மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவற்றில் உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணி நடத்துவதாக அறிவித்தனர். அதனபடி நேற்று (26.01.2021) ட்ராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி, தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நம்மிடம் பேசியதாவது; “மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றிய சட்டத்தை ‘தினமணி’ பத்திரிகை அதன் தலையங்கத்தில் நேற்றைய தினம் ‘அப்படி என்ன அவசரம்’ எனக் கண்டித்திருக்கிறது. அதேபோல், குடியரசுத் தலைவர், குடியரசு தின உரையில், “விவசாயிகளுக்கு நாடு நன்றி கடன்பட்டிருக்கிறது” என்று குறிப்பிடுகிறார். 61 நாட்களாகப் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளிடத்தில், 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது.
அதில் ஒருமுறை பேச்சுவார்த்தையில், ‘மின்சார திருத்த மசோதாவை நாங்கள் தற்போது சட்டமாக்க மாட்டோம்’ என மத்திய அரசாங்கம் தெரிவித்தது. தற்போது ஆக்கமாட்டோம் என்று சொன்னால், அந்தச் சட்டம் தவறு என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறபோது, அதனை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் திரும்பப் பெறுகிறோம் என சொல்வதில் என்ன தயக்கம்? அதேபோல் விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நாங்கள் ஒன்றரையாண்டு அமல்படுத்த மாட்டோம் என்று சொல்கிறது. சட்டமாக்கிவிட்ட பிறகு அதனை ஒன்றரையாண்டு அமலாக்க மாட்டோம் என்று சொல்லும் அரசாங்கம் அதனை ரத்து செய்வேன் என சொல்வதில் என்ன தயக்கம்?
தாங்கள் ஒரு தவறு செய்துவிட்டோம் என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் அரசு, இதனை நிறைவேற்றியே தீருவோம், வாபஸ் வாங்க மாட்டோம் எனத் திரும்ப திரும்ப விவசாயிகளுக்கு ஆத்திரம் மூட்டக்கூடிய முறையில் விவசாயிகளை ஏமாற்றக்கூடிய முறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒரு நயவஞ்சகமான பேச்சுவார்த்தை. உண்மையில் உணர்வுப்பூரமாகப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டும் எனும் நோக்கத்தோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை அல்ல. நரி தந்திரம் எனச் சொல்வார்களே அத்தகைய தந்திரத்தைத்தான் மத்திய அரசாங்கம் மேற்கொண்டது. நேற்றைய குடியரசு தினத்தில் காவல்துறையை ஏவி வன்முறையை உருவாக்கி, தடியடி, கண்ணீர் புகைக்கூண்டு வீசி ஒரு பயங்கரமான கலவரத்தை செய்துவிட்டு, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் தூண்டுகின்றன என சொல்வது, தாங்கள் செய்த தவறை மூடி மறைத்துக்கொள்ள செய்யும் செயல்.
இந்த நாட்டினுடைய விவசாயிகள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருக்கும் என்றால், இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதுதான் மிகச் சரியானதாக இருக்கும். ட்ராக்டர் பேரணிக்கு அனுமதி கேட்டால் அதற்கு அனுமதி மறுத்ததுமட்டுமின்றி; ஒவ்வொரு ட்ராக்டர் உரிமையாளர் வீடுகளுக்கும் சென்று, “உங்கள் ட்ராக்டர் வரக்கூடாது. வந்தால் நாங்கள் பறிமுதல் செய்வோம்” என காவல்துறையைவிட்டு அச்சுறுத்தியதும், தமிழ்நாட்டில் பல இடங்களிலேயே தடியடி நடத்தியதும் மிகமிக மோசமான செயல்" என்றார்.