அரசு அறிவிக்கும் இழப்பீடுகள் முறையாக சேர்கிறதா?
அரசுக்கு அவப்பெயர் ஏற்படும்படி உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் இழப்பீடாக பெரிய தொகை வழங்கப்படும் என்று ஜெயலலிதா பாணியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்து வருகிறார். மருத்துவப் படிப்பு கனவு நிறைவேறாமல் போனதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவித்தார். ஆனால் அந்த இழப்பீட்டு தொகையை வாங்க அந்த குடும்பம் மறுத்துவிட்டது. அதே நேரத்தில் அந்த குடும்பத்திற்கு திமுக, டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்டவர்கள் கொடுத்த பண உதவியை அந்த குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

அனிதா யேகராஜ் பெரியபாண்டி
ஆனால் சில உயிரிழப்புகளில் அரசு அறிவித்த இழப்பீடு தொகை வராதா என்று இன்னமும் சிலர் காத்திருக்கின்றனர். சென்ற ஜூலை மாதம் சென்னை கொடுங்கையூர் தீ விபத்தில் மரணமடைந்த தீயணைப்புத் துறை அதிகாரி ஏகராஜ் இறந்தபொழுது அவரின் குடும்பத்திற்கு ரூ 16லட்சம் மற்றும் அரசு வேலை தருவதாக அறிவித்தது தமிழக அரசு. ஆனால் இன்று வரை உதவிகள் அக்குடும்பத்திற்குப் போய்ச் சேரவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சமீபத்தில் ஓகி புயலில் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்களை சந்தித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையொன்றில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்காகத் தனிப்படையுடன் ராஜஸ்தான் சென்ற மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அங்குக் கொள்ளையர் கூட்டத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பேரில் மறைந்த பெரியபாண்டி குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஏகராஜ் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடே இன்னும் சென்று சேராத நிலையில், அடுத்தடுத்து முதல்வர் அறிவிக்கும் பெரிய தொகையிலான இழப்பீடுகள் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு போய்ச் சேருகிறதா என்பதை எப்படித்தான் தெரிந்துகொள்வது?