என்னை சசிகலா முதல்வராக்கினார் என்றால் உன்னையும் சசிகலாதானே முதல்வராக்கினார் என்று இ.பி.எஸ்.சும் ஓ.பி. எஸ்.சும் மோதிக் கொண்ட நிலையில், இப்போதும் அ.தி.மு.க.வுக்குள் சசிகலா குடும்பத்தின் ஊடுருவல் இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள் உள்ளும் புறமும் அறிந்த கட்சி நிர்வாகிகள்.
டான்சி வழக்கின் காரணமாக, ஜெ.வின் பதவியேற்பு செல்லாது என 2001ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, முதன்முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம். யாரு இவரு என கட்சிக்காரர்களே கேட்டாலும், ஓ.பி.எஸ் முதல்வரானதில் அப்போதைய பெரியகுளம் (தேனி) எம்.பி. டி.டி.வி.தினகரனுக்கு கணிசமான பங்கு உண்டு. அந்த நன்றியுணர்வு ஓ.பி.எஸ்.சுக்கும் உண்டு. தினகரன் சொல்லித்தான், 2016ல் சசிகலாவுக்காக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ். (அதன்பிறகு நடந்தது தனி கட்டுரையாக உள்ளது).
தினகரனுடன் நெருக்கமாக இருப்பவர்கள், சசிகலாவின் தம்பி திவாகரனிடம் ஏழாம் பொருத்தமாகவே இருப்பார்கள். அதனால் ஓ.பி.எஸ். சற்று தள்ளியே இருக்க, திவாகரன் தனக்கு நெருக்கமாகக் கருதியது எடப்பாடியைத்தான். தினகரன் ஆளான ஓ.பி.எஸ்.சுக்கு பதில் எடப்பாடி முதல்வரானதிலிருந்து திவாகரன் தரப்புக்கும் அவருக்குமான நெருக்கம் மேலும் பலமாகியுள்ளது.
இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.ஸின் தற்போதைய காரசார விவாதங்களின் பின்னணியிலும் தினகரன்-திவாகரன் பவர் ஃபைட் உள்ளது என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள். செயற்குழு கூடுவதற்கு முதல்நாள், டெல்டா மாவட்டத்தில் சவுடு மணல் எடுப்பதற்கான அனுமதியை மாவட்ட மந்திரி தரப்புக்கும், திவாகரன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், வழக்கமான மணல் காண்ட்ராக்ட் தரப்புக்குமாக மூன்று பிரிவாகக் கொடுத்திருக்கிறது எடப்பாடி அரசு. வேறு எந்த மாவட்டத்திலும் இத்தகைய சவுடு மணல் அனுமதி வழங்கப்படாத நிலையில், திருவாரூர் மாவட்டத்திலும் அதன் தொடர்ச்சியாக கிழக்கு கடற்கரை சாலை நெடுகிலும் திவாகரன் தரப்பை மனதில் கொண்டு சவுடு மணலுக்கான அனுமதியை வழங்க எடப்பாடி அரசு தயாராக இருக்கிறதாம். இதனை தினகரனும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். எடப்பாடி முதல்வரான பிறகு, தன்னை முற்றிலுமாக கட்சியிலிருந்து ஓரங்கட்டிய கோபம் தினகரனுக்கு உள்ளது. அதனால், அவர் தரப்பிலிருந்து ஓ.பி.எஸ்.சுக்கு கொம்பு சீவி விடப்படுகிறது.
சசிகலா குடும்பத்திற்குள்ளான பவர் ஃபைட் அ.தி.மு.க. தலைமை வழியே எதிரொலிக்கிறது என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள்.