Skip to main content

அரசியலில் சிக்கிய சந்திரயான்-2 அதிரடி ரிப்போர்ட்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

ஒரு மகத்தான சாதனையின் தொடக்கப் புள்ளி சிறப்பாகவே அமைந்தது. கடைசிப் புள்ளிக்கு சற்று முன்பாகத்தான் எதிர்பாராத சறுக்கல். சந்திரயான்-2 திட்டத்தை இப்படித்தான் வர்ணிக்கிறார்கள் விஞ்ஞானிகள். செப்டம்பர் 6-ஆம் தேதி பௌர்ணமி நிலவைப் போல பளிச்சென இருந்த இந்தியர்களின் முகம், செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை சந்திரயான்-2 லேண்டர் நிலவில் இறங்குவதில் ஏற்பட்ட தோல்வியால் அமாவாசை நிலவைப்போல இருண்டு சோகத்தில் ஆழ்ந்தது.

 

chandrayan



கடந்த ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான்-2, விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. குறிப்பிட்ட தூரத்துக்குப் பின் ராக்கெட்டிலிருந்து பிரிந்த சந்திரயான் 2 புவிவட்டப் பாதையை சுற்றிவரத் தொடங்கியது. ஆரம்பகட்ட வெற்றி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உற்சாகத்தைத் தர, அதன் சுற்றுவட்டப் பாதையைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்தனர். ஆகஸ்டு 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் கால்வைத்தது சந்திரயான். 48-ஆம் நாள் நிலவில் லேண்டரைத் தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது. அடிப்படையில் சந்திரயான்-2 ஒன்றுக்குள் ஒன்றாக மூன்று கலன்களின் தொகுப்பு. சந்திரயான்-2 எனப்படும் சுற்றுவட்ட கலன், அதிலிருந்து நிலவில் இறங்கும் விக்ரம் என பெயர்சூட்டப்பட்ட தரையிறங்கு கலன். அதிலிருந்து பிரிந்து நிலவை ஆராயும் பிரக்யான் ஆய்வூர்தி. கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி தரையிறங்கு கலமான விக்ரம், ஆர்பிட்டர் எனும் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு நிலவுக்கு நெருக்கமாக சுற்றிவரத் தொடங்கியது.


நிலவின் தென்துருவப் பகுதியான "மான்சினஸ் சி' மற்றும் "சிம்பிலியஸ் எஸ்' எனும் இரு பள்ளங்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் சமதளப் பகுதியில் தரையிறங்கு கலனை இறக்குவதுதான் இஸ்ரோ விஞ்ஞானிகளின் திட்டம். திட்டப்படி, கடைசிக் கட்டத்தை நெருங்கியபடியால் விஞ்ஞானிகள் உற்சாகமும் பரபரப்பும் அடைந்திருந்தனர். இதற்கிடையில் இஸ்ரோ நிறுவனம் நடத்திய புதிர் போட்டியில் வெற்றிபெற்ற 70 மாணவர்கள், நிலவில் சந்திரயான்-2 தரை யிறங்குவதை இஸ்ரோ விலிருந்து நேரடியாகக் காண வசதி செய்யப் பட்டிருந்தது. பிரதமர் மோடி, இந்த அபூர்வ நிகழ்வைக் காண நேரடியாக இஸ்ரோ வந்திறங்கியது மேலும் ஆர்வத்தைக் கூட்டியது.

நிலவில் வளிமண்டலம் இல்லையென்பதால், அங்கே விக்ரம் தரையிறங்கு கலத்தை பாரசூட் மாதிரியான எளிய யுக்திகளால் தரையிறக்க முடி யாது. கலம் அதன் சொந்த ராக்கெட் இன்ஜின்க ளின் வேகத்தை ஒவ்வொரு கட்டமாக, படிப்படியாகக் குறைத்து, கடைசியில் 4 கால்களும் பதிவது போல தரையிறங்கியாகவேண்டும். இதற்கு "சாஃப்ட் லேண்டிங்' எனப் பெயர். சுமாராக 15 நிமிடம் பிடிக்கும். இதற்கான தொழில்நுட்ப பணிகளில் விஞ்ஞானிகள் மும்முரமாகக் காணப்பட்டனர். விக்ரம் தரையிறங்கு கலம் 1.30 மணிக்கு தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், ஒன்பது நிமிடங்கள் தாமதமாகத் தரை யிறங்கத் தொடங்கியது. சரியாக 1.54-க்குள் திட்டமிட்டபடி தரையிறங்கியாகவேண்டும். கிட்டத்தட்ட நிலவிலிருந்து 150 கிலோமீட்டர் உயரத்திலிருந்து அதன் நான்கு இன்ஜின்களையும் இயக்கி விக்ரம் லேண்டர் வேகமாகத் தரை யிறங்கும். தரைக்கும் கலத்துக்குமான தூரம் 1 கிலோமீட்டர் இருக்கும்போது நான்கு இன்ஜின்களும் அணைக்கப்பட்டு பத்திரமாகத் தரையிறக்குவதென ஏற்பாடு.

நிலவிலிருந்து 2.1 கிலோமீட்டர் உயரத்தில் கலம் இருக்கும்வரை திட்டப்படி எல்லாம் சரியாகவே நடைபெற்றது. அப்போதுதான் அந்தத் துயரம் நிகழ்ந்தது. திடீரென விக்ரம் கலத்துடனான சிக்னல் அறுந்தது. இதையடுத்து பதட்டமடைந்த விஞ்ஞானிகள் மீண்டும் சிக்னலை ஏற்படுத்த வேகமாக முயற்சிகள் மேற்கொண்டனர். அது மீண் டும் மீண்டும் தோல்வியில் முடியவே நிலவிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் சுற்றுவட்ட கலத்துடன் தொடர்புகொள்ள முயன்றனர். அங்கிருந்து சிக்னல் கிடைத்தது. ஆனால், விக்ரம் கலத்துடனான சிக்னல் அறுந்தது அறுந்ததுதான்.

நிலவில் விக்ரம் கலம் தரையிறங்குவதை நேரில் காணச்சென்ற பிரதமர் மோடி, நடந்த துரதிர்ஷ்டங்களை விஞ்ஞானிகளிடமே கேட்டுத் தெரிந்துகொண்டு இஸ்ரோ தலைமைப் பொறுப்பி லுள்ள சிவனின் முதுகில் தட்டிக்கொடுத்து ஆறுதலும் நம்பிக்கையும் அளித்தார். சிவனின் கண்ணீரும் பிரதமரின் தட்டிக்கொடுத்தலும் ஊடக கேமராக்கள் முன் நடைபெற, அதையும் "தேசபக்தி' அரசியல் வியாபாரமாக மாற்றுவதில் கூடுதல் அக்கறை செலுத்தியது பா.ஜ.க. தரப்பு. "கிரிக்கெட் தொடங்கி ராக்கெட் வரை இந்திய மக்களுக்கு இயல்பாகவே தேசபக்தி உண்டு. அதைக்கூடவா அரசியலாக்குவது' என்ற சர்ச்சையும் வெளிப்பட்டது.

சந்திரயான்-2 வெற்றியடைய வேண்டுமென ஒட்டுமொத்த இந்தியர்களின் மனப்பூர்வமான பிரார்த்தனை ஒருபக்கமிருக்க, சந்திரக் கடவுள் கோவில்கொண்டுள்ள திங்களூர் கோவிலிலும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. சர்வதேச ஊடகங்கள் இஸ்ரோவின் முயற்சியை "முழுத் தோல்வியல்ல' என்றே விமர்சித்துள்ளன. தரையிறங்கு கலனுடனான தொடர்பை இழந்தபோதும் நிலவின் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் சுற்றுவட்ட கலன் ஒருவருடம் அங்கிருக்கும் என்பதால் இத்திட்டம் 95 சதவிகிதம் வெற்றிதான் என நம் விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர்.

செப்டம்பர் 8-ஆம் தேதி லேண்டரை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சாஃப்ட் லேண்டிங் ஆவதில் பின்னடைவு ஏற்பட்டதால் சிக்னல் கிடைப்பது பெரும்பாடு என்கின்றனர். நிலவைத் தொடும் ஆபரேஷனில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், அதை அரசியலாக்குவது அடுத்தகட்ட முயற்சிகளுக்கு சோதனையாகிவிடும்.