அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, அவர் ஆப்பிள் சாப்பிட்டார், ஆங்கிலத்தில் பேசினார் எனத் தகவல்கள் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டன. அதுபோல கரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர்? எத்தனை பேர் கரோனாவில் இருந்து குணமாகினர் என்பது பற்றி முரண்பாடான தகவல்களைத் தமிழக அரசு அளித்து வருகிறது எனக் குற்றம் சாட்டுகிறார்கள் இந்த விவகாரத்தை உற்றுக் கவனித்து வரும் சமூக ஆர்வலர்கள்.
அதேபோல் இப்பொழுது கரோனா நோய் தமிழகத்தில் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறது. முதலில் டெல்லியில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் கரோனா நோய் வந்தது என்றவர்கள், மிகவும் கவனக்குறைவோடு செயல்பட்டதால் கோயம்பேடு மூலம் கரோனா நோய் வந்தது என்றார்கள். இப்பொழுது வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் மூலமாக கரோனா நோய் வந்திருக்கிறது என மூன்றாவது காரணத்தைச் சொல்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் 796 இடங்களை கரோனா நோய்ப் பாதித்த பகுதிகளாக அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பகுதிகளுக்கு வெளியில் இருப்பவர்களுக்கும் கரோனா நோய்ப் பரவி வருகிறது. இது தமிழகத்தில் கரோனா நோய், சமூகத் தொற்று என்ற நிலையை அடைந்து விட்டது என்பதைக் காட்டுகிறது. சமூகத் தொற்று என்கிற நிலையைக் கரோனா அடைந்து விட்டால் அது யாருக்கு வேண்டுமென்றாலும் பரவும். இவருக்கு இதனால் நோய் வந்தது என யாரும் அறுதியிட்டு சொல்ல முடியாது.
கரோனா, அமெரிக்காவில் பரவியதைப்போல லட்சக்கணக்கில் பரவும். இப்பொழுது இந்தியாவில் ஒரு லட்சத்தைத் தொட்ட கரோனா நோய், 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர எடுத்துக்கொண்ட நாட்கள் ஏழு நாட்கள்தான். இனி 3 நாட்களில் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும். அதற்குப் பிறகு இரண்டு நாட்களில் அந்த எண்ணிக்கை வரும். ஒரே நாளில் இன்று 5 ஆயிரத்தில் இருந்து 7 ஆயிரம் பேர்கள் என இருக்கும் இந்திய கரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 50 ஆயிரமாக உயரும்.
ஊரடங்கு இந்தியா முழுவதும் தளர்த்தப்பட்டிருக்கிறது. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மதுபானக் கடைகள், சலூன் கடைகள் திறக்கப்பட்டி ருக்கிறது. இந்தச் சூழல் எல்லாம் கரோனா நோய்ப் பரவுவதை மிகவும் அதிகப்படுத்தும். இந்தியா முழுவதும் சமூக இடைவெளி என்பதையும் மக்கள் கடைப்பிடிப்பதில்லை. மாஸ்க் அணியும் பழக்கம், கைக் கழுவும் பழக்கம் போன்றவை, உடல்நலம் பற்றிய உச்சக்கட்ட எச்சரிக்கை கொண்ட நடுத்தர மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
ஏழை மக்கள் ஊரடங்கு ஏற்படுத்திய பொருளாதார அடியினால் தாக்கப்பட்டு கரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டார்கள். இந்நிலையில் கரோனா வெகு வேகமாகப் பரவி வருகிறது. அரசு தரப்பும் கரோனாவைக் கட்டுப்படுத்தக்கூடிய சோதனை மூலம் கரோனா நோயாளிகளைக் கண்டுபிடிப்பது அதன்பின் அந்த கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடிப்பது, அவர்கள் குடியிருக்கும் பகுதியை அடைத்து வைப்பது, கரோனா நோய் பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப் படுத்துவது, அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பது என்பதையெல்லாம் கைவிட்டுவிட்டார்கள்.
தமிழகத்தில் தினமும் 12 ஆயிரம் கரோனா சோதனைகள் செய்யப்பட்டு வந்தன. அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் என 61 ஆய்வகங்களில் கரோனா சோதனை செய்யப்பட்டு வந்தது. அந்தச் சோதனைகளைத் திடீரென அரசு 10 ஆயிரமாக குறைத்துவிட்டது. அதிகபட்சமாக அதிக சோதனைகள் செய்ததினால் 700 என்ற எண்ணிக்கையில் வந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென சோதனைகள் குறைக்கப்பட்டதால் 400 என வந்தது. அதேபோல் தமிழகத்தைவிட குறைந்த கரோனா நோயாளிகள் கொண்ட மாநிலங்களில் எல்லாம் நூற்றுக்கணக்கானோர் கரோனா நோயால் இறந்து போனார்கள் என அந்த மாநிலங்கள் மத்திய சுகாதாரத்துறையிடம் தெரிவிக்கும் சூழ்நிலையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கரோனா நோயாளிகளைக்கொண்ட தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை சுமார் 80 என்கிற எண்ணிக்கையில் இருந்தது.
உலகம் முழுவதும் கரோனா நோயில் இருந்து விடுபட்டவர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் இருக்கையில் தமிழகத்தில் மே 16ஆம் தேதி 939 பேர் ஒரே நாளில் கரோனா நோயில் இருந்து விடுபட்டார்கள் எனத் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு கரோனா நோய்க்கு எதிராக உலகம் முழுக்க போராடி வரும் மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. உலகம் முழுக்க மருத்துவர்கள் இந்திய அரசைத் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரே நாளில் கிட்டதட்ட ஆயிரம் பேர் எப்படி கரோனா நோயில் இருந்து விடுபட்டார்கள் எனக் கேட்டார்கள். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் எந்தெந்த மருத்துவமனைகளில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்பட்டிருந்ததார்கள், எத்தனை பேருக்கு கரோனா இல்லை என சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது, அவர்கள் எப்படிக் கரோனா நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என அறிவித்தீர்கள் எனக் கேட்டது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மருத்துவ மனையில் இருந்தும் கரோனா நோயில் இருந்து மீண்டவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்போது அவர்களுக்கு, பிரிவு உபச்சார விழா நடக்கும். மீடியாக்களின் கேமராக்கள் முன்பு நடத்தப்படும் அந்தப் பிரிவு உபச்சார விழாவில் கரோனாவில் இருந்து மீண்டவர்கள் பேசுவார்கள். 16ஆம் தேதி கரோனா நோயில் இருந்து மீண்டவர்கள் எனத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டவர்களுக்கு எந்த மருத்துவமனையிலும் பிரிவு உபச்சார விழா நடத்தப்படவில்லை. மீடியா அட்டென்ஷனும் கொடுக்கப்படவில்லை.
சென்னை நகர மருத்துவமனைகளில் இருந்து 300க்கும் அதிகமானவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள் எனத் தமிழக அரசு அறிவித்தது. இந்தத் தகவல் தெரிந்ததும் மீடியாக்களைச் சேர்ந்தவர்கள், ஓமந்தூரார் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கும், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கும் உடனடியாகச் சென்றார்கள். அங்கு விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர்தான் கரோனா சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்பவர்களாக எந்தவிதமான பிரிவு உபச்சார விழாக்களும் நடத்தப்படாமல் சென்றுகொண்டிருந்தார்கள்.
திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திருவள்ளுர், செங்கல்பட்டு எனத் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மே 16ஆம் தேதி கரோனாவில் இருந்து விடுபட்டவர்களுக்காக பிரிவு உபச்சார விழாக்கள் நடத்தப்படவே இல்லை.
யார் சிகிச்சைப் பெற்றார்கள், அவர்களுக்கு எப்படி கரோனா நோய் குணமானது என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு 939 பேர் குணமடைந்தார்கள் என மெடிக்கல் ரெக்கார்டுகள் மருத்துவமனைகளில் திருத்தப்பட்டன என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
கரோனா நோயில் இருந்து விடுபட்டவர்கள் மருத்துவமனையில் இருந்து சென்ற பிறகு 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வசிக்க வேண்டும். அப்படி 16ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து நோய்க் குணமாகி சென்றவர்கள் சிகிச்சைப் பெறுகிறார்களா என்பதைப் பற்றி எந்த ஆவணமும் அரசிடம் இல்லை. மோசடியான-குளறுபடியான கணக்கு வழக்குகளே மிஞ்சுகின்றன. இந்தக் கணக்கு வழக்குகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கவனத்திற்கு கொண்டு சென்று இறுதி முடிவு எடுக்கிறோம் என்று நழுவி விடுகிறார்கள் சுகாதாரத்துறையினர்.
சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் போலி நியமன உத்தரவுகளுடன் பலர் பணியில் சேர்ந்தார்கள். அதை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் கண்டுபிடித்தார். அது போலீசில் புகாராகப் போனது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் சுகாதாரத்துறையில் போலி நியமன ஆணைகளுடன் ஆட்களை வேலைக்குச் சேர்த்தார் என விக்கி என்கிற விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இப்போது ஜாமீனில் வெளிவந்து விட்டார். போலி நியமன உத்தரவுகளை அச்சடித்து சுகாதாரத்துறையில் பணியாளர்களை நியமித்த அந்த விக்கி இப்பொழுது அமைச்சர் விஜயபாஸ்கருடன் அவரது பி.ஏ.வாக சுற்றித் திரிகிறார் எனச் சுட்டிக்காட்டுகிறார்கள் சுகாதாரத்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.
நோயாளிகள் கணக்கில் மட்டுமல்ல, 5 ஆயிரம் கோடிக்கு மேல் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ள கரோனா சிகிச்சை உபகரணங்கள் வாங்குவதிலும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன. இதுபற்றி அமைச்சரை கூப்பிட்டு விசாரித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கும் திருப்தியான பதிலைச் சொல்லிவிட்டார்.
எடப்பாடியும் கூல் ஆகிவிட்டார். புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் அமைச்சருக்கு வேண்டியவர்கள் நடத்தும் சாய் எண்டர்பிரைசஸ் என்கிற கட்டுமான நிறுவனத்திற்கு 300 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களை எடப்பாடி பரிசளித்துள்ளார். இதெல்லாம் சமீபத்தில் கரோனா காலத்து கூடுதல் கிஃப்ட் என அதிர வைக்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
அமைச்சருடன் முரண்பட்டதால் இப்பொழுது சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். திருவள்ளூரில் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கும் விழா நடைபெறுகிறது. அந்த விழாவிற்கான விளம்பரத்தில் பீலா ராஜேஸின் படத்தைப் போட வேண்டாம் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனால் கடுப்படைந்த பீலா ராஜேஷ், கரோனா நோய்த் தடுப்பிற்குத் தேவையான பி.பி.இ. ஆடைகள், மாஸ்க்குகள், மருந்து மாத்திரைகள் என எல்லாம் பற்றாக்குறையில் இருக்கும்போது 2,500 வெண்டிலேட்டர்கள் வாங்க ஏன் ஆர்டர் கொடுத்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் சுகாதாரத்துறையில் சார்பு செயலாளராக விதிகளை மீறி சுகாதாரத் துறைக்கு சம்பந்தமே இல்லாத அமைச்சரின் ஆதரவாளர் ஒருவரை ஏன் நியமித்தீர்கள் என விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார் எனச் சுகாதாரத்துறையில் நடக்கும் மோதலையும் சொல்கிறார்கள் அதிகாரிகள்.
ஒரு பக்கம், உண்மையை மறைக்கும் தகவல்கள். இன்னொரு பக்கம் லாபம் தரும் கொள்முதல்கள், இவற்றிற்கிடையே அதிகார மோதல் எனத் தமிழக சுகாதாரத் துறையில் கரோனா நோய் ஒழிப்பு நடவடிக்கைகள் கேலிக் கூத்தாகிக்கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் கரோனா நோயைக் கட்டுப்படுத்துவதில் சென்னை மாநகராட்சி உரிய ஒத்துழைப்பு தரவில்லை என முதல்வரிடம் புகார் தெரிவித்திருக்கிறார் சென்னை மண்டலத்தில் கரோனா நோயை ஒழிப்பதற்காகச் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்.
இப்படி ஆளாளுக்கு தம் விருப்பத்திற்கேற்ப குளறுபடிகள் செய்து கொண்டிருப்பதால், தமிழகத்தில் கரோனாவுக்கு கொண்டாட்டம். மக்கள் பாடுதான் திண்டாட்டம்.