நிலவினை ஆய்வு செய்வதற்காக ஜூலை 14ம் தேதி இஸ்ரோ செலுத்திய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவும் நிலவில் தனது தடத்தைப் பதித்துள்ளது. இதற்கு முன் நிலவில் தென் துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யா இந்தியாவிற்குப் போட்டியாக ஆகஸ்ட் 11ல் அனுப்பிய லூனா-25 விண்கலம். ஆகஸ்ட் 20 அன்று தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்ட சிக்கலில் விழுந்து நொறுங்கிய தகவலும் வெளியானது.
நிலவின் தென் துருவத்தில் நீர் வளங்கள் மற்றும் நிரந்தர நிழல் பள்ளங்கள் நிறைந்த பகுதியை ஆராய்ந்து ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான்-3ஐ புதன்கிழமை மாலை 6 மணியளவில் நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான பணிகளைக் காலை முதலே தொடங்கியது இஸ்ரோ. ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்க்க, சரியாக மாலை 6.02 மணிக்கு நிலவின் தென்திசையில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த வெற்றியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், இந்தியா தற்போது நிலவின் மீது இருப்பதாக அவர் பெருமையாக குறிப்பிட்டார். சந்திரயான்-3க்கு முன்பு இந்தியா இரண்டு முறை தனது முயற்சியை மேற்கொண்டுள்ளது.
சந்திரயான் 1
அக்டோபர் 2008ல் சந்திரயான்-1 இந்தியா சார்பில் ஏவப்பட்ட முதல் நிலவு விண்கலமாகும். விண்கலம் மொத்தம் 11 ஆய்வு உபகரணங்களைத் தாங்கிச் சென்றது. அவற்றில் 5 கருவி இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும். மற்ற 6 கருவிகள் வெவ்வேறு நாடுகளில் இருந்து சேர்த்துக் கொள்ளப்பட்டதாகும். நவம்பர் 2008ல் சுற்றுப்பாதையில் செருகப்பட்ட விண்கலம் ஆகஸ்ட் 2009 வரை செயல்பட்டது. பின்பு இஸ்ரோ மையம் ஆர்பிட்டருடனான தொடர்பை இழந்தது.
இருந்தும் விண்கலம் அதே மாதத்தில் சுற்றுப் பாதையை அடைந்து, மூன் இம்பாக்ட் ப்ரோப் (எம்ஐபி)ல் இருந்து பிரிந்து நிலவின் தென் துருவத்தில் இறங்கியது. இது அடியில் நீர் இருப்பதைக் கண்டறிய வழிவகுத்து பெருமையைத் தேடித்தந்தது. இதன் பிறகு 29 ஆகஸ்ட் 2009 அன்று சந்திரயானில் வரக்கூடிய சிக்னல் நின்று போனது. 95 சதவீத ஆராய்ச்சிகள் முடிந்த நிலையில், சந்திரயான் 1 திட்டம் வெற்றிகரமானதாக அறிவிக்கப்பட்டது.
சந்திரயான் 2
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஜூலை 22, 2019 அன்று சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் மேற்பரப்பின் சுற்றுப்பாதையில், நிலவின் நிலப்பரப்பு, கனிமவியல், தனிம மிகுதி, சந்திர எக்ஸோஸ்பியர் மற்றும் ஹைட்ராக்சில் மற்றும் நீர் பனியின் கையொப்பங்களை ஆராய்வதற்காகச் செலுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 20, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைகொண்டது. தொடர்ந்து செப்டம்பர் 2ல், நிலவின் 100 கி.மீ., சுற்று வட்டப் பாதையில் 'விக்ரம் லேண்டர்' இருந்தபோது, சாதனம் பிரிந்தது. பின்பு நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ., தொலைவை லேண்டர் அடைந்தபொழுது இஸ்ரோவுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், சந்திரயான் - 2 திட்டம் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
சந்திரயான் 3
இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றது. தொடர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் நேற்று மாலை 6.02 மணியளவில் இறங்கி சாதனை படைத்துள்ளது சந்திரயான் - 3. நிலவின் மேற்பரப்பை ஆராய்ந்து அறிவியல் தரவுகளைச் சேகரிப்பதன் நோக்கமாக ஏவப்பட்டது.
இதற்கு முன்னதாக இந்தியாவுக்கு சவாலாக ரஷ்யா நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய முடிவெடுத்து லூனா 25 என்ற விண்கலத்தைச் செலுத்தியது. இது நேரடியாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என ரஷ்யா தெரிவித்தது. ஆகஸ்ட் 11ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட லூனா விண்கலம், சந்திரயான் 3 விண்கலத்துக்கு முன்பாகவே ஆகஸ்ட் 21ல் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என அறிவித்தனர். இதன் அடிப்படையில் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடாக ரஷ்யா பெருமையை இந்தியாவிடம் பறித்திருக்கலாம்.
விண்ணில் செலுத்தப்பட்ட லூனா 25 விண்கலம் கடந்த 17ம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து அதன்பிறகு நிலவின் சுற்றுவட்டப் பாதையின் அளவைக் குறைக்கும் பணிகளை ரஷ்யா தொடங்கியது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் லூனா 25 விண்கலம் இறுதிக்கட்ட சுற்றுவட்டப் பாதையை அடைய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, ரஷ்யாவின் நேரப்படி 14:57 மணிக்கு லூனா -25 விண்கலம், ருஷ்ய ஆய்வு மையத்துடன் தொடர்பை இழந்தது. பின்னர் லூனா- 25 விண்கலத்துடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற நிலையில் லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கிய தகவலை ரஷ்யா அறிவித்தது.
- மருதுபாண்டி