Skip to main content

நீடிக்கும் இழுபறி! விட்டுக்கொடுக்குமா தி.மு.க.?

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

dddd

                                                                 கோப்புப் படம் 

 

தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எந்தக் குழப்பமும் இருக்கக்கூடாது என தி.மு.க.வும் அதி.மு.க.வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கான எண்ணிக்கை, தொகுதிகள் ஆகியவைகளை ஜனவரிக்குள் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டுவிட வேண்டும் என தீர்மானித்திருந்தன. ஆனால், இதுநாள்வரை இரண்டு கூட்டணிகளிலும் இழுபறியே நீடிக்கிறது.

 

தி.மு.க.வில் என்ன நடக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மா.செ.க்கள் சிலரிடம் விசாரித்தோம். ’தி.மு.க.வில் காங்கிரஸ், மதி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இருக்கின்றன. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் கூட்டணிக்குள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

 

கூட்டணிக் கட்சிகளுக்கு, எண்ணிக்கை என்பதையும் கடந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது, விரும்பும் தொகுதிகளைப் பெறுவது என்பதில்தான் இழுபறி நீடிக்கிறது. உதயசூரியனில் போட்டியிடச் சொல்லி வலியுறுத்தவில்லை என எங்கள் தலைமை சொன்னாலும், அதற்கான வலியுறுத்தல்கள் உண்டு. அதாவது, 200 தொகுதிகளில் உதயசூரியன் நிற்க வேண்டும் என்பது மு.க.ஸ்டாலினின் இலக்கு.

 

காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளைத் தவிர்த்து மற்ற கட்சிகள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்பதில் பிடிவாதமாக இருந்தால், அவைகளுக்கான எண்ணிக்கை குறையும். அந்த வகையில், 34 தொகுதிகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, 200 இடங்களில் தி.மு.க. நேரடியாக களமிறங்கும்.

 

அதுவே, கூட்டணி கட்சிகளுக்கு எண்ணிக்கையை தி.மு.க. உயர்த்தினால் அந்த எண்ணிக்கையில் சரிபாதியாக தனிச் சின்னத்திலும் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட கூட்டணி கட்சிகள் சம்மதிக்க வேண்டும். அப்படி நடந்தால் 180 இடங்களில் தி.மு.க. போட்டியிட ஸ்டாலின் சம்மதிப்பார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் எண்ணிக்கை 34-லிருந்து 54 ஆக உயரும். அது கட்சிகளின் தன்மைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும்.

 

இது ஒருபுறமிருக்க, தற்போது தி.மு.க. ஜெயித்துள்ள சிட்டிங் தொகுதிகளோடு, வெற்றி வாய்ப்புள்ள மேலும் 100 இடங்களை அடையாளம் கண்டறிந்து அதனை ஸ்டாலினிடம் தந்துள்ளது ஐ-பேக். அதில் பல தொகுதிகள் கூட்டணி கட்சிகள் அழுத்தமாக கேட்கும் தொகுதிகளும் அடங்கியிருக்கின்றன. அதனை விட்டுக்கொடுக்க தி.மு.க. தயாராக இல்லை.

 

இதனால், எண்ணிக்கையும் குறைவு, தி.மு.க. சின்னத்திலும் போட்டியிட வேண்டும், விரும்பிய தொகுதிகளும் கிடைக்காது என்றால் எப்படி என்கிற ஆதங்கம்தான் கூட்டணி கட்சிகளிடம் இருக்கிறது. இதனால்தான் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்னும் துவங்கவில்லை.

 

தற்போதைய சூழலில், எண்ணிக்கையைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு மட்டுமே இரட்டை இலக்கத்திலும், மற்றவைகளுக்கு ஒற்றை இலக்கத்திலும்தான் ஒதுக்க சம்மதிக்கிறார் ஸ்டாலின். குறிப்பாக, ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளுக்கு தலா 5 சீட் என சொல்லப்பட்டிருக்கிறது. முந்தைய தேர்தலில் மதி.மு.க.வுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டதால், அதைச் சுட்டிக்காட்டி 5 சீட்டுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது தி.மு.க.

 

உதயசூரியனில் போட்டியிடுவதாக இருந்தால், எண்ணிக்கையைக் கூடுதலாக்குகிறோம். அதில் நீங்கள் விரும்பும் சில தொகுதிகளும், நாங்கள் தரும் தொகுதிகளும் இருக்கும் என விடுதலைச் சிறுத்தைகளிடமும், அதேபோல, 5 சீட்டுகளுக்கு ஒப்புக் கொள்ளுங்கள்; ராஜ்யசபா தேர்தலின்போது உங்களுக்கு சீட் தரப்படும் என கம்யூனிஸ்டுகளிடமும் தி.மு.க. தெரியப்படுத்தியிருக்கிறது. ஆனால், தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும் எனத் தெரியாத நிலையில் ராஜ்யசபா என்கிற கமிட்மெண்ட்டை எப்படி ஏற்பது என்கிற குழப்பம் கம்யூனிஸ்டுகளிடம் உள்ளது. இப்படிப்பட்ட சிக்கல்களால்தான் வெளிப்படையான பேச்சுவார்த்தை தி.மு.க.வில் துவங்கவில்லை'' என்கிறார்கள் விரிவாக.

 

தி.மு.க. வைத்திருக்கும் இப்படிப்பட்ட நிபந்தனைகளைக் கூட்டணிக் கட்சிகள் தங்களின் உயர்மட்ட குழுவில் விவாதித்து வருகின்றன. அநேகமாக, பிப்ரவரி 15-க்குள் கூட்டணி கட்சிகள் தங்களின் இறுதி முடிவை தி.மு.க.வுக்குத் தெரிவித்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு அறிவாலயத்தில் எதிரொலிக்கிறது.       

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.