது ஏன் தெரியுமா? அது ஏழை எளியவர்களுக்கு எதிரானது என்பதால்தான் அதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பதால் ஊழலை எதிர்க்கிறேன். எனவேதான் ஊழலை தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். அதை போன்று என் தாய் மொழி மீது தீராக்காதல் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுவிட முடியாது. இந்த பதவி பெரிதா அல்லது மொழி பெரிதா என்றால் மொழி தான் பெரிது என்று கூறி, உங்கள் அனுமதியே வேண்டாம் என்று கூறி அந்த கடிதத்தை அவர்களுக்கு அனுப்பினேன்" என்றார்.