மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கேஆர்எஸ், கபினி ஆகிய இரண்டு முக்கிய அணைகளும் நிரம்பி வழிகின்றன. அவ்விரு அணைகளுக்கும் வரும் தண்ணீர் முழுவதும் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது.
இதைத்தொடர்ந்து கடந்த செப். 7ம் தேதி, மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்தாண்டில் முதன்முதலாக அணை முழுமையாக நிரம்பியுள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரும் முழுமையாக பதினாறு கண் மதகுகள் வழியாக காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (செப். 10) மாலை நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 65000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பூலாம்பட்டி காவிரி கரையோர மக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
பூலாம்பட்டி காவிரி ஆறானது, சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. பூலாம்பட்டியின் அக்கரையில் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை அமைந்துள்ளது. இதனால் இரு மாவட்ட மக்களும் பயணிக்க ஏதுவாக பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், பூலாம்பட்டி காவிரியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூலாம்பட்டி காவிரியில் படகு போக்குவரத்து கடந்த நான்கு நாள்களாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், சேலம், ஈரோடு மாவட்டங்களின் எல்லையோர மக்கள் 3 கி.மீ. தூரம் வரை மாற்றுப்பாதை வழியாக நடந்தும், வாகனங்களிலும் பயணித்து வருகின்றனர்.