அதுவரை கடவுள்தான் இந்த உலகை, உயிரை, அனைத்தையும் படைத்தார் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. அந்த புத்தகம் வந்த பின்புதான் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டனர் இது பரிணாம வளர்ச்சியால் நடந்த மாற்றம் என்று, அதேபோல் அதன்பின்புதான் பலர் அவரை தூற்றவும் தொடங்கினர். அறிவியல் உலகத்தில் இதை இரண்டாம் புரட்சி என்றும் கூறுவார். காரல் மார்க்ஸ் தனது புகழ்பெற்ற "மூலதனம்" என்ற நூலை "நான் உங்களின் அபிமானி" கையெழுத்திட்டு அனுப்பினார், இவருக்கு. அவர்தான் சார்லஸ் டார்வின். அவர் எழுதிய புத்தகம்தான் உயிரினங்களின் தோற்றம் (Origin of species).
இந்த புத்தகம்தான் உயிரினங்களின் பரிணாமத்தை பற்றி கூறுகிறது. ஒரு உயிரினத்தின் மரபணுவில் திடீரென மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளது. அப்படி அது மாறும்போது புது உயிரினங்கள் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் இது உடனடியாக நடக்காது. இதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும். தொடர்ந்து இந்த மாற்றம் அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர்ந்து நடக்கவேண்டும். அப்படியானால்தான் புது உயிரினம் என்பது சாத்தியப்படும் என தனது படிவளர்ச்சி கொள்கை மூலம் உலகுக்கு விளக்கினார்.
இவ்வளவு பெரிய அறிவியல் புரட்சியை நடத்தவேண்டும் என்றால் அதில் எவ்வளவு ஈடுபாடு இருந்திருக்க வேண்டும். டார்வினுக்கும் அதே அளவு ஈடுபாடு இருந்தது. சிறுவயதிலேயே உயிரினங்கள் மீதான ஒரு ஈடுபாடு அவரை தொற்றிக்கொண்டே இருந்தது. முதலில் அவர் மருத்துவம் படித்தார். அப்போது ஒரு அறுவை சிகிச்சையை பார்க்க நேர்ந்தது. அதன்பின் மருத்துவ படிப்பிலிருந்து விலகினார். பின் இறையியல் பயின்றார், அதில் சிறந்த மாணவனாக விளங்கியபோதும் அவருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் மீதான ஆர்வம் குறையவில்லை. கப்பல் பயணத்தின் மூலம் பல நாடுகளுக்கும் சென்று ஆய்வு செய்தார். அதன்மூலம்தான் இந்த புத்தகத்தை உருவாக்கினார். இந்த புத்தகத்தின் மூலம் அறிவியல் புரட்சி செய்த சார்லஸ் டார்வினின் பிறந்த நாள் இன்று... கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை என்று கூறியதில் இவர் பெரியாருக்கு முன்னோடிதான்....