"ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலைக் கொடூரம் நிகழ்ந்து 20 நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், பாதிக்கப்பட்ட பாத்திமாவின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை செய்யும் காவல் துறையோ, குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணையை தீவிரப் படுத்தவில்லை' என்ற குற்றச்சாட்டு தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், 2019 நவம்பர் 27-ந் தேதி பாத்திமாவின் சகோதரி ஆயிஷா, தந்தை அப்துல் லத்தீப் உள்ளிட்ட உறவினர்கள் மீண்டும் சென்னை வந்து மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள். இதுகுறித்து, பாத்திமாவின் சகோதரி ஆயிஷாவிடம் நாம் கேட்டபோது, எனது சகோதரியின் மரணத்துக்குக் காரணமான துணைப்பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் உள்ளிட்ட 3 பேர் பற்றி செல்போனில் டைப் செய்து வைத்திருந்த தகவல்கள் அழிக்கப்பட்டு விடக்கூடாதுன்னு தான் அவளது செல் போனில் புதிய பாஸ்வேர்டு போட்டு லாக் செய்து விட்டு கோட்டூர்புரம் போலீஸிடம் ஒப்படைத்து விட்டுப் போனேன். அந்த, செல்போன் சென்னை மயிலாப்பூரிலுள்ள தமிழக அரசின் தடயவியல் பரிசோதனைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதனாலதான், நேர்ல வந்து காவல்துறை முன்னிலையில அந்த பாஸ்வேர்டை நீக்கிக் கொடுத்தேன். பரிசோதனை முடிவை கோர்ட்டுக்கு அனுப்பிவிடுவோம்னு சொல்லிட்டாங்க.
பிறகு, அங்கிருந்து புறப்பட்டு சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவு (சி.சி.பி.) காவல்துறை கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி சாரை சந்தித்தோம். கிட்டத்தட்ட மூணுமணி நேரம் விசாரணை செய்து வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டார்கள். ஆரம்பத்துல, சி.பி.ஐ. விசாரணை கோரலாம்ங்குற மைண்டுல தான் இருந்தோம். கேரள முதல்வர் மாண்புமிகு பினரயி விஜயன் அவர்கள் கூட ‘சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை பண்ணவா?'ன்னு கேட்டாரு. ஆனா, எங்களுக்கு மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி சார் மேல நம்பிக்கை இருக்கு. அதனால, சி.பி.ஐ. வேணாம்… சி.சி.பி.யே விசாரிக்கட்டும்ங்குற மனநிலைக்கு வந்துட்டோம்'' என்கிறார் ஆயிஷா.
ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், தோழிகள் என பலரிடம் முதற்கட்ட விசாரணையை முடித்துவிட் டது ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான சி.சி.பி. அதே நேரத்தில் ஐ.ஐ.டி. நிர்வாகமோ, விசாரணையில் உண்மை தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டதால் பாத்திமாவுடன் மிகவும் நெருக்கமான தோழிகளிடம் விசாரணை செய்யப் படவில்லை. அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. பாத்திமாவின் லேப்டாப் மற்றும் டேப்ளட் ஆகியவற்றை ஆயிஷா சி.சி.பி.யிடம் ஒப்படைத்திருக்கிறார். இவை, நீதிமன்ற ஒப்புதலுடன் திறந்து ஆராய்ந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க இன்னும் 15 நாட்கள் ஆகலாம் என்று சொல்லியிருக்கிறது காவல்துறை. இந்நிலையில், கேரள மாநிலத்தின் கொல்லம் எம்.பி. பிரேமச்சந்திரன் மூலம் பிரதமர் மோடியை சந்தித்து நீதி கிடைக்க கோரிக்கை வைக்க இருக்கிறது மாணவி பாத்திமாவின் குடும்பம். தங்களது பேராசிரியர்களைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது ஐ.ஐ.டி. நிர்வாகம்.