Skip to main content

'தினம் ஒரு மாவட்டத்தில், இன்று அரியலூர்'... எந்த கட்சி பலம்... யாருக்கு பலவீனம்! - ஒரு மினி சர்வே!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

ரரரச

 

கடந்த 2007ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு சிறிய மாவட்டம் அரியலூர். இந்த மாவட்டம் சிமெண்ட் ஆலைகள் அதிகம் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது. விவசாயப் பெருங்குடி மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். அரியலூர் மாவட்டம் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கி காணப்படுகின்றது. நாடாளுமன்ற தொகுதியில் இந்த இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியோடு உள்ளடக்கியதாக இருக்கிறது. தற்போது இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுகவைச் சேர்ந்தவர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். 

 

அரியலூர் சட்டமன்ற தொகுதி: 

தச

 

அரியலூர் சட்டமன்ற தொகுதி பெருவாரியாக கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதியாகவே இருக்கிறது. 1977க்கு பிறகு இந்த தொகுதியில் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. அதிமுக தொடங்கப்பட்ட பிறகு இந்த தொகுதியில் 10 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 5 முறை அதிமுகவும், மூன்று முறை திமுகவும் வெற்றிபெற்றன. ஒருமுறை காங்கிரஸ் கட்சியும், ஒருமுறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக சார்பில் சட்டமன்ற கொறடா தாமரை ராஜேந்திரன் தற்போது இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் 3000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் அவரிடம் தோல்வி அடைந்தார். 

 

இந்த தேர்தலில் மீண்டும் இருவருக்கும் இடையே போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளரும், அரியலூர் திமுக மாவட்டச் செயலாளருமான சிவசங்கர் இந்தமுறை வெற்றிக்காக கடுமையாக போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ள ராஜேந்திரன் மீண்டும் களம் இறங்குவார் என்று கருத்தப்படுகிறது. பாமக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த தொகுதியில் செல்வாக்காக இருக்கின்றன. பாமக, அதிமுக கூட்டணியில் தொடரும் பட்சத்தில் அது அதிமுகவுக்கும், காங்கிரஸ் கட்சி திமுகவுக்கும் இந்த தொகுதியில் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி தோல்வியை எளிதில் கூறுமளவுக்கு கள நிலவரம் தற்போதைக்கு இல்லை. 

 

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி:

ரக

 

மாவட்டத்தில் அதிகமான கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதியாக இந்த சட்டமன்ற தொகுதி இருக்கிறது. கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைத் தன்னகத்தே கொண்ட சட்டமன்ற தொகுதியாக இந்த தொகுதி இருந்து வருகிறது. கடந்த 1977ம் ஆண்டுக்குப் பிறகு இந்த தொகுதியில் 10 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 4 முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளது. இரண்டு முறை திமுக வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் மட்டும் பாமக வெற்றிபெற்றதுள்ளது. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த ராம ஜெயலிங்கம் இருந்து வருகிறார். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவியது. அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ராம ஜெயலிங்கம் ஒருபுறம், பாமக சார்பில் காடுவெட்டி குரு மறுபுறம், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் என மும்முனை போட்டி நிலவியது. 

 

இதில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை மாநில வன்னிய சங்க தலைவராக அப்போது இருந்த காடுவெட்டி குரு பெற்றார். திமுக கூட்டணி வேட்பாளர் மூன்றாவது இடத்திற்குச் சென்றார். இந்த தொகுதியைப் பொறுத்த வரையில் பாட்டாளி மக்கள் கட்சிக்குத் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. கடந்த தேர்தலில் மட்டும் அக்கட்சி 25.85 சதவீத வாக்குகளைத் தனித்து நின்று பெற்றுள்ளது. எனவே இந்த முறை அதிமுக - பாமக கூட்டணி உருவானால் இந்த தேர்தலில் மீண்டும் பாமக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் பாமகவைச் சேர்ந்த வைத்தி இத்தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்குச் செல்ல வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. வெற்றியைத் தீர்மானிப்பதில் பாமகவுக்கு முக்கிய இடம் உண்டு. எனவே பாமக இடம்பெறும் கூட்டணி வலுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அது திமுக கூட்டணியா அல்லது அதிமுக கூட்டணியா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.